Coolie Box Office: கூலி வசூல் பஞ்சாயத்து.. பொய்யான வசூலை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹீர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நித்யா ராம், கண்ணா ரவி மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வார் 2 படத்துடன் போட்டிப் போட்ட கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து சில சோஷியல் மீடியா பக்கங்களில் தவறான தகவல்கள் பரவி வருவதாக ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் அலார்ட் செய்துள்ளது.
மேலும், கூலி படத்தின் வசூல் குறித்து பொய்யான தகவல்களை பரப்பும் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூலி படத்தின் ஓவர்சீஸ் உரிமையை வாங்கிய ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் எச்சரித்துள்ளது.

கூலி திரைப்படம் 500 கோடி வசூலை கடந்ததாக சில சோஷியல் மீடியா பக்கங்கள் போஸ்டர்களை வெளியிட்டது தான் இந்த சர்ச்சைக்கு காரணமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் எச்சரிக்கை: 'கூலி' திரைப்படத்தின் உலகளாவிய வசூல் குறித்து சில குழுக்களும், அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதாக ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், உண்மையான வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர்களும், ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் (வெளிநாட்டு விநியோகஸ்தர்) நிறுவனமும் மட்டுமே வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவும் மற்ற பாக்ஸ் ஆபீஸ் நம்பர்கள் நம்பகத்தன்மையற்றவை, அவை உண்மையாக கருதப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இட்டுக்கட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடுகளைப் பரப்புவது, திரைப்படம், அதன் பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய நடவடிக்கைகளை நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
திரைப்படத்தின் மீதான எந்தவொரு திட்டமிட்ட திரித்தல், கையாளுதல் அல்லது அவதூறு பரப்பும் முயற்சிக்கும் எதிராக அவதூறு மற்றும் நிதி இழப்பீடுகளுக்கான கோரிக்கைகள் உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் எச்சரித்துள்ளது.
திரைப்பட விநியோகஸ்தர்கள், பங்குதாரர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் நம்பகமான அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் மட்டுமே தகவல்களை சரிபார்க்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. பார்வையாளர்களின் அன்பும் ஆதரவுமே உண்மையான வெற்றியாகும், தவறான தகவல் பரப்பும் எந்தவொரு பிரச்சாரமும் இதை மறைக்க முடியாது என்று ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது.
"சினிமா என்பது பார்வையாளர்களுக்கானது, குறிப்பிட்ட சிலரின் நலன்களுக்கானது அல்ல. நேர்மையுடனும் நியாயத்துடனும் திரைப்படங்களை கொண்டாடுவோம்" என்று ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வசூல் பஞ்சாயத்து: சன் பிக்சர்ஸ் மற்றும் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டன. அதன் பின்னர், அவர்களே அமைதியான நிலையில், சில சோஷியல் மீடியா பக்கங்கள் மற்றும் சில பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் என்கிற பெயரில் உலா வருபவர்கள் போலியான வசூல் கணக்கை தெரிவித்து வந்த நிலையில், தான் இந்த பஞ்சாயத்து வெடித்துள்ளது எனக் கூறுகின்றனர். கூலி படத்தின் இதுவரையிலான அதிகாரப்பூர்வ உலக வசூலை ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை: கடந்த வாரம் தமிழ் சினிமாவில் பெரிதாக படங்கள் வரவில்லை. இந்திரா படமும் வந்த வேகத்துடன் பெரிதாக ஓடாமல் போய் விட்டது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினமான இன்று கூலி படம் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











