Idli Kadai Day 6 Collection - தனுஷின் இட்லி கடையில் கூட்டம் குறைந்துவிட்டதே.. ஆறாவது நாள் வசூல் தெரியுமா?
சென்னை: தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான இட்லி கடை திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இந்தப் படம் மாறிவிட்டது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் ஆறாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்திவந்த தனுஷ்; தனது தந்தை, சகோதரர் வழியில் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார். அவர் இயக்கிய முதல் மூன்று படங்களான பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகியவைகளில் பவர் பாண்டி மட்டுமே ஹிட்டடித்திருந்தது. சூழல் இப்படி இருக்க இப்போது அவர் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.
பிரமாண்ட ரிலீஸ்: நடிப்பிலும் இயக்கத்திலும் தனுஷ் ஒரு ஹிட் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அவருக்கு நல்லதொரு ஹிட் என்றால் சில வருடங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம்தான். அதற்கு பிறகு அவர் நடித்த கேப்டன் மில்லர், ராயன், குபேரா ஆகியவைகள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை தரவில்லை. எனவே இட்லி கடையில் பலமாக கல்லா கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை உருவாக்கினார். கடந்த ஒன்றாம் தேதி படமானது தியேட்டர்களில் ரிலீஸானது.

நல்ல ரெஸ்பான்ஸ்: பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். அவர்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. தனது சிறு வயதில் சொந்த ஊரில் பார்த்த சம்பவங்கள், மனிதர்களை வைத்து இந்தக் கதையை அவர் எழுதியிருந்தார். நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஃபீல் குட் படம் பார்த்த உணர்வு இருந்ததாகவும்; படத்தை பார்த்த பிறகு சொந்த ஊர் நியாபகம் வந்துவிட்டதாகவும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
விமர்சனமும் உண்டுதான்: அதேசமயம் படத்தில் கூறப்பட்டிருக்கும் சில கருத்துக்கள் மட்டும்தான் உடன்படவில்லை; அதேபோல் இரண்டாவது பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. எது எப்படியோ இந்தப் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாற்றிவிட்டார்கள் ரசிகர்கள். விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிய சேதாரத்தை சந்திக்கவில்லை படம். முதல் நாளில் 11 கோடி ரூபாய்வரை படம் வசூலித்ததாக Sacnilk இணையதளம் தெரிவித்திருந்தது. இதனால் தனுஷின் ரசிகர்கள் ஹேப்பியானார்கள்.
குறைந்த வசூல்: நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சூழலில் இரண்டாம் தேதி வெளியான காந்தாரா படத்துக்கும் கூட்டம் செல்ல ஆரம்பித்தது. இருப்பினும் இட்லி கடையின் வசூலுக்கு முதல் ஐந்து நாட்களுக்கு பெரிய பிரச்னை இல்லை. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்து அதே Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று இட்லி கடை மொத்தமே 1.60 கோடி ரூபாய்தான் வசூலித்திருப்பதாக கூறியுள்ளது. மொத்தம் ஆறு நாட்களில் இப்படம் 40.20 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். காந்தாராவின் வருகைதான் இட்லி கடையில் கூட்டம் குறைய காரணமாக இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











