நானே வருவேன் கொடுத்த சூப்பர் கம்பேக்... தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் மீண்டும் தொடங்கும் ராயன்?
சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள நானே வருவேன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
இந்நிலையில், நானே வருவேன் படம் சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளதால் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைவதாக சொல்லப்படுகிறது.

தில்லாக வந்த நானே வருவேன்
மொத்த திரையுலகமும் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து இருந்தது. ஆனால், அதைபற்றியெல்லாம் கவலைப்படாத தனுஷ், தனது நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வனுக்கு ஒருநாள் முன்னதாக ரிலீஸ் செய்தார். செல்வராகவன் இயக்கத்தில் தாணு தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியானது. ஹாரர் திரில்லர் ஜானரில் செல்வராகவனின் வித்தியாசமான மேக்கிங்கில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

திரும்பவும் கூட்டணி வைக்கலாமா?
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்கு பிறகு தனுஷ் - செல்வராகவன் காம்போவில் வெளியான நானே வருவேன் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் கதையை தனுஷே எழுதியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நானே வருவேன் இதுவரை 10 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஹீரோ, வில்லன் என தனுஷின் அசுரத்தனமான ஆக்டிங் கை கொடுத்தாலும், திரைக்கதை சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் நானே வருவேன் கொடுத்த எனர்ஜியில் தனுஷ், செல்வராகவன் மீண்டும் உடனடியாக ஒரு படம் பண்ண உள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் உருவாகிறதா ராயன்
'நானே வருவேன்' படத்துக்கு முன்னர் தனுஷை வைத்து ராயன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் செல்வராகவன். கேங்ஸ்டர் ஜானரில் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ராயன் திரைப்படம், ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே டிராப் ஆனது. அதேநேரம் ராயனுக்கு பதிலாக தான் 'நானே வருவேன்' படம் உருவானது. இந்நிலையில், ஏற்கனவே டிராப்பான 'ராயன்' படத்தை மீண்டும் இயக்கவுள்ளாராம் செல்வராகவன். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தாணு தயாரிப்பில் ராயன்?
தற்போது வெளியாகியுள்ள தனுஷின் 'நானே வருவேன்' படத்தை தாணு தயாரித்திருந்தார். படம் வெளியானதும் சூப்பர் ஹிட் என இயக்குநர் செல்வராகவனை பாராட்டி மாலை அணிவித்திருந்தார். இந்நிலையில், தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் அடுத்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிற 'ராயன்' படத்தையும் தாணுவே தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பெரிய பட்ஜெட் காரணமாக டிராப் ஆன ராயன் படத்தை தாணு பிரம்மாண்டமாக தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராயன் படத்தின் புதிய அப்டேட்டால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











