For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காட்சிச் சான்றுகளாகும் பழந்திரைப்படங்கள்!

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  'குடும்பம் ஒரு கதம்பம்' என்னும் பழைய திரைப்படம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் படத்தை எப்போது ஒளிபரப்பினாலும் என்னை மறந்து அமர்ந்துவிடுவேன். எஸ்.பி. முத்துராமன் என்னென்னவோ திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். ஆனால், அவருடைய சிறந்த திரைப்படம் இதுதான் என்பது என் கருத்து.

  Classic movies, an evidence for history

  அது விசுவின் படமாயிற்றே என்று சிலர்க்கு நினைவு இருக்கலாம். கதை திரைக்கதை உரையாடல்களை விசு எழுதினார். இயக்கியவர் முத்துராமன்தான். இயக்குநர் துருத்திக்கொண்டு தெரியாத திரைப்படங்களை நல்ல திரைப்படங்கள் என்று சொல்லலாம். அதென்ன நல்ல திரைப்படம் ? ஒரு திரைப்படம் அது எடுத்துக்கொண்ட கதைப்பொருளில் பிசிறில்லாமல் பிழையில்லாமல் அழுத்தமான திரைக்கதையோடு களிநயத்தில் குறைவைக்காமல் சென்றாலே போதும். அது நல்ல திரைப்படம்தான். காட்சியின் விளைவு கலைமகிழ்வாய் இருந்தாலே போதும்தானே ? குடும்பம் ஒரு கதம்பம் என்னும் திரைப்படம் அவ்வகைக்குள் அடங்கும்.

  தொல்காப்பியரைப் படித்தீர்கள் என்றால் அவர் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பார். நிலமும் பொழுதும் முதற்பொருள்கள். அந்நிலத்திற்குரிய மக்களும் அவர்களுடைய பண்புகளும் பழக்கவழக்கங்களும் தொழில்களும் கருப்பொருள்கள். அம்மக்களுக்குரியவை எல்லாம் உரிப்பொருள்கள். இவற்றில் ஒன்றுக்கொன்று மாறாது. நெய்தல் நிலத்தின் மீன்பிடி தொழில் முல்லை நிலத்தில் இருக்க வாய்ப்பில்லை. மருத நிலத்தின் உழவுத்தொழில் பாலையில் நிகழாது. ஆக, ஒவ்வொன்றும் ஒவ்வோரிடத்திற்கு உரியது. மாறித் தோன்ற இயலாது.

  அப்படிப்பட்ட முதல், கரு, உரிப்பொருள்களின் தொகுதிதான் குடும்பம் ஒரு கதம்பம். அத்திரைப்படம் 1981ஆம் ஆண்டின் இறுதியில் வெளியானது. அதனால் அது எடுத்துக்கொண்ட கதை நிகழ்வுக் காலம் 1980 என்று கொள்ளலாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளின் தொடக்கத்தை நீங்கள் துல்லியமாய்க் கணிக்க வேண்டுமென்றால் இப்படத்தைப் பார்க்கலாம். குடும்பங்களில் நிலவிய ஏழ்மை, அப்போதைய பேச்சு முறைகள், காசுக் கணக்குகள், சாலையில் செல்லும் ஓரிரு வண்டிகள், ஆளரவமற்ற சென்னைத் தெருக்கள், நடையுடை மெய்ப்பாடுகள், காதல் தவிப்புகள், நான்கைந்து பொருள்களோடு நடக்கும் குடித்தனங்கள் என்று அத்திரைப்படம் காட்டும் உலகம் அக்காலகட்டத்தை விளக்கும் அருமையான சான்று.

  வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுக்கும் தரகராக வரும் பரமசிவத்திற்கு (எஸ்.வி. சேகர்) ஒருநாள் நல்ல வருமானத்திற்குரிய வாய்ப்பு கிட்டும். குடித்தனம் இருக்க வருபவர் வீட்டுக்குரிய முன்பணம் கொடுக்கப் போகிறார் என்னும்போது 'வீட்டுக்காரர்கிட்ட அரைமாச வாடகை, குடக்கூலிக்காரன்கிட்ட அரைமாச வாடகை' என்பதைத் தரகுக் கூலியாய்ச் சொல்வார். வீட்டை வாடகைக்குப் பிடித்துக் கொடுப்பதில் இப்படியொரு கூலி நிலவியிருக்கிறது.

  பணம் கைக்கு வரும்போது அன்றைய சென்னையின் கீழ் நடுத்தட்டு மக்கள் எப்படிக் கொண்டாடினார்கள் என்பதற்கான தடயத்தையும் ஓர் உரையாடலில் சொல்கின்றார். "நேரா மௌண்ட் ரோடு செல்லாராம்ஸ். உனக்கு இருநூறு ரூபாய்க்குப் புடவை. அன்னபூர்ணாவில் பாசந்தியோடு ஒரு டிபன், புகாரி வாசல்ல மல்லியப்பூ, பிலால் வாசல்ல மீட்டாபான், அலங்கார்ல பாலசந்தர் படம்.... நைட்டு வீட்டுக்கு வந்ததும் டொண்டடொய்ங்க்..." என்கிறார். அன்றைய 'மலைச் சாலை'யின் கடைகள் இப்போதும் இருக்கின்றனவா, தெரியாது. செல்லாராம்ஸ் என்னும் துணிக்கடை இருக்கக்கூடும். புகாரி என்ற பெயரில் ஓரிடமோ உணவு விடுதியோ இருந்திருக்கிறது. அங்கே விற்கும் மல்லிகைப்பூ சென்னையில் புகழ்பெற்றிருக்கிறது. பிலால் வாசலில் மீட்டாபான் என்பது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. அலங்கார் திரையரங்கம்தான் அப்போதைய மலைச்சாலையின் நிலக்குறியாக நின்றது. நான் சென்னையில் காலடி வைத்து அந்நகரை அறியத் தொடங்கியபோதே அத்திரையரங்கைக் கைவிட்டுவிட்டார்கள். இப்போது அங்கே அலங்கார்த் திரையரங்கம் இருந்தததற்கான எந்தச் சுவடும் இல்லை. புதுக்கட்டடங்கள் முளைத்துவிட்டன. ஒரு வரி உரையாடலில் அன்றைய சென்னையின் ஒரு தீற்றலைச் செதுக்க முடிகிறதே, அதுதான் பழைய திரைப்படங்களில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டியது.

  "ஒத்த ரூபா சம்பாதிக்கிறது குதிரைக்கொம்பா இருக்கிற இந்தக் காலத்துல, பதினஞ்சு வயசுப் பொண்ணு, நாலே மாசத்துல ஐந்நூறு ரூபா வரைக்கும் சம்பாதிச்சிருக்கே..." என்று தம் மகளிடம் கடிந்து பேசும் தகப்பனாரின் சொற்களில் அன்றைய பொருளாதாரச் சித்திரம் துலக்கமாகக் கிடைத்துவிடுகிறது.

  வாடகைக் குடித்தன வளாகத்தின் வெவ்வேறு குடும்ப நிலைமைகளில் நாம் காண்பது காலத்தின் ஒரு துண்டு. பிரதாப், சுமலதா பணியாற்றும் அலுவலகக் காட்சிகளைக் காட்டுவார்கள். அப்போதைய அலுவலகங்கள் பலவும் அப்படித்தான் இருந்தன. புத்தகத்திற்குப் போடும் காகித அட்டை நிறத்தில் இருக்கும் அலுவலக உள்தடுப்புப் பலகைகள் அப்போது சென்னையின் எல்லா அலுவலகங்களிலும் இருந்தன. வரிசையாய் மேசை நாற்காலிகள் இடப்பட்ட கூடத்தில் ஆளுக்கொரு கோப்பினைப் புரட்டியபடி இருப்பார்கள். தட்டச்சு இயந்திரம் கட்டாயமாக இடம்பெற்றிருக்கும். இன்று அத்தகைய பணியகங்களை எங்கேயும் காண முடியாது. எல்லாமே காலச் சின்னங்களாகிக் கரைந்துவிட்டன. இன்று ஒரு தேநீர்க் கடைக்குச் செய்யப்படும் கண்ணாடி வேலைப்பாடுகளும் உள்ளழகுத் தொழில்நுட்பங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

  வாய்ப்பு கிடைத்தால் அத்திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை காணுங்கள். ஏதோ பழநினைவுகளோடு தொடர்புடையவர்களுக்கு மட்டுமே அத்திரைப்படத்தில் காண்பதற்கு ஏதேனும் இருக்கலாம் என்று எண்ணாமல் அதன் முதல், கரு, உரிப்பொருள்களை உற்று நோக்குங்கள். அரை நூற்றாண்டுக்கு முந்திய ஒரு நடுத்தரக் குடும்பங்களை அவர்களுடைய காலத்தோடு கண்டு திகைக்க நேரலாம்.

  பழைய திரைப்படங்களைப் பார்ப்பதில் இது ஒரு நன்முறை. சார்லி சாப்ளின் படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு எத்தனையோ பார்வை முறைகள் காரணமாக இருக்கின்றன. அவற்றில் இதுவுமொன்று. சாப்ளின் படங்களின் ஒட்டுமொத்தச் சட்டகத்திலும் காட்டப்படும் ஒவ்வொரு பொருளும் அக்காலத்தின் அடையாளச் சின்னமாக மாறியிருப்பதை உணரலாம். நூறு நூறு ஆண்டுகள் சென்றபின் இத்தகைய திரைப்படங்களில் கிடைக்கும் காட்சிகள்தாம் வரலாற்றை விளங்கிக் கொள்ளவும் உதவக்கூடும்.

  English summary
  Classic movies like Kudumbam Oru Kathambam stands like an evidence for recent history
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X