கோடி ரூபாய் கடன்.. பொண்ணுங்க சப்போர்ட்.. பசங்க 1 பைசா தரமாட்டாங்க... தனுஷ் தந்தைக்கு இந்த நிலைமையா?
சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா தமிழ் சினிமாவில் சில படங்களை இயக்கியிருக்கிறார். அவரால் மிகப்பெரிய ஸ்டாராக வர முடியாவிட்டாலும் அவருடைய இரண்டு மகன்களும் இந்திய சினிமாவில் தனித்த அடையாளத்தை பெற்றிருக்கிறார்கள். அதிலும் இரண்டாவது மகன் தனுஷ் நடிப்பு, இயக்கம் என கலக்கிவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார் கஸ்தூரி ராஜா.
என் ராசாவின் மனசிலே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கஸ்தூரி ராஜா. அந்தப் படத்துக்கு பிறகு வீர தாலாட்டு, ஆத்தா உன் கோயிலிலே என தொடர்ந்து படங்களை இயக்கினாலும்; அவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவில் அவரால் வளர முடியவில்லை. குடும்பத்தில் பொருளாதார கஷ்டமும் தலை விரித்தாடியது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் தனது இளைய மகன் தனுஷை துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தார்.
இரண்டு மகன்களும் சூப்பர்: அந்தப் படத்தின் கதை என்னமோ மூத்த மகன் செல்வராகவனுடையதுதான். இயக்கியது கஸ்தூரி ராஜா. படம் ஓரளவுக்கு அடையாளத்தை பெற்றது. அடுத்ததாக செல்வராகவன் இயக்குநராக அறிமுகமாகி தனுஷை ஹீரோவாக வைத்து காதல்கொண்டேன் படம் வெளியானது. படம் தமிழ்நாட்டில் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அந்தப் படத்திலிருந்து இரண்டு பேருமே அடையாளப்பட்டார்கள்.

இட்லி கடை: தனுஷ் ஒருபக்கமும், செல்வராகவன் ஒருபக்கமும் அசுர வளர்ச்சி அடைந்தார்கள். இதனால் அந்தக் குடும்பமும் வறுமை நிலையிலிருந்து மேலே வந்தது. இப்போது இந்தியாவின் டாப் ஆக்டர்களில் தனுஷும், டாப் இயக்குநர்களில் செல்வாவும் இருக்கிறார்கள். தனுஷ் நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். நேற்றுகூட அவரது இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது.
மகள்களும் செட்டில்: கஸ்தூரி ராஜாவுக்கு இரண்டு மகன்கள் தவிர்த்து இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். அவர்களும் மருத்துவ துறையில் பெயர் எடுத்து செட்டில் ஆகிவிட்டார்கள். மேலும் தனது சகோதரி மகன் பவிஷையும் தனுஷ் ஹீரோவாக இன்ட்ரோ செய்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கஸ்தூரி ராஜா அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கஸ்தூரி ராஜா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நான் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான அப்பா. மகன்களை அடித்து வெளுத்துவிடுவேன். மகள்களை தொடமாட்டேன். அவர்கள்தான் எனக்கு ரொம்பவே சப்போர்ட். ஒரு அப்பாவாக நான் எனது பிள்ளைகளுக்கு கோடி கணக்கில் கடன்தான் சேர்த்து வைத்தேன். அதனை அவர்கள்தான் அடைத்தார்கள். நான் எங்கு சென்றாலும் எனக்கான செலவை மகன்கள்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஒரு பைசா கொடுப்பதில்லை: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பட ரிலீஸ் நாளன்றுகூட எனக்கு ஒரு 35 லட்சம் ரூபாய்க்கு கமிட்மெண்ட் வந்தது. அதை தெரிந்துகொண்ட தனுஷ் என்னிடம், 'கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கலாமே ப்பா' என்று மட்டும் சொல்லிவிட்டு அந்தப் பணத்தை கொடுத்தார். அவர்களை பொறுத்தவரை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள் பணம் தருகிறோம். சினிமா தொடர்பாக ஒரு பைசாகூட தரமாட்டோம் என்பதுதான் நிலைப்பாடு" என்றார்.


Click it and Unblock the Notifications











