Idly Kadai: குபேரா நிலைமை தான் இட்லி கடைக்குமா?.. டல்லடிக்கும் தனுஷ் படம்.. கரூர் துயரம் தான் காரணம்?
சென்னை: தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 150 கோடி வரை வசூல் ஈட்டியது. ஆனால், அந்த படமே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் சுமாராகவே இருந்ததாக ரசிகர்கள் பெரும் அதிருப்தியை தெரிவித்தனர். அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் ஃபிளாப் ஆனது.
கிராமத்து சப்ஜெக்ட்டை கையிலெடுத்த படங்கள் இந்த ஆண்டு தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் நிலையில், குபேரா படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது.

சில நாட்கள் முன்னதாகவே டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையிலும், இதுவரை பல திரையரங்குகளில் முதல் காட்சியான 9 மணி ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடிவாங்கிய குபேரா: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையிலும், தமிழ்நாட்டில் பெரிதாக ஓடவே இல்லை. தெலுங்கில் சிறப்பாக அந்த படம் ஓடிய நிலையில், அதிகபட்சமாக 100 கோடி வசூலை உலகளவில் ஈட்டியது. ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே குபேரா படம் ஈட்டியதாக வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் அதிர்ச்சியை அளித்தன. இந்நிலையில், இட்லி கடை படத்துக்கும் அதே நிலைமை ஏற்பட்டு விடுமோ என்கிற கவலை எழுந்துள்ளது.
டல்லடிக்கும் இட்லி கடை புக்கிங்: குபேரா படத்துக்கும் தமிழ்நாட்டில் இதே போலத்தான் ஓபனிங்கே இல்லாமல் இருந்தது. ரோகிணி தியேட்டரில் முதல் ஷோவுக்கு தனுஷ் நேரில் வந்து படம் பார்த்து சென்றார். டோலிவுட்டில் வெற்றிப் பெற்ற அளவுக்கு பெறவில்லை. ஆனால், இட்லி கடை படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்றும் ஆயுத பூஜை வெளியீடு என்பதால் வசூல் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல தியேட்டர்களில் இட்லி கடை படத்தின் முதல் நாள் டிக்கெட் புக்கிங் ரொம்பவே டல் அடித்துக் காணப்படுகின்றன. சில மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் மற்றும் பிரபல திரையரங்குகளில் மட்டுமே முதல் ஷோ ஓரளவுக்கு ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது. ஹவுஸ்ஃபுல் புக்கிங் எல்லாம் பெரிதாக இல்லை.
கரூர் துயரம்: நடிகர் தனுஷ் சென்னையை தாண்டி கோவை, மதுரை, திருச்சி என பல மாவட்ட மக்களையும் கவர் செய்ய இட்லி கடை படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தினார். ஆனால், கரூரில் விஜய் மக்களை சந்தித்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் குஷி ரீ ரிலீஸ் படமே அடிவாங்கிய நிலையில், தனுஷின் இட்லி கடை மற்றும் காந்தாரா சாப்டர் 1 படங்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் பெரிதாக ஆர்வம் செலுத்துவது போல தெரியவில்லை. இதன் காரணமாக வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











