பெயரை மாற்றியதில் இருந்தே ரவி மோகனுக்கு எதுவுமே சரியில்லையே பாஸ்.. புதுசா வந்த பெரிய சிக்கல்!
சென்னை: சந்தானத்தை வைத்து டிக்கிலோனா எனும் காமெடி டைம் டிராவல் படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் 'BRO CODE' படத்துக்கு திடீரென மது பானம் நிறுவனம் மூலமாக சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் தற்போது 'பராசக்தி' மற்றும் 'கராத்தே பாபு' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதில், சில படங்களை தயாரித்தும் இயக்கியும் வருகிறார்.

'டிக்கிலோனா' படத்தை இயக்கிய கார்த்திக் யோகி, ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் 'BRO CODE' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டைட்டிலுக்கு வந்த தடை: இந்நிலையில், 'BRO CODE' என்ற பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், தங்களுடைய தயாரிப்புப் பெயரின் பதிப்புரிமையைக் கொண்டுள்ளதால், திரைப்படத்திற்கு அந்தப் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 'BRO CODE' என்ற தலைப்பைப் படத்திற்குப் பயன்படுத்த ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே எல்ஐசி டைட்டில் சிக்கல்: பிரபலமான ஒரு வணிகப்பெயரை திரைப்படத்திற்குப் பயன்படுத்துவது வர்த்தக முத்திரை விதிமீறல் என இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம் வாதிட்டது. நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதால், திரைப்படத்தின் விளம்பரம் மற்றும் வெளியீட்டிற்கு 'BRO CODE' தலைப்பைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்கும் LIC டைட்டிலை வைக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், LIK என டைட்டில் மாற்றப்பட்டது. அதே போல ரவி மோகன் படத்தின் டைட்டிலும் சற்றே மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











