twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமகால அரசியலை செமையாகக் கலாய்த்துத் தள்ளிய 'தரமணி'!

    |

    சென்னை: தமிழ் சினிமாவுக்கென கட்டமைக்கப்பட்டிருக்கும் எந்த வரையறைக்குள்ளும் அடைபடாமல், சமூகத்திற்குக் காட்ட விரும்பும் சினிமாவை நேர்மையாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ராம். அதற்காக, அவர் கையாண்டிருக்கும் உத்தி நம் தமிழ் சினிமாவுக்குப் புதுசு.

    கதாநாயகன், கதாநாயகியைச் சுற்றிக் கதையைப் பிண்ணி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையோ, தரமணி எனும் ஒரு பகுதியையோ மட்டும் பற்றிப் பேசுகிற படம் அல்ல 'தரமணி'. கதாபாத்திரங்களை ஒரு கருவியாக மட்டும் வைத்து, அதற்கான நியாயத்தை ரசிகர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிற முயற்சியைத்தான் செய்திருக்கிறார் ராம். தரமணியை உலகமயமாக்கலின் குறியீடாகக் காட்டுகிறார்.

    'இது தவறு' 'இது சரி' என அவர் எதையும் கோடிட்டுக் காட்டவில்லை. அந்த எழுதுகோலை ரசிகர்களின் கையில் திணித்திருப்பதற்காகவே ஸ்பெஷல் பாராட்டு. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீண்டநாட்களுக்குப் பிறகு வெளியாகி சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'தரமணி.

     அட்வைஸ் சொல்கிறாரா ராம்?

    அட்வைஸ் சொல்கிறாரா ராம்?

    உலகமயமாக்கலுக்குப் பழகி சுதந்திர வாழ்வை வாழ எத்தனிக்கும் பெண்ணுக்கும், புதிய சிந்தனைகளுக்கும், பிற்போக்குத்தனத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் ஆணுக்கும் இடையேயான காதல், அவர்கள் சந்திக்கும் பிரச்னை, அவர்களின் மனஓட்டங்கள்... இவைதான் கதை. 'பிரபுநாத்' வசந்த் ரவியையும் 'ஆல்தியா ஜான்சன்' ஆண்ட்ரியாவையும் கருவிகளாக வைத்து நமக்குக் கதை சொல்கிறார் ராம். ராமின் அகராதியில் ஒரு படைப்பு என்பது ஒரு சமூகத்திற்கு நடுவே உரையாடலைத் தூண்டவேண்டும் என்பதே. அதை இந்த முறையும் செம்மையாகச் செய்திருக்கிறார்.

     அரசியல் பகடி செய்த டீஸர், போஸ்டர்கள் :

    அரசியல் பகடி செய்த டீஸர், போஸ்டர்கள் :

    சென்சாரில் படத்தின் சில காட்சிகள் வெட்டப்பட, 'A' சர்ட்டிஃபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை எனக் காட்சிகளைச் சேர்த்திருக்கிறார். இப்படியாக, முத்தக்காட்சிகள் கூட இல்லாத படத்திற்கு 'A' சர்ட்டிஃபிகேட் அளித்த சென்சார் போர்டை கலாய்த்து சென்சாரில் மியூட் செய்யப்படாத ஒலியை மியூட் செய்தும், அங்கீகரிக்கப்படாத வார்த்தைகளைத் தெளிவாகச் சொல்லியும் மூன்றாவது டீஸரை வெளியிட்டார். சில நாட்களுக்கு முன்பிருந்தே, வெளியான 'தரமணி' படத்தின் போஸ்டர்களில் சமூகப் பிரச்னைகளைப் பேசியதும் சர்ச்சையைக் கிளப்பியது. திரையரங்குகளில் அரசு விளம்பரங்கள் திரையிடப்படும்போது, திரைப்பட விளம்பரங்களில் நாட்டு நடப்புகளைச் சொல்லலாம்தான் என எள்ளலுடன் வெளிவந்தன ஒவ்வொரு போஸ்டர்களும்.

     சமகால அரசியல் நிகழ்வுகளும், 'தரமணி' போஸ்டர்களும் :

    சமகால அரசியல் நிகழ்வுகளும், 'தரமணி' போஸ்டர்களும் :

    நீட் தேர்வு, கீழடி விவகாரம், ஆதார் கார்டு கட்டாயம் எனும் மத்திய அரசின் அறிவிப்பு, மெரினா போராட்டம், நகரமயமாக்கலால் மரங்கள் அழிப்பு, கதிராமங்கலம் பிரச்னை, குண்டர் சட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கைது, ஆதிக்கம் செலுத்தும் சென்சார் போர்டு என வகைதொகையில்லாமல் கலாய்த்துத் தள்ளியிருந்தார் இயக்குநர் ராம். ஆகவே, படத்திலும் இதைப்போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசியிருப்பாரோ எனும் க்யூரியாசிட்டியும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

     'தரமணி' படத்தில் இயக்குநர் ராம் கையாண்ட சமூகப் பிரச்னைகள் :

    'தரமணி' படத்தில் இயக்குநர் ராம் கையாண்ட சமூகப் பிரச்னைகள் :

    போஸ்டர்களைப் போலவே, படத்திலும் நேரடியாகவும், குறியீடாகவும் பல சமூகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார் ராம். ஆம், அவரே படம் நெடுக வாய்ஸ் ஓவரில் பேசுகிறார். பேசுகிறார் எனச் சொல்வதை விட உரையாடுகிறார் எனச் சொல்வது சாலத் தகும். ஏனெனில், அவர் தனது கருத்துகளைத் திணிக்க முயலவில்லை. அவர் சொல்வதைப் போலவே, ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போல சமகால அரசியலைப் பகிர்ந்து, கருத்து ரீதியாக நம்முடன் உரையாட விரும்புகிறார்.

     தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் விவகாரம் :

    தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் விவகாரம் :

    இலங்கைக் கடற்படையினர், தங்களது நாட்டு கிரிக்கெட் அணியின் மீதுகொண்ட பற்றினால், அந்த அணி ஒவ்வொருமுறை இந்தியாவுடன் தோற்கும்போதும், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டியதாகச் சுட்டுக் கொல்லப்படுவதாகவும், படகுகள் கைப்பற்றப்படுவதாகவும் காட்டியது யோசிக்க வைக்கும் அரசியல் காட்சி.

     சுரண்டப்படும் வடமாநிலத் தொழிலாளர்கள் :

    சுரண்டப்படும் வடமாநிலத் தொழிலாளர்கள் :

    குறைந்த சம்பளத்தில் அதிக வேலையை வாங்கிக் கொண்டு அவர்களது உழைப்பைச் சுரண்டும் அரசாங்கத்தைச் சீண்டும் அதே காட்சியில், ஆடி கார் வைத்திருக்கும் கொழுத்த கணவான்கள் பொதுச் சமூகத்தில் விளைவிக்கும் சட்ட ஒழுங்கு மீறலையும் போகிறபோக்கில் சொல்லி இருக்கிறார்.

     டீமானிட்டைசேஷன் பூதம் :

    டீமானிட்டைசேஷன் பூதம் :

    கதையின் போக்கினூடே, மத்திய அரசின் நள்ளிரவில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்புநீக்க நடவடிக்கைகளால் (டீமானிட்டைசேஷன்) அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை ஒரே வாக்கியத்தில் சர்காஸமாகச் சொல்லி க்ளாப்ஸ் அள்ளுகிறார்.

     ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் :

    ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் :

    உலகமயமாக்கலின் விளைவால், வானுயர வளர்ந்துநிற்கிற கட்டிடங்களைக் காட்டியபடி நமக்கு எழவேண்டிய கேள்விகளையும் சுட்டிக்காட்டுகிறார் ராம். தனது இரை காணாமல் போன கதையைத் தனது இணையிடம் சொல்லத் தேடுவதாகவும், ஒரு காலத்தில் தனக்கு விசாலமாக இருந்த வானவெளியின் இடையிடையே கட்டிடங்கள் கட்டப்பட்டதால் தனது இனம் அழிந்ததைக் கண்ணாடிச் சுவரில் மோதிச் செத்துப்போகும் புறாவைக் காட்டி உணர்த்தி இருப்பார்.

     வாட்ஸ்-அப் ஆடியோ வீடியோக்கள் :

    வாட்ஸ்-அப் ஆடியோ வீடியோக்கள் :

    அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் ஆபாச ஒலி, ஒளிக் குறிப்புகளுக்குப் பின்னான கதைகளைச் சொல்லி உஷார்படுத்துவதாகச் சில படங்கள் வரும். இந்தப் படத்திலும் மேலோட்டமாகப் பார்த்தால் அதே போலப் பெண்களை இழிவாகச் சித்தரிக்கிற காட்சிகளும் வருவதாகத் தோன்றும். அதை உடைக்கும்விதமாக, அழகம்பெருமாள் பேசும் வசனங்கள் வருகின்றன. அந்த வசனங்கள் தவறு செய்த பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிற பொதுச்
    சமூகத்திற்குப் பெரிய சூடு.

     மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் போடப்பட்ட முடிச்சு :

    மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் போடப்பட்ட முடிச்சு :

    ராம் சொல்வதைப் போல படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஒரு பின்கதை இருக்கிறது. அதை ரசிகர்களின் யோசனைக்கே விட்டுவிடுகிறார். நாயகனின் கதாபாத்திர ஆக்கம் - பிற்போக்குத் தனத்தை நோக்கிச் சுழற்றப்பட்ட சாட்டை. ராமின் வாய்ஸ் ஓவர் - அரசியல் கலாய். 'தரமணி' - கேள்விகளுக்கும், உரையாடல்களுக்குமான களத்தை ஏற்படுத்தும் படைப்பு.

    English summary
    Contemporary politics spoken in Taramani movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X