»   »  சண்டமாருதம் திருட்டு சிடி விற்பனை... சிபிசிஐடியில் சரத்குமார், தாணு புகார்

சண்டமாருதம் திருட்டு சிடி விற்பனை... சிபிசிஐடியில் சரத்குமார், தாணு புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சண்டமாருதம் திரைப்பட திருட்டு சி.டி. விற்பனையாவதைத் தடுக்கக் கோரி நடிகர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத்தினர் சி.பி.சி.ஐ.டி. போலீஸில் புகார் அளித்தனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு, துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார் ஆகியோர் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தனர். அங்கு திருட்டு சி.டி. தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமியை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

Complaint on Sandamarutham pirated CD sales

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நடிகர் சரத்குமார் நடித்து அண்மையில் வெளியான "சண்டமாருதம்' திரைப்படம், "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்"ஆகிய திரைப்படங்களில் திருட்டு சி.டி. மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. இதனால் அந்தத் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள், படங்களில் நடித்த கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இணைய தளங்களிலும் இந்தத் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனால் தயாரிப்பாளர் நஷ்டமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சில சுயநலக்காரர்களால் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதால், பல தயாரிப்பாளர்கள் திரைப்படத்துறையை விட்டு விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலையால் திரைப்படத் துறை முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, திருட்டு சி.டி. தயாரிப்போரையும், விற்போரையும் கண்டறிந்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கலைப்புலி தாணு

இதன் பின்னர் தாணு செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருட்டு சி.டி.யை தயாரிப்போரையும், விற்போரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு எங்களது சங்கத்தின் மூலம் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை மாவட்டந்தோறும் நியமித்துள்ளோம். இவர்கள் திருட்டு சி.டி. தயாரிப்போர், விற்போர் குறித்து தகவல் சேகரித்து காவல்துறைக்கு அளித்து வருகின்றனர். அந்த தகவலின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனி இயக்கம்

மேலும் திருட்டு சி.டி.யை ஒழிக்க காவல் துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். அதேநேரத்தில் திருட்டு சி.டி. பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆந்திரத்தில் உள்ளதுபோல தமிழகத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினரையும் சேர்த்து ஒரு இயக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

சரத்குமார்

நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக காவல்துறை திருட்டு சி.டி.க்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இன்னும் விரைவான, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் திருட்டு சி.டி.யை முழுமையாக ஒழிக்க முடியும்," என்றார்.

English summary
Sarath Kumar and Kalaipuli Thaanu have lodged complaint on Sandamarutham movie video piracy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil