For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தர்மதுரை... கிராமத்து புல்லாங்குழல்

  By Mayura Akilan
  |

  சென்னை: நம்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் டாக்டருக்கு படித்து விட்டு வெளிநாடுகளுக்கு போய் சம்பாதிக்க நினைக்காமல் கிராமங்களில் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும், வலிகளோடும் வேதனைகளோடும் இருப்பவர்களின் துயரங்களை போக்கவேண்டும் என்று தர்மதுரை மூலம் சொல்கிறார் இயக்குநார் சீனு ராமசாமி.

  டாஸ்மாக் பாரில் தொடங்குகிறது படம். டாக்டருக்கு படித்த விஜய் சேதுபதி முழுநேர குடிகாரனாக மாறியது ஏன்? குடியில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் தர்மதுரை.

  Dharmadurai My point of view

  தென்மேற்கு பருவக்காற்று மூலம் தென்றலாய் வீசிய சீனுராமசாமி நீர்பறவை மூலம் மீனவர்களின் துயரங்களை கூறியவர். அவரது இடம் பொருள் ஏவல் இன்னமும் வெளியாகவில்லை. தர்மதுரை சீனு ராமசாமியின் 5 வது படம். கிராமத்து புல்லாங்குழலாய் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது என்றே கூறலாம்.

  மதுவிற்கு அடிமையாகி முழு நேர குடிகாரனாக கிராமத்தில் பண்ணும் அலப்பறை... அவ்வப்போது பேசும் இங்கிலீசு பேச்சு என தனக்கே உரிய தணி பாணியில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. தர்மதுரையாக வாழ்ந்துள்ள விஜய்சேதுபதியின் ஒற்றைக் கதாபாத்திர பலத்தில் படம் நகர்கிறது.

  குடும்ப மானத்தை கப்பலேற்றுவதாக கூறி கொல்லவும் துணியும் சகோதரர்களிடம் இருந்து அம்மா ராதிகாவின் திட்டத்தால் சாதுர்யமாக தப்பித்து நண்பர்களைத் தேடி பயணிக்கும் தர்மதுரை டாக்டர் தர்மதுரையாக உருவான மருத்துவக்கல்லூரியில் கதை நகர்கிறது.

  தேனி மாவட்ட கிராமத்தில் இருந்து வந்து மதுரை மருத்துவ கல்லூரியில் தமன்னா , சிருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்களுடன் எம்பிபிஎஸ் படித்து முடித்து டாக்டராகிறார் தர்மதுரை.

  Dharmadurai My point of view

  கல்லூரி பேராசிரியர் காமராஜ் அறிவுரைப்படி பழ கோஷ்டிகள் படிக்க அவரை முனியாண்டி என்று கிண்டலடிக்கும் மாணவர்களை துவைத்து எடுப்பது, போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஆசிரியர், தோழிகள் உதவியுடன் தண்டனை எதுவுமின்றி தப்பிப்பது என நகர்கிறது கல்லூரி காலம்.

  மருத்துவக் கல்லூரி மாணவிகளாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே இருந்து கொஞ்சம் கூட கவர்ச்சியில்லை. ஆனாலும் கண்களுக்கு குளுமையாய் கதாநாயகிகள். தமன்னா மருத்துவர் சுபாஷினியாக கவர்ச்சியை குறைத்து கச்சிதமாக நடித்திருக்கிறார்.

  அடுத்த நாயகியாக சேதுபதியை ஒரு தலையாக காதலிக்கும் ஸ்டெல்லா வாக சிருஷ்டி டாங்கே, படிப்பு முடிந்த உடன் அப்பாவிடம் பெண் கேட்டு வருமாறு கூறுவது தனி அழகு. இடைவேளை மருத்துவக்கல்லூரி ப்ளாஸ் பேக் உடன் முடிகிறது.

  மருத்துவம் படித்த டாக்டர் தர்மதுரை ஏன் அப்படி போதையில் சுற்றுகிறார்? அதற்கான காரணம் என்ன? படித்த படிப்புக்கு ஏற்ற தொழிலை தொடர்ந்தாரா? இயல்பு நிலைக்குத் திரும்பினாரா? என்பது மீதிக் கதை. மதுரையில் இருந்து தோழிகளை தேடி பயணிக்கிறார் தர்மதுரை. ஸ்டெல்லாவின் எதிர்பாராத முடிவு, தென்காசியில் டாக்டர் தொழில் செய்யும் தமன்னா என கதை நகர்கிறது.

  மூன்றவது நாயாகியாக வரும் கிராமத்து அன்புச்செல்வியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார். டாக்டர் எழுத்து கோழிகிறுக்கல் என கலாய்ப்பதில் தொடங்கி , தான் ஆசைப்பட்ட வாழ்க்கை அமையாமல் போனதால் எடுக்கும் முடிவு வரை அன்புச்செல்வியாக வாழ்ந்திருக்கிறார்.

  அம்மாவாக நடித்த ராதிகா, மருத்துவக்கல்லூரி பேராசிரியர் காமராஜக வரும் ராஜேஷ், மருத்துவ உதவியாளர் எவிடன்ஸாக வரும் கஞ்சா கருப்பு, ஐஸ்வர்யா ராஜேஷின் போலீஸ் தோழியாக வரும் ஓய் .ஜி . மதுவந்தி ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக வரும் எம் - எஸ்.பாஸ்கர் , விஜய்சேதுபதியின் அண்ணன் அருள்தாஸ் , தம்பி சவுந்திரபாண்டியன், ஏட்டு சித்தப்பாவாக ஈ.ராமதாஸ் ஆகிய அனைவருமே தங்களின் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கின்றனர். முக்கியமாக அந்த குட்டிப்பெண் அக்கா மகள் சொல்லும் மந்திரம் தனி அழகு.

  தர்மதுரை எனும் ரஜினி பட தலைப்பில் எடுக்கப்பட்ட படம். அந்த தர்மதுரை சகோதரர்களுக்காக பணத்தை இழப்பார். இந்த தர்மதுரை பணத்தாசை பிடித்த சகோதரர்களால் வாழ்க்கையை இழக்கிறார். பஞ்சபாண்டவர்கள் போல ஒற்றுமையாய் இருப்பார்கள் என்று பேர் வைத்ததாக கூறும் அம்மா ராதிகா,இப்படி சண்டை போட்டுக்கிறீங்களே என்று கலங்குகிறார்.

  Dharmadurai My point of view

  சுகுமாரின் ஒளிப்பதிவில் தேனி மாவட்ட அழகு அள்ளுகிறது. வைகை அணை, மதுரையில் வைகை ஆறு, குற்றாலத்தின் எழில் என குளிர்ச்சியாய் கண்களை நிறைக்கிறது. குளு குளு தென்காசி, காசி விஸ்வநாதர் ஆலயம் என பார்த்த இடங்கள் கூட பசுமையாய் பிரம்மாண்டமாய் இன்னும் அழகாய் தெரிகிறது.

  யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அந்த நேரத்தில் ரசிக்க வைக்கிறது 'போய் வாடா யேன் பொலி காட்டு ராஜா ... 'மக்க கலங்குதப்பா ....', 'நான் காற்றிலே அலைகிற ... , 'ஆண்டிப்பட்டி கனவாய் காத்து ... ' பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் கதையோடு கலந்து கலக்குகிறது. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பில் படம் மெதுவாக நகர்கிறது.

  இயக்கம் சீனு இராமசாமி. தன்னுடைய பாணியில் சில நல்ல விசயங்களை கூற முயற்சி செய்துள்ளார். மருத்துவர்கள் கிராமத்திற்கு சேவை செய்வது. உடல்தானத்தின் முக்கியத்துவம் , செகண்ட் இயர் சின்ட்ரோம், புரோட்டா மைதாவின் கெடுதல் என ஆங்காங்கே சொல்லப்பட்டிருப்பதற்காகவே தர்மதுரை படத்தை ரசிக்கலாம்.

  'அழகுங்கிறது நிறத்துலயும், உருவத்துலயும் கிடையாது. செய்யுற செயல்ல இருக்கு' என சில இடங்களில் மட்டுமே சீனு ராமசாமியின் வசனம் கவனிக்க வைக்கிறது.அண்ணன் என்று கூப்பிட்ட பெண்ணை பெண் கேட்டு செல்வது. இனி நீங்க அண்ணன் இல்ல எனக்கு மாமா என்று அன்புச்செல்வி கூறும் காட்சிகள் கவிதையாய் நகர்கின்றன.

  மருத்துவர்கள் கிராமத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க முயற்சித்ததற்காக இயக்குநர் சீனு ராமசாமிக்கு பாராட்டுகள். அதே சமயம் அதற்கான எந்த வித நியாயத்தையும் கதை- திரைக்கதையில் அழுத்தமாக பதிக்கவில்லை என்பதுதான் குறை

  திருமணத்திற்குப் பின்னர் தோழி தமன்னாவைப் பார்த்து நீ என்ன லவ் பண்ணேல்ல என்று கேட்பது.... கணவனிடம் விவாகரத்து பெற்றுக்கொண்டு விஜய் சேதுபதியுடன் கை கோர்த்து கொண்டு செல்வது என சின்ன சின்ன டுவிஸ்ட்டுகள் உள்ளது.

  லிவ் இன் வாழ்க்கைக்கு விளக்கம் சொல்லும் ராஜேஷ், நம்முடைய கலாச்சாரத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று ராஜேஷ் கூறுவதற்கு எங்களை நாங்களே நிரூபிக்க போரட வேண்டியிருக்கு என்று விஜய் சேதுபது கூறும் வசனம், திருநங்கைக்கு வேலை கொடுப்பது, கிராமத்தில் மருத்துவர் வேலை செய்வது, பகை தீர்ந்து அன்பு பாராட்டுவது என பாசிட்டிவ் விஷயங்களைப் பதிவு செய்திருப்பது வரவேற்புக்குரியது.

  தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை என தனது முந்தைய படங்களில் கதைசொல்லியாக கவனம் ஈர்த்த இயக்குநர் சீனு ராமசாமி, தர்மதுரையில் சற்றே சறுக்கியிருக்கிறார். பாலுமகேந்திரா படம் போல ஒவ்வொரு காட்சியும் மெதுவாக நகர்கிறது ஆனாலும் அலுப்பு தட்டவில்லை. கிளைமேக்ஸ்தான் சட்டென்று முடிகிறது.

  மொத்தத்தில் கவர்ச்சி சதையை நம்பி படமெடுக்காமல், கதையை நம்பி படமெடுத்த சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள்.

  English summary
  Seenu Ramasamy’s Dharmadurai Touted to be a family drama,is an emotional and romantic roller-coaster.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X