காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. வடிவேலு நேரில் சந்திப்பாரா?
சென்னை: நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் அதிகம் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ்.
நடிகர் வடிவேலுவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெங்கல் ராவுக்கும் படங்கள் ஏதும் கிடைக்காமல் மிகவும் வறுமையில் வாடி வந்தார்.
இந்நிலையில், சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெங்கல் ராவ்
மொட்டை ராவ் என திரையுலகில் செல்லமாக அழைக்கப்பட்டு காமெடி நடிகரின் முழுப் பெயர் வெங்கல் ராவ். நடிகர் வடிவேலு 'ராவ்'க்கு தமிழ் தெரியலைன்னாலும், நல்லா எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார் என தொடர்ந்து தனது காமெடி காட்சிகளில் அவரை பயன்படுத்தி வந்தார். பேருந்தில் மூக்கில் பஞ்சை வைத்து இவரை படுக்க வைத்து எடுக்கப்பட்ட அந்த நகைச்சுவை காட்சியை மறக்கவே முடியாது. கந்தசாமி, எலி என பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து கலக்கி இருப்பார்.

கம்பு சுத்த தெரியும்
ஆந்திராவில் இளம் வயதிலேயே அப்பாவை இழந்த நிலையில், திருவிழாவில் கம்பு சுத்தி வித்தைக் காட்டி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். ஆனால், அவருடைய மாஸ்டர் சென்னைக்கு வந்ததும், இவரும் அவருடன் கிளம்பி வந்து விட்டார். ஆரம்பத்தில் ஃபைட் யூனியனில் மாஸ்டருடன் சேர்ந்த இவரை பின்னாளில் வடிவேலு அடையாளம் கண்டு கொண்டு இவரை நகைச்சுவை காட்சிகளில் பயன்படுத்த ஆர்மபித்தார். செல்லமாக எப்போதுமே ராவு ராவு என்று தான் கூப்பிடுவாராம்.

வறுமை
முன்னணி நடிகர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு சம்பளம் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் வெங்கல் ராவை போன்ற நடிகர்களுக்கும் கிடைப்பது இல்லை. அதற்கு மேல், வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என தடை விதித்த நிலையில், வெங்கல் ராவுக்கு மொத்தமாகவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டது. அதனால், மீண்டும் வறுமையில் வாடிய அவர், விஜயவாடாவுக்கே சென்று விட்டார்.

மருத்துவமனையில் அனுமதி
வறுமையில் வாடி வந்த நடிகர் வெங்கல் ராவுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உடல் நலம் மிகவும் குன்றி விட்டது. உடனடியாக நேற்று விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்த செய்தி அறிந்ததும் ரசிகர்கள் நல்ல காமெடி நடிகர் சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வடிவேலு சந்திப்பாரா
மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள நடிகர் வடிவேலு, வெங்கல் ராவை நேரில் சந்தித்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வெங்கல் ராவை போன்ற ஏகப்பட்ட கலைஞர்கள் சினிமாவில் நடித்தாலும், கொஞ்ச நாட்கள் கழித்து வறுமைக்கு இரையாகி வருவது மாற்ற முடியாத சோகமாக மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications











