90ஸ் கிட்ஸ் காதுல புகை.. ஜென் Z கிட்ஸ் தியேட்டரில் தெறிக்கவிடுறாங்க.. Demon Slayer இவ்வளவு வசூலா?
சென்னை: ஹருவோ சொடோசாகி இயக்கத்தில் வெளியான 'டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா - தி மூவி: இன்பினிட்டி கேஸ்டில்' அனிமேஷன் திரைப்படம் முதல் நாளில் பிரமாண்டமான வசூலைக் குவித்து பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பியுள்ளது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், இந்தியாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களின் வசூலுக்கு ஆப்பு அடித்து வருகிறது.
பொம்மை படத்தை ஏன் டா இப்படி போய் தியேட்டரில் பார்க்குறீங்க என 90ஸ் கிட்ஸ் பொறாமைப்பட்டு காதுல புகை வரும் அளவுக்கு ஜென் Z கிட்ஸ் அனிம் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

பிவிஆர் தியேட்டரில் எல்லாம் ரஜினி, அஜித், விஜய் படத்தையே அமைதியாக பார்க்கும் கூட்டம் டீமன் ஸ்லேயர் படத்தை கத்தி கூச்சலிட்டு பார்க்கும் அலப்பறை பார்த்து பலரும் ஷாக் ஆகியுள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் இந்த வாரம் இந்த படம் பெரியளவில் கல்லா கட்டி வருகிறது.
ஜப்பானிய அனிமேஷன் திரைப்படம்: ஜப்பானிய அனிமேஷன் திரைப்படமான டீமன் ஸ்லெயர், வெளியான முதல் நாளில் இந்திய பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இது ஜப்பானிய மொழியில் மட்டுமல்லாமல், ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. ஷூயீஷா, அனிப்ளக்ஸ், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ், டோஹோ பிக்சர்ஸ் மற்றும் க்ரஞ்சி ரோல் ஆகியவை இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
உலகளவில் மிகப்பெரிய வெற்றி: 155 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம், 'டீமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யைபா' அனிமேஷன் தொலைக்காட்சித் தொடரின் நான்காவது சீசனின் நேரடித் தொடர்ச்சியாகும். ஜப்பானில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 12 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. உலகளவில் நான்காவது அதிக வசூல் செய்த ஜப்பானிய திரைப்படமாகவும், 2025 இல் ஜப்பானில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் இது உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் இத்தனை கோடி வசூலா?: இந்தியாவில், நாட்சுகி ஹனே நடித்த இந்தத் திரைப்படம் முதல் நாளில் ₹12.6 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. சாக்னிக் வெப்சைட் இந்தத் தகவலை வெளியிட்டது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஆங்கிலம் மற்றும் இந்திப் பதிப்புகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், கொச்சி மற்றும் சென்னையில் அதிக ஆக்கிரமிப்பு விகிதங்கள் பதிவாகியுள்ளன.
இத்திரைப்படம் செப்டம்பர் 12 அன்று ஜப்பானியப் பதிப்பில் 39.61% ஒட்டுமொத்த ஆக்கிரமிப்பைப் பதிவு செய்தது. நாட்சுகி ஹனே, அகரி கிடோ, யோஷ்சுகு மட்சுயோகா, ஹிரோ ஷிமோனோ, தகாஹிரோ சகுராய், மற்றும் அகிரா இஷிதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
என்ன கதை: "முசான் கிபுட்சுஜிக்கு எதிரான இறுதிப் போர் தொடங்கும் போது, டீமன் ஸ்லேயர் படைப்பிரிவு இன்ஃபினிட்டி கோட்டைக்குள் நுழைகிறது. அங்கு டான்ஜிரோ, நெசுகோ மற்றும் ஹஷிரா ஆகியோர் பயங்கரமான உயர் தர பேய்களை எதிர்கொள்கிறார்கள்" என்பதுதான் படத்தின் முக்கிய கதைக்களம்.
2016-20 ஆம் ஆண்டு வெளியான "இன்ஃபினிட்டி கேஸ்டில்" மங்கா தொடரை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், ஹாலிவுட் அல்லாத திரைப்படங்களில் இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. முதல் நாள் முன்பதிவிலேயே சுஜுமே மற்றும் ஜுஜுட்சு கைசன் 0 ஆகிய படங்களின் வசூலை முறியடித்துள்ளது.
முன்பதிவில் ₹10 கோடி வசூலித்த சுஜுமே மற்றும் ஜுஜுட்சு கைசன் 0 படங்களை விட, 'டீமன் ஸ்லேயர்: இன்பினிட்டி கேஸ்டில்' திரைப்படம் முதல் நாளுக்கு முன்பே ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்று சாக்னிக் அறிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications











