For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  குத்துற குத்துல காது தான் கிழியுது; மெலடிகளுக்கு மவுசு குறைகிறதா? எஸ்பிபி சரணின் ஆதங்கம் சரிதானா?

  |

  சென்னை : மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபகாலங்களாக தமிழ் திரையிசைப் பாடல்களுக்கான வரவேற்புகள் மாறிவிட்டன. மெலடி பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதிற்கு கிடைத்த இனிமை இப்போது இல்லை என அடித்துக் கூறலாம். சென்னையின் மழைக்காலம் போல பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தாத குத்துப் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுவதன் பின்னணி என்ன.?

  விஜய்க்கு சிரிக்க மட்டும்தான் தெரியும்.. இளமைக்காலம், நண்பர்கள் குறித்து பகிர்ந்த ஷோபா சந்திரசேகர்! விஜய்க்கு சிரிக்க மட்டும்தான் தெரியும்.. இளமைக்காலம், நண்பர்கள் குறித்து பகிர்ந்த ஷோபா சந்திரசேகர்!

  இசையும் வாழ்வும்

  இசையும் வாழ்வும்

  சினிமா மட்டும் என்றில்லாமல் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டென கலந்துள்ளது இசையும் பாடல்களும். அதேபோல் உலகம் முழுமைக்கும் மனிதர்களின் மகிழ்ச்சியில் மகத்தான பங்களிப்பைச் செய்து வருவது இசையே என்பதிலும் மாற்றுக் கருத்துகள் இல்லை. அப்படி உலகிலுள்ள அனைவராலும் கொண்டாடப்படுவது இசையே.!

  சினிமாவில் இசை

  சினிமாவில் இசை

  பேசும் படங்களாக அதாவது வசனங்களே இல்லாமல் உருவான படங்களில் கூட இசை இல்லாமல் இருக்காது. முதலில் கதையின் தேவைக்கேற்ப பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த இசை, காலப்போக்கில் பாடல் வடிவங்களில் ரசிகர்களின் மனங்களை வென்றது. அதில் பெரும்பாலான பாடல்கள் மெல்லிசை வடிவில் மெலடியாக இடம்பெறத் துவங்கின.

  நாட்டுப்புற கூத்தும் தெம்மாங்கு இசையும்

  நாட்டுப்புற கூத்தும் தெம்மாங்கு இசையும்

  கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் இலக்கியப் பின்னணியில் காவியத்தன்மையோடு பாடல்கள் இடம்பெற்றன. கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி - ராமமூர்த்தி என பல ஜாம்பவான்கள் இசையை முத்தாய்ப்பாக கடைந்தெடுப்பதில் வல்லவர்களாக இருந்தனர். இந்தப்போக்கு இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் முற்றிலும் மாறத் தொடங்கியது. மக்களின் மொழியில் அதாவது நாட்டுப்புற வடிவிலும், தெம்மாங்கு இசை பின்னணியிலும் ராஜா மக்களின் இசையை விருந்து படைத்தார்.

  இசைப் புயலும் திரையிசையின் உருமாற்றமும்

  இசைப் புயலும் திரையிசையின் உருமாற்றமும்

  1992ல் ஏ.ஆர். ரஹ்மானின் வருகை தமிழ் திரையிசையை உலகம் முழுக்க எட்டு கால் பாய்ச்சலில் ஓடச் செய்தது. மரபிசையில் கொஞ்சம் நவீனத்தோடு துல்லியமான இசைக் கோர்வைகளை படரச் செய்த ஏ.ஆர். ரஹ்மான், பல புதுமைகளை கொண்டுவந்தார். அதன் நீட்சியை யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்கள் கையில் எடுத்தனர்.

  ஓல்ட் இஸ் கோல்ட்

  ஓல்ட் இஸ் கோல்ட்

  இன்னொரு பக்கம் 1990களிலும் 2000ம் ஆண்டு தொடக்கங்களிலும் வித்யாசாகர், பரத்வாஜ், சிற்பி, டி. இமான் போன்றவர்கள் தனி ஆவர்த்தனங்களை தமிழ்த் திரையிசைக்கு வழங்கினர். அதேபோல் தேவா தனது கானா பாடல்கள், மெலடிகள் மூலம் ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்தார்.

  அப்பவும் இருந்துச்சு... ஆனால்!

  அப்பவும் இருந்துச்சு... ஆனால்!

  தமிழில் காவிய திரைப்படங்கள் வெளியான நாட்கள் முதல் எல்லா காலங்களிலும் குத்துப் பாடல்கள் இருந்தன. கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் என அனைவருமே குத்துப் பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், மெலடிகளுக்கான முக்கியத்துவத்தை அவர்கள் விடவே இல்லை. கானா பாடல்களுக்கு என புகழ்பெற்ற தேவாவும் ஏராளமான மெலடி பாடல்களை கொடுத்துள்ளார். ஆனால், தற்போது குத்துப் பாடல்கள் மட்டுமே அதிகமாக வெளியாவது ஒருவித சலிப்பை ஏற்படுத்துவதாக இசை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  தப்புத் தாளங்கள்

  தப்புத் தாளங்கள்

  தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக ஒரேயொரு எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமெண்ட் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இசைத்துறை இழிவாகிப் போனது. அதன் காரணமாக புதிது புதிதாக அறிமுகமானவர்களில் பலர் படத்திற்கு நாலு குத்துப் பாட்டுகளைப் போட்டு, ரசிகர்களை அலறவிட்டனர், இசை ஆர்வலர்களின் ரசனையில் பேயறைந்தார் போல் தப்புத் தாளங்களை தாரை வார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

  யார் தான் பொறுப்பு?

  யார் தான் பொறுப்பு?

  தயாரிப்பாளருக்கு குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து லாபம் சம்பாதிக்க வேண்டும். இயக்குநருக்கு தயாரிப்பாளரையும் ஹீரோவையும் சூப்பர் ஹிட் கொடுத்து குஷிப்படுத்த வேண்டும். அதுக்கு ஒரேவழி மியூசிக் டைரக்டர் அடிக்குற அடியில, அம்மாவோட அடிவயித்துல இருந்தே ரசிகர்கள் டான்ஸ் ஆடிட்டு தியேட்டருக்கு வரணும். இப்படியாக சீரழிந்தது மெலடி பாடல்களின் வரவும் அதற்கிருந்த வரவேற்புகளும் குறைந்துவிட்டதாக இசை வல்லுநர்கள் புலம்புகின்றனர்.

  பரிதாபத்தில் பாடகர்கள்

  பரிதாபத்தில் பாடகர்கள்

  குத்துப் பாடல்களை பாட சிங்கர்ஸ் வேண்டுமா என்ன?, யாராக இருந்தாலும் நன்றாக கத்திப் கூப்பாடு போட்டுவிட்டால் போதும். பாட்டும் செம்ம ஹிட்டு, ரிலீஸான ஒரே நாள்ல பல மில்லியன் வீவ்ஸ்ஸும் கன்ஃபார்ம். அதனால், பாடகர்களின் நிலையோ இன்னும் வேதனையாகிப் போனது. எந்த வகையான பாடல்களைப் பாடினாலும், எல்லா பாடகர்களுக்கும் பெயர் வாங்கி கொடுப்பது மெலடிகளாக தான் இருக்கும். இன்று அதற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதாக ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

  இப்ப புலம்பி என்ன புண்ணியம்?

  இப்ப புலம்பி என்ன புண்ணியம்?

  சமீபத்தில் விஜய் டீவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.பி.பி. சரண் இதுகுறித்து கவலை தெரிவித்திருந்தார். மெலடியில் இருக்கும் இனிமை இன்றைய ரசிகர்களுக்குப் புரியவில்லை. அதனால் நல்ல இசைக்கும், இசை கலைஞர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல் இப்போதெல்லாம் பாடல்களை எழுத கவிஞர்களோ பாடலாசிரியர்களோ தேவையில்லை என்ற நிலை வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் எப்படியான வார்த்தைகளை போட்டும் அல்லது வார்த்தைகளே இல்லாமலும் பாடல்கள் எழுதலாம் என சினிமா ஆர்வலர்கள் உண்மையை புட்டு புட்டு வைக்கின்றனர்.

  எங்கள மட்டும் ஏன்யா இப்படி குத்துறீங்க?

  எங்கள மட்டும் ஏன்யா இப்படி குத்துறீங்க?

  அதேநேரம் குத்துப் பாடல்களை ஒரேடியாக ஓரம் கட்டிவிடவும் முடியாது. சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக ஒன்றை புறக்கணிப்பது அறமும் இல்லை. சோகம், துக்கம், வலிகளை கடந்து ஒருவனை மீட்டெடுப்பதில் குத்துப் பாடல்களுக்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் கிடையாது. ஆனாலும், அதற்கான அளவீடுகள் தற்போதைய தமிழ்த் திரையிசையில் இல்லையென்பதே உண்மை என்றும். குத்துப் பாடல்களுக்கு சமமாக மெலடிகளும் வெளியாக வேண்டும் எனவும் இசை ஆர்வலர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆயிரம் தான் குத்துப் பாடல்கள் கொண்டாட்டங்களை கொடுத்தாலும், ரசிகர்களை தாலாட்டுவது என்னவோ மெலடி பாடல்கள் தான்.

  English summary
  Audience does not like melody songs? மெலடி பாடல்களை விட குத்து பாடல்களுக்கே ரசிகர்களிடம் அதிகளவில் ஆதரவுகள் கிடைப்பதாக இசை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பின்னணிப் பாடகரும், மறைந்த எஸ்.பி.பியின் மகனுமான எஸ்.பி.பி. சரண் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X