இளையராஜாவுக்காக இணையும் தனுஷ், சிவகார்த்திகேயன்… வெற்றிமாறனின் விடுதலை விழாவில் ட்விஸ்ட்
சென்னை: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
விடுதலை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான இயக்குநர் வெற்றிமாறன் சூப்பர் ப்ளான் ஒன்றை போட்டு வைத்துள்ளாராம்.

எதிர்பார்ப்பில் விடுதலை
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என தரமான படங்களை தமிழ்த் திரையுலகிற்கு வழங்கியுள்ள வெற்றிமாறன், இப்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கும் இந்தப் படம், இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. விடுதலை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் இசை விருந்து
வெற்றிமாறன் எப்போதுமே ஜிவி பிரகாஷுடன் மட்டுமே கூட்டணி வைக்கும் நிலையில், வடசென்னை படத்தில் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்தார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக விடுதலை படத்திற்காக இளையராஜாவுடன் கூட்டணி வைத்துள்ளார். இதனால், விடுதலை படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் இளையராஜா ரசிகர்களுக்கு அட்டகாசமான இசை விருந்து காத்திருக்கிறதாம்.

ஜனவரியில் ஆடியோ வெளியீடு
விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவை ஜனவரி 17ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம். இதில், விடுதலை படத்தின் பாடல்களை இளையராஜா மேடையில் இசைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவின் மற்ற ஹிட் பாடல்களும் அந்த மேடையில் இசைக்கப்படவுள்ளதாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இளையராஜாவின் இசை கச்சேரிக்கு நடுவில் விடுதலை பட ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம்.

தனுஷ் - சிவகார்த்திகேயன்
விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, சூரி, கெளதம் மேனன் உட்பட விடுதலை படக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்களுடன் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வைக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். சிவகார்த்திகேயன் ஆரம்ப கால சினிமா பயணத்தில் சப்போர்ட்டாக இருந்தது தனுஷ் தான். ஆனால், கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. அதிலிருந்து இருவருமே சந்தித்துக்கொள்வது கிடையாது. இந்நிலையில், விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷும் சிவகார்த்திகேயனும் பங்கேற்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











