Idli Kadai Blue Sattai Maran: இட்லி கடையை நம்பி பார்க்கலாம்.. உசுருக்கு ஆபத்தில்லை.. ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், " படத்தின் தொடக்கத்தில் தனுஷ் வெளிநாட்டில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் வேலை பார்க்கிறார். அந்த ஹோட்டலின் உரிமையாளராக சத்யராஜ் உள்ளார். அவரது மகன் அருண் விஜய். மகள் ஷாலினி பாண்டே, ஷாலினி பாண்டேவும் தனுஷும் காதலிக்கிறார்கள். தனுஷ் திறமையான வேலைக்காரராக இருப்பதால், அந்தஸ்து பற்றி யோசிக்காமல் தனுஷ் மற்றும் ஷாலினி பாண்டேவுக்கு திருமணம் செய்து வைக்க சத்யராஜ் ஒத்துக் கொள்கிறார்.
ஆனால் அருண் விஜய்க்கு இதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. இப்படியான சூழலில் கல்யாண தேதி வருகிறது. அந்த நேரத்தில் தனுஷின் அப்பா தவறி விடுகிறார். இதனால் அவர் தனது தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்ய சொந்த ஊருக்கு வருகிறார். ஊருக்கு வந்த பின்னர் ஒரு விஷயத்தை உணர்கிறார். தனது அப்பா அம்மாவின் கடைசி காலத்தில் தான் இல்லாமல் போய் விட்டோமே என்று உணர்கிறார். தனது அப்பா மதிக்கக்கூடிய இட்லி கடையை எடுத்து நடத்தலாமா என்று யோசிக்கிறார்.

இந்த நேரத்தில், கல்யாண தேதி நெருங்கிவிட்டது, நீ கிளம்பி வா, இல்லையென்றால் நமது பெயர் கெட்டுப் போய்விடும் என்று அன்பாக கூப்பிட்டுப் பார்க்கிறார்கள், மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆனால் தனுஷ் வரமுடியாது என்று சொல்லி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அருண் விஜய், தனுஷை பழி வாங்க வேண்டும் நினைக்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை.
படத்தின் கதை: படத்தை மேம்போக்காகப் பார்த்தால் ஏதோ வில்லன் - கதாநாயகன் கதை போலத் தெரியலாம். ஆனால், ஒரு குழந்தையை நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்த்தால் அந்த குழந்தை எப்படி வளரும், பாசத்தைக் காட்டுகிறேன் என்ற பெயரில் நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்காமல் ஊதாரியாக வளர்த்தால் அந்த குழந்தை எப்படி வளரும் என்பதையும் சொல்லும் படமாக உள்ளது. படத்தின் முதல் பாதி மிகவும் உண்மைக்கு நெருக்கமாக எடுத்து இருந்தார்கள். பல நல்ல காட்சிகளும் இருந்தது. உதாரணத்திற்கு இளவரசு தனது அம்மாவைப் போய்ப் பார்க்கும் காட்சியும் இளவரசு கதாபாத்திரம் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

நல்ல காட்சிகள்: அதேபோல் நித்யா மேனன் ஒரு காட்சியில் இட்லி கடையை ஏன் விற்றீர்கள் என்று சண்டை போடுவார், அந்த காட்சியும் நன்றாக இருந்தது. ராஜ்கிரன் இறந்த போது அவரது வீட்டில் மாடு கன்னு குட்டி போடும், ராஜ்கிரண் தான் மீண்டும் வந்து பிறந்துள்ளார் என்று நினைப்பார்கள். அந்த காட்சியும் நன்றாக இருந்தது. இட்லி கடைக்கு ரெகுலராக வந்து சாப்பிடும் ஒரு கதாபாத்திரம் உள்ளது, அந்த பெரியவரின் கதாபாத்திரம் மிகவும் நன்றாகவே இருந்தது. சத்யராஜின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக எழுதி இருந்தார்கள். ஒரு தொழிலதிபராக என்ன முடிவெடுக்கிறார், அப்பாவாக என்ன முடிவெடுக்கிறார் என்ற காட்சிகள் எல்லாம் சூப்பர்.
நல்ல இயக்கம்: இட்லி கடையை பெரிய அளவில் எடுத்துக் கொண்டு போகலாம் என்று தனுஷ் கேட்கும்போது ராஜ்கிரன் முடியாது என்று சொல்லும் காட்சி நன்றாக இருந்தது. படத்திலேயே மிகவும் குழப்பமான கதாபாத்திரம் என்றால் அது தனுஷ் கதாபாத்திரம்தான். இரண்டாம் பாதியில் தனுஷை பழிவாங்குகிறேன் என்று அருண் விஜய் செய்யும் விஷயங்கள் எல்லாம் மிகவும் மூன்றாம் தரமாக இருந்தது. படத்தில் சில பல குறைகள் இருந்தாலும் ஒரு இயக்குநராக தனுஷிடம் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. வழக்கமாக தனுஷ் படம் என்றாலே இளைஞர்களுக்கான படமாக இருக்கும். ஆனால் இந்த படம் குடும்ப ரசிகர்களுக்கான படம். உசுருக்கு ஆபத்து இல்லைனு சொல்ற மாதிரி ஓ.கே. ரகமான படமாக இருக்கிறது" என்று தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











