For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நாச்சியாரும் பாலாவின் பிற்போக்குப் புரட்சியும்... #Naachiyaar

  By Shankar
  |
  #Naachiyar Review #நாச்சியார் விமர்சனம் #Jyothika #GVPrakash

  பாலாவின் நாச்சியார் படத்துக்கு சாதகமான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. சில எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. அவற்றில் ஒன்று பாடலாசிரியர் முருகன் மந்திரத்தினுடையது.

  அந்த விமர்சனம்:

  "படத்தை படமாக பாருங்கள்...

  என்று எவரும் அட்வைச வராதீர்கள். நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். என்னால் அப்படிப்பார்க்க முடியாது. இந்தியா என்கிற பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொரு அசைவும் அரசியல்தான். சினிமாவிலும் உண்டு அரசியல். சமூக மனநிலையை பிரதிபலிக்கும் அரசியல். சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை தக்க வைக்கும் அரசியல். கலாச்சாரக்குப்பைகளுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல்.

  Critical comments on Naachiyaar

  நாச்சியாருக்கு வருவோம்...

  கதை நாயகன்... அப்பா பெயர் தெரியாதவன். அப்படி என்றால்... அவன் யாருக்கோ எப்படியோ பிறந்தவன்... அப்போ அம்மா? அம்மா தான் இல்லையே. பாட்டி மட்டும். கிடைக்கிற வேலையை செய்கிற மைனர் கூலி.

  கதைநாயகி... அங்கேயும் இதேதான். அப்பா, மாமன் உண்டு. ஆனா அம்மா கிடையாது. வீட்டு வேலைக்காரி. மைனர்.

  கதைக்களம்... அய்யே இன்னாமே அத்தப்போய் கேட்டுனு இருக்கிற... ஆமா குப்பம் தான் சென்னைக்குப்பம்.

  உடை... அழுக்கு... பாவம்....

  சார்ந்திருக்கும் சமூகம் அல்லது சாதி .... ( நீங்களே முடிவு செய்யலாம்.)

  சாதியக் கூடவாடா சொல்வ நீ... என்று பொங்கத் தோன்றினால்... சித்தப்பு பாரதிராசா உள்ளிட்டவர்கள் எடுத்த மதுரை படங்களைப்பற்றி ஒரு நிமிசம் யோசிங்க. ஆண்டவர் கமல் படத்தில் தொடங்கி அண்ணன் விமலின் கடைசிப்படம் வரைக்கும் வெளிப்படையே சாதி... சாதீ. நேரடியாக அல்லது நேரடி தவிர்த்த புரியும்படியான கதாபாத்திர, கதைக்கள, கலாச்சார, மொழி சித்தரிப்புகள்.

  Critical comments on Naachiyaar

  மேற்சொன்ன இரண்டு பேருக்கும் பார்த்தவுடன் நேசம் வந்துவிடுகிறது. பழகியவுடன் காதல் வருகிறது. ஒருநாள் சந்தர்ப்பம் கிடைக்கையில் காமமும் வந்தவிடுகிறது. பொண்ணு கர்ப்பம்.

  ரெண்டு பேரும் மைனர். அதனால் இதைக் கற்பழிப்பாகவே எடுத்துக்கொள்வார்களாம். பையன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகிறார். பொண்ணை, நாச்சியார் தன் வீட்டுக்கு அழைத்துப்போகிறார். அஸிஸ்டெண்ட் கமிஷனர் நாச்சியார். அவர் தான் இந்த வழக்கோட முன்னமே தொடர்புடையவர்.

  ரைட்டு... ஓகே... குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தையின் டி.என்.ஏ.வும் காதலிச்ச பையன்(ஹீரோ) டி.என்.ஏ.வும் ஒண்ணில்லன்னு சொல்றாங்க.

  நாச்சியாளுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. விசாரிக்கப்போனா... நிஜமான கற்பழிப்பு அங்கே தான் வருது. அதை விவரிப்பதெல்லாம் கொடுமை... கொடுமை. ச்சை. நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

  Critical comments on Naachiyaar

  கடைசியா என்னாச்சு... குழந்தை பிறந்தாச்சு. பட் அப்பன் நீயில்லைன்னு அந்தப்பையன் கிட்ட சொல்லணும். அந்தப்பொண்ணுகிட்ட உன் காதலன் உன் குழந்தைக்கு அப்பன் இல்லண்ணு சொல்லணும். பின்னால தெரிஞ்சா பிரச்சினை இல்லையா? அதுக்காக.. தொலை நோக்குப் பார்வை.

  பையன் கிட்ட சொல்லியாச்சு. ஆனா பொண்ணுகிட்ட சொல்லல. பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சோன்னு கதறி அழுற பையன், தெரியாது இன்னும் சொல்லலேன்னு தெரிஞ்ச உடனே... சமாதானமாகி சமர்த்துப்பிள்ளை ஆகிறான். பெரிய புரட்சியாளனாக மாறுகிறான்.

  "என் பிள்ளைன்னு நெனைச்சுத்தான அவ பெத்தா, அப்ப நான் தானே அப்பன்"... யாராலோ தன் காதலி வயிற்றில் கருவான குழந்தைக்கு தான் அப்பனாக மாறுகிறான். மிக மகிழ்ச்சியாக. இந்த புரட்சி அந்த பொண்ணுக்கு அந்தத் தாய்க்கு தெரியாது.

  சூப்பர்ல. வெரி குட் கேரக்டர். இப்படி ஒரு கதாபத்திரம் ஜீ.வி.பிரகாஷ்-க்கு பெரிய வைரக்கல், மணி மகுடம்... என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். அந்தக்கடைசி நிமிட மன மாற்றத்திற்காக.. அதை ஏற்றுக்கொண்டதற்காக மட்டுமே.... இந்தப்படத்தை ஆஹா ஓஹோவென்று பாராட்டுகிறார்கள் இன்னும் சிலர்.

  நல்ல விசயம்தான். ஜீ.வி.பிரகாஷ் நடித்திருக்கும் காத்து என்கிற காத்தவராயன் கதாபாத்திரம்... ஏதோ ஒரு வகையில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்கிறது. அது காதலின் அதீத வெளிப்பாடு, காதலி மீதான அன்பின் மிகுதி என்றும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

  ரைட்... அந்த கேரக்டர் நீங்களாக இருந்தால் அப்படி செய்வீர்களா? அந்த கேரக்டர் உங்கள் அண்ணன், தம்பியாக, உங்கள் மகனாக, உங்கள் நண்பனாக, உங்கள் சாதிக்காரனாக இருந்தால் அப்படி செய்வார்களா? அப்படி செய்ய சம்மதிப்பீர்களா? அதை நீங்கள் பெருந்தன்மையோடு பாராட்டி வரவேற்பீர்களா?

  Critical comments on Naachiyaar

  ஏன் அவர்கள் இருவரும்... சென்னை குப்பத்தை சேர்ந்த கதாபாத்திரங்களாக இருக்கவேண்டும். ஏன் அவர்கள் கோயமுத்தூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர்களாகவோ, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்களாகவோ இருக்கக்கூடாதா?

  உங்கள் புரட்சியை உங்கள் புரட்சி கதாபாத்திரங்களை மேற்குறிப்பிட்ட ஊர்க்காரர்களாக சித்தரித்திருந்தால் உங்களை கொண்டாடி இருப்பேன் பாலா அவர்களே. மேற்குறிப்பிட்ட ஊர்களின் கதாபாத்திரங்களாக சித்தரிக்க மாட்டீர்கள் என்று நான் அறிவேன். ஏனெனில் அவர்கள் எல்லாம் கற்பு, கலாச்சாரக் காவலர்கள்... கற்பின் புனிதம் காக்கிற ஆண்மை கொண்டவர்களாக மட்டுமே சித்தரிப்பீர்கள்.

  ஏனெனில்... அந்த ஊர் கதாபாத்திரங்கள் எல்லாம்.. காதலி கற்பழிக்கப்பட்டால்... அவளை காணா பொணமாக கூறுபோட்டு கொன்றேனும் கற்பைக்காப்பாற்றும் புனித பருத்தி வீரப்பரம்பரைகள்...

  ஆனால் ஒரு விசயம் உண்மை... நீங்கள் சொல்லி இருப்பது போலவே அடித்தட்டு மக்கள் தான் இந்த பெண்ணுடல் புனித அரசியலை உடைப்பார்கள். சமூக மாற்றத்தை முன்னெடுப்பார்கள். புதிய சமத்துவ சமூகத்தை படைப்பார்கள். அதை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

  Critical comments on Naachiyaar

  சாமி பற்றி ரெண்டு டயலாக்... ஆணவப்படுகொலை பற்றி ஒரு பஞ்ச்... ப்பா.. வச்சிட்டா முடிஞ்சி போச்சா... இந்த லட்சணத்துல ஜெயலலிதா போட்டோவுக்கும் போற போக்குல துதி பாடுறீங்க...

  ஆணவப்படுகொலை பற்றி அச்சு அசலாக ஒரு படத்தை உள்ளது உள்ளபடி வேறவரையும் விட உங்களால் மிக சிறப்பாக எடுக்க முடியும் பாலா. ஆனால் எடுக்கும் விருப்பமும் துணிச்சலும் உங்களுக்கு இருக்கிறதா என்பதே கேள்வி.

  நாச்சியார் கேரக்டர்...

  அய்யோ... அய்யோ... டிபிக்கல் போலீஸ்...பட் பெண் போலீஸ்...

  வேற வேற...

  போலீஸ் ஸ்டேஷன்ல யாரையாச்சும் பிடிச்சி வச்சிருந்தாங்கன்னா என்ன ஏதுன்னு கேட்காம அவங்களே ஒரு நிமிசத்துல ஒரு முடிவுக்கு வரும் அதிரடி அறிவாளி...

  அந்த அறிவுல ஒருத்தனை அள்ளிட்டு வந்து தலைகீழ தொங்கவிட்டு அடியோ அடின்னு அடிச்சு தொவைப்பாங்க...

  அடுத்த நிமிசமே அவங்க அறிவு வண்டவாளத்துல ஏறும்... எப்டி?

  அடிபட்டவன் ஜட்டியோட ஒரு ஓரமா சிதைஞ்சு கெடக்கிறப்போ... அவனுக்கு வேண்டப்பட்ட ஒரு பெண் வந்து அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்வாங்க.

  ப்ச்.. வட போச்சே.. கதறக்கதற சிதைச்சி போட்ருப்பாங்களே ஒருத்தன்... அவனை விடுதலை பண்ணிருவாங்களே...

  ரைட்டு... வேற வேற

  நாச்சியார் ஐ.பி.எஸ்... அஸிஸ்டெண்ட் கமிஷனர்... பெண்...

  பட் கூடவே இருக்கிற ஆண் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் நாச்சியா..ன்னு பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். ஏன் மேடம்னு சொல்ல மாட்டாரா?

  பெண்ணியம்... ஆணியம்?

  யப்பா.. அவங்க சொந்தக்காரங்களா இருப்பாங்கப்பா... ம்க்கூம்...

  இன்ஸ்பெக்டர் பேரு... ஃபெரோஸ் கான்.

  (ஒருவேளை அவர் பெரிய தயாரிப்பாளர் அப்டிங்கிறதுனால அவர் ஜோதிகாவை மேடம்னு கூப்பிட யோசிச்சிருப்பாரோ... இல்லை நாச்சியா நாச்சியான்னு அந்த வார்த்தையை திரும்ப திரும்ப கேட்க பாலாவுக்கு ஆசையோ?. )

  இன்னும் சிலர் கூட நாச்சியான்னு கூப்பிட்டதாகவே ஞாபகம்..

  அக்கறையோட வீட்டுக்கு கர்ப்பமான அந்த பொண்ணைக் கூட்டிட்டுப் போவாங்களாம்.. பாசமா பாத்துப்பாங்களாம்... குழந்தை பொறக்குமாம்... பட், அந்த ஏழைப்பொண்ணை ஷோபாவுல உட்கார விட மாட்டாங்களாம்...

  ப்ச்... என்னப்பா இது பைத்தியக்காரத்தனமான பேச்சு... குழந்தை வச்சிக்க வசதியாக சம்மணம் போட்டு உட்கார தரை தானே சௌகர்யம்...

  ஓ..

  அப்போ வசதியா இருக்கிறவங்க குழந்தை பெத்துக்கிட்டா கூட... வசதிக்காக தரையில தான் உட்காருவாங்களோ... இது தெரியாம போச்சே...

  வேற வேற...

  நாச்சியாரால நேர்மையா அந்த கற்பழிப்பு குற்றவாளி பணக்காரனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க முடியாமப்போகும்...

  சோ... அவங்க அன் அபிஷியலா சட்டம், நீதியை எல்லாம் தன் கையில எடுத்துப்பாங்க... அவங்களே தனியாளா தண்டனையும் கொடுப்பாங்க....

  ஓ... சூப்பர்ல....

  மண்ணாங்கட்டி....

  ஒரு ஐ.பி.எஸ் ஆபிசர்... ஒரு அஸிஸ்டெண்ட் கமிஷனர்.... நாச்சியாரால கூட ஒரு குற்றவாளியை சட்டத்தின் படி, நீதியை நம்பி தண்டிக்க முடியலேன்னா அப்ப கஞ்சிக்கே வழியில்லாத கூட்டம்... பொருளாதார அடிப்படையில சாதி அடுக்குல ரொம்ப கீழ இருக்கிறவங்க நிலைமை...

  காவல்துறையால முடியாது...

  சட்டத்தால முடியாது...

  நீதித்துறையால முடியாது...

  தானே களத்தில் இறங்குனா தான் கொடியவர்களை தண்டிக்க முடியும்னு சொல்றது.... காவல்துறையை சட்டத்தை நீதித்துறையை நம்பாத ஒரு மனநிலையை மத்தவங்களுக்கு பரப்புர ஒரு பிரச்சாரம் இல்லையா...

  ம்ம்ம்...

  இவ்ளோ தான் நாச்சியார் கேரக்க்க்க்க்க்டர்ர்ர்!

  அப்புறம் படத்துல ஒரு நீதிமன்றம் வரும்... நீதிபதி ஒருத்தர் இருப்பார். அவர் பேசுற பாஷைய வச்சே நீங்க அவா யாருன்னு கண்டுபிடிக்கலாம். அங்கேயே ஒரு வக்கீலும் இருப்பார். அவா பேசுற பாஷையை வச்சும் அவா யாருன்னு நீங்க கண்டுபிடிச்சிரலாம்.

  அந்த வக்கீல் அவா, அந்த நீதிபதி அவாவுக்கு பலபேரு முன்னிலையிலே இப்டி தீர்ப்பு சொல்லுங்கன்னு அட்வைஸ் பண்ணுவா.

  இது போதாதுன்னு அவா அவா தான்னு உங்களுக்கு தெரியாம போயிடக்கூடாது என்பதற்காக நீதிபதி ஐயாவே வடகலையா தென்கலையான்னு கேள்வி கேப்பா. அவாளும் ரெண்டையும் விட்டுக்கொடுக்காம அப்பா வடகலை... அம்மா தென்கலை ன்னு சொல்வா.

  இது நல்ல கலை(?!)யா இருக்கே..

  எந்த நூற்றாண்டில் இருக்கீங்க பாலா... சென்னை உயர்நீதிமன்றத்தின் வக்கீல்கள் பற்றி எல்லாம் உங்களுக்கு ஒண்ணும் தெரியாதா?

  இந்த இந்த வேலையை இவா இவா.. அவா அவா தான் செய்ய முடியும்கிற காலம் மாறி எவ்வளவோ நாளாச்சு... அவ்வளவு ஏன் உங்க சொந்தக்காரங்கள்ல பல பேர் கூட அவா செய்ற வேலையில இருக்கக்கூடும்...

  பின்ன ஏன் இப்டி... இந்த பிற்போக்குத்தனமான திணிப்பு...

  இப்படியாக நாச்சியார்... என் பார்வையில்...

  பாலாவும் நானும்...

  பாலாவின் ஆரம்பகால வெறிபிடித்த ரசிகன் நான்... பாலாவிடம் உதவி இயக்குநராக சேர்வதற்காக நான் பாலாவிற்கு எழுதிய கடிதம் ஒன்று இன்றும் என்னிடம் இருக்கிறது. ஆனால், இன்று அதே பாலாவால் எனக்கு இளையராஜா மீது கூட கோபம் வந்து தொலைத்திருக்கிறது.

  அந்த ஆரம்பகால சினிமா ரசிகன் வெறும் சினிமா ரசிகனாக மட்டுமே இருந்தான். இந்தியா என்கிற நாடு, அதன் கலாச்சாரக்குப்பைகள் பற்றி, அதன் சமூக அரசியல் பற்றி எதுவும் தெரியாத அப்பாவி, சராசரி சினிமா ரசிகன். ஏன், இந்த தன்னுரை என்றால் பாலா மீது ஆரம்பத்தில் இருந்தே நான் விமர்சனம் வைப்பவன் என்று நீங்களாக முடிவு செய்யக்கூடாது என்பதற்காக.

  இப்போது பாலா என்கிற பிற்போக்குத்தனமான ஒரு சினிமாக்காரரை என்னால் கொண்டாட முடியவில்லை. ஏனெனில், பாலா தன் படங்களில் காட்சிப்படுத்தும் சம்பவங்கள், கருத்தியல்கள் எல்லாம் தனக்கே தெரியாமல் செய்வதாக இருக்க வேண்டும், அல்லது வேண்டுமென்றே திணிப்பதாக இருக்க வேண்டும். இதில், எது என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பிரச்சினை.

  - முருகன் மந்திரம்

  English summary
  Here is some critical comments of lyricist Murugan Manthiram on Bala's Naachiyaar.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X