வடிவேலு சொன்னதும் ஓடி வந்த தனுஷ் மேனேஜர்.. ’இட்லி கடை’யை காப்பாத்த பக்கா பிளான்.. பூதாகரமாகுதே!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் திரைப்படங்கள் 3 வருடங்களுக்கு மேல் எல்லாம் வெற்றிகரமாக ஓடிய நிலை மாறி, பல திரைப்படங்கள் வெள்ளி விழா படங்களாக மாறின. அதன் பின்னர் வெற்றிப் படங்கள் என்றால் 100 நாள் ஓடிய படங்கள் என்றாகின. அது 50 ஆகவும், 25 ஆகவும் குறைந்து வந்த நிலையில், தற்போது முதல் 3 நாட்களை கடப்பதே சவாலாக உள்ளது.
எதிர்மறை விமர்சனங்களால் படங்கள் தோல்வியடைவது குறித்து திரையுலகினர் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், நடிகர் வடிவேலு யூடியூபர்கள் மற்றும் சில நடிகர்களின் சதி செயல்கள் குறித்து பகிரங்கமாகப் புகார் தெரிவித்திருப்பது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 பேர் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டிருக்கின்றனர் என வடிவேலு பேசிய நிலையில், உடனடியாக சோஷியல் மீடியாவில் அதற்கு ஆதரவாக நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் போட்ட பதிவு பலரது கவனத்தை திருப்பியுள்ளது.
பொதுக்குழு கூட்டம்: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடிகர் வடிவேலுவின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. யூடியூபர்கள் விமர்சனம் என்ற பெயரில் திட்டமிட்டு படங்களைத் தோல்வியடையச் செய்கிறார்கள் என்றும், இதில் சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பங்கு இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

10 பேர் சேர்ந்து அழிக்கிறாங்க: பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வடிவேலு, "பணத்தைப் பெற்றுக்கொண்டு படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களை வெளியிட வைக்கிறார்கள். சுமார் 10 பேர் இணைந்து சினிமாவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். யூடியூப் தளத்தைப் பயன்படுத்தி திரைக்கலைஞர்களைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றனர். இவர்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், போர்க்கால அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை தேவை," என்றார்.
திரைத்துறையில் உள்ள சிறிய மற்றும் பெரிய கலைஞர்கள் என யாரையும் பாராமல், நடிகர்களைத் தவறாகப் பேசும் யூடியூபர்களுக்கு நடிகர் சங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்புவோருக்கு சிலர் உடந்தையாக இருப்பதாகவும், தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக போட்டி நடிகர்களின் படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கித் தோல்வியடையச் செய்வதாகவும் வடிவேலு குறிப்பிட்டார்.
இந்த அவதூறு பரப்புபவர்களை நடிகர் சங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய வடிவேலு, "அவர்களைத் தூங்க விடாமல் நடிகர்கள் ஒன்றிணைந்து நெருக்கடி கொடுக்க வேண்டும். படத்தின் முதல் நாளிலேயே ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சனங்களை வெளியிடுவதை முறைப்படுத்த வேண்டும்," என்றார். மேலும், மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்த அவர், விரைவில் அவரது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
பூச்சி முருகன் உறுதி: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூச்சி முருகன், "வடிவேலு சொன்னது நியாயமானதுதான். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்கள் சங்க உறுப்பினர்களைத் தவறாகப் பேசும் நபர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கிறோம். தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது. இதுவரை 3-4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
விஷால் காட்டம்: நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வடிவேல் அண்ணன் சொன்னாரோ இல்லையோ, சக நடிகர்கள் பாதிக்கப்படுவதற்காக அவர் குரல் கொடுத்துள்ளார். இதைக் கூட வைத்து வீடியோ போடுவார்கள். எங்களை வைத்து அவர்கள் சம்பாதிக்கிறார்கள். நாங்கள் சுயமாக உழைத்து சம்பாதிக்கிறோம். அவர்கள் எங்களைப் பற்றிப் பேசி சம்பாதிக்கிறார்கள். அவர்களைத் திருத்த முடியாது, சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்," என்று குறிப்பிட்டார்.
படுக்கையறை வரை சென்று: நடிகர் நாசர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "விமர்சனங்கள் இருக்கலாம். அறிவுபூர்வமான விமர்சனங்கள் துறை வளர்ச்சிக்கு உதவும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை, படுக்கை அறை வரை சென்று விமர்சிப்பது யாருக்கும் உதவாது. சரியாக நடிக்கவில்லை என்றால் சொல்லலாம், அதை விட்டுவிட்டு இப்படி அவதூறாகப் பேசுவது மனதிற்கு வருத்தமாக உள்ளது," என்றார்.
தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் ட்வீட்: இந்நிலையில், நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ், இட்லி கடை படத்தில் தனுஷ் நல்லவராக இருக்கார் என்றும் ரொம்ப நல்லவனாக இருக்க வேண்டாம் என்றும் பேசினாரே, அவரே தான். மூத்த நடிகர் வடிவேலுவே இப்படியொரு முக்கிய பிரச்சனை குறித்து பேசியுள்ளார் என்றால், இதன் தீவிரத்தை உணர வெண்டும். சினிமா வாழ வேண்டும் என்றால் உடனடி தீர்வு எடுத்தாக வேண்டும் என ட்வீட் போட்டுள்ளார். நடிகர் தனுஷ் முன்கூட்டியே சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிடுவது குறித்து பேசிய நிலையில், திரைத்துறையினர் நெகட்டிவ் விமர்சனத்துக்கு எதிரான சாட்டையை சுழற்ற காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











