திரையரங்குகளில் 25வது நாளை எட்டிய திருச்சிற்றம்பலம்.. தமிழகத்தில் படத்தோட வசூல் எவ்வளவு தெரியுமா!
சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது திருச்சிற்றம்பலம் படம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ஆண் -பெண் நட்பை கதைக்களமாக கொண்டு வெளியானது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷின் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

திருச்சிற்றம்பலம் படம்
நடிகர் தனுஷின் ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி க்ரே மேன் என அடுத்தடுத்த நான்கு படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இதையடுத்து அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர்களை உற்சாகமூட்டும் வகையில் கடந்த 18ம் தேதி தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

நித்யா மேனன் கேரக்டர்
ஆண் -பெண் நட்பை வைத்து அதிகமான படங்கள் வந்துள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது திருச்சிற்றம்பலம் படம். இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனனின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. குறிப்பாக நித்யா மேனன் தனது கேரக்டரில் பின்னி பெடலெடுத்துள்ளார்.

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி
மேலும் படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. அவரவர், தங்களது கேரக்டருக்கு தகுந்த நடிப்பை வழங்கியுள்ளனர். முன்னதாக யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் இணைந்த தனுஷ் -மித்ரன் ஜவஹர் கூட்டணி இந்தப் படத்திலும் தங்களை நிரூபித்துள்ளது.

தனுஷ் -பாரதிராஜா கெமிஸ்ட்ரி
படத்தில் தனுஷ் -பாரதிராஜா இடையிலான கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ப்ரெண்ட்லியான தாத்தா நமக்கில்லையே என்று இளம் தலைமுறையினர் ஏங்கும் வகையில் இந்த கேரக்டர் அமைந்துள்ளது. பிரகாஷ் ராஜும் தனது மிடுக்கான நடிப்பை வழக்கம்போல சிறப்பாக வழங்கியுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருவதும் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி வருகிறது. தனுஷின் அடுத்தப்படமான நானே வருவேன் இந்த மாதம் 30ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நானே வருவேன் படத்தின் பாடல்
இந்தப் படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படைப்புடன் மோத கங்கணம் கட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

25வது நாள் கொண்டாட்டம்
நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் 25வது நாள் கொண்டாட்டம் மற்றும் நானே வருவேன் முதல் பாடல் வெளியீடு என இன்றைய தினத்தை கொண்டாடி மகிழ ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மணிரத்னத்துடன் மோதும் தனுஷ்?
தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்துடன் மோத தனுஷ் தயாராகி வருகிறார் என்பதை இன்றைய தினம் இந்த டபுள் ட்ரீட்டும் காட்டுகிறது. இன்றைய தினம் பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியாகவுள்ள நிலையில், தனுஷின் நானே வருவேன் படத்தின் பாடலும், திருச்சிற்றம்பலம் 25ம் தேதி கொண்டாட்டமும் சேர்ந்து வந்துள்ளது.

தமிழகத்தில் மிரட்டலான வசூல்
இந்நிலையில் கடந்த 24 நாட்களில் திருச்சிற்றம்பலம் படத்தின் தமிழக வசூல் மட்டுமே 84 கோடி ரூபாயை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











