சிவகார்த்திகேயன் தொடர்ந்த சம்பள பாக்கி வழக்கு...கோர்ட் போட்ட அசத்தல் உத்தரவு
சென்னை : மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி வழங்கக் கோரி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் அசத்தலான உத்தரவை கோர்ட் இன்று பிறப்பித்துள்ளது. இதனால் இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். டான், அயலான், எஸ்கே 20 என வரிசையாக இவரது படங்கள் ரிலீசாக உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு
சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், 2018 ம் ஆண்டு நடித்த மிஸ்டர் லோக்கல் படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் பேசினார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. 2019 ம் ஆண்டு படம் ரிலீசான நிலையில், இதுவரை 11 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, ரூ.4 கோடி பாக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சம்பள பாக்கி வழங்க உத்தரவிடக் கோரியும், அதுவரை அவரின் தயாரிப்பில் வெளியாக உள்ள பத்து தல, சியான் 61, ரீபெல் படங்களை இணையதளம் உள்ளிட்டவைகளில் வெளியிட தடை விதிக்க கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையை மறைக்கிறார்
இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்பில் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் பல உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் விநியோகஸ்தர்கள் பிரச்சனை குறித்து வழக்கில் எந்த தகவலும் அளிக்கவில்லை எனவும், எனவே அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.

தடைக்கு நோ சொன்ன கோர்ட்
இந்த வழக்கு முதலில் மார்ச் 31 ம் தேதிக்கும் பிறகு ஏப்ரல் 25 ம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை நியமித்து பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். அதேசமயம், ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தார்.

பிரச்சனை முடிவுக்கு வருமா
சமரசம் பேசி பிரச்சனையை முடிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் - ஞானவேல்ராஜா இடையேயான சம்பள பாக்கி பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞானவேல்ராஜா சம்பள பாக்கியை தருவாரா அல்லது சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா தரப்பு நியாயங்களை ஏற்றுக் கொண்டு, இறங்கி வருவாரா என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications