»   »  ஒரு இயக்குநரின் தலை எழுத்தை மாற்றிய 'தல'!

ஒரு இயக்குநரின் தலை எழுத்தை மாற்றிய 'தல'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- வீகே சுந்தர்

'காவேரி கார்னர் டீக்கடை' என்று சொன்னால் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, சினிமாவில் உதவி இயக்குனராக... அசிஸ்டன்ட் கேமேராமேனாக ஒர்க் பண்ற அத்தனை பேருக்கும் அத்துப்படியான ஸ்பாட் அது!

சினிமா கனவுகளோடு சென்னைக்கு வரும் பலருக்கும் அதுதான் மீட்டிங் பாய்ன்ட். எந்தக் கம்பனி படமெடுக்கிறார்கள், யாரிடம் உதவியாளராக சேரலாம் என்பது தொடங்கி பல சினிமாக் கதைகள் பேசப்படுகிற கோடம்பாக்கத்தின் 'கேட்வே'. அந்தக் கடையில் ப்ளாக் டீ குடித்துக் கடந்து உயரம் தொட்டவர்களைப் பட்டியல் போட்டால், வெரைட்டி சினிமா டைரியைவிட அதிகப் பக்கங்கள் வரும் என்பது நிச்சயம்.

Dheena days... A flashback of Thala and AR Murugadoss

முதல் பட வாய்ப்பு வசப்படாமல்... திருமண வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு, டீ பிஸ்கட் சிகரெட் ப்ளஸ் நம்பிக்கையோடு- 'நண்பா... நேத்து பிரம்மாதமான ஒரு லைன் புடிச்சேன் கேளேன்' என்ற குரலும் கேட்டுக்கொண்டே இருப்பது துயரத்தின் உச்சம்!

இன்று கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் இயக்குனர்களிடம் ஒர்க் பண்ணின உதவியாளர்கள் சிலரும் இந்த லிஸ்டில் இருப்பது என்ன மாதிரியான டிஸைன் என்று புரியவில்லை!?

நான் பார்த்தவரையில் வெற்றி எட்டும்வரை காத்திருக்கும் பொறுமை இவர்களுக்கு குறைவாகவே இருப்பதைக் கண்டிருக்கிறேன். படைப்பாளி என்கிற கர்வம் கடைசிவரை வேண்டும்.கதை சொல்லத் தொடங்கும்போதே சிலர் தலையில் கிரீடத்தையும் எடுத்து மாட்டிக் கொள்கிறார்கள்!?

இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒருமுறை சொன்னது ஞாபகம் வருகிறது - 'கம்பன் என்ன சொன்னான்... ஷெல்லி என்ன சொல்றான் தெரியுமா! என்று ஒருத்தன் முட்டுச் சந்தில் நின்று பேசிக்கொண்டிருந்தால், அவனைப் பைத்தியம் என்று இந்த உலகம் சொல்லும்... அதுவே,உனக்கான அடையாளத்தை உருவாக்கின பிறகு சொல்லிப் பார்... ஊரே உன்னைத் திரும்பிப் பார்க்கும்!'

இதை நான் ஏற்கிறேன்.

'டே...! நீயே முட்டுச் சந்துல நின்னுதானே சொல்லிக்கிட்ருக்க' என்று, நீங்கள் சொல்ல நினைக்கிறது எனக்கும் கேட்கிறது. ஆனாலும் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுத்தான் போவேன். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை எக்காரணம் கொண்டும் இழக்க வேண்டாம் என்பதற்கு இந்த சம்பவம் உதவக்கூடும்!

எப்போதாவது அண்ணா மேம்பாலம் வழியாக ராதாகிருஷ்ணன் சாலையில் பயணிக்க நேர்ந்தால், சோழா ஷெரட்டன் ஹோட்டலை ஒட்டிய பாலத்தைத் தவிர்த்துவிட்டு கீழே பயணியுங்கள். எதிர்வரும் சிக்னல் கடந்து வானுயர கட்டடம் ஒன்று இருப்பதைப் பார்க்கலாம். அதுதான் ஒரு காலத்தில் வாசன் ஹவுஸ். அமரர் எஸ்.எஸ்.வாசனுக்கு சொந்தமான பங்களா அங்கிருந்தது.

இன்னிக்கு ஓஹோன்னு நடக்கிற டாஸ்மார்க் கடையைக்கூட வருசத்தில் ரெண்டு நாளைக்கு லீவு விட்றாங்க. வாசன் ஹவுஸ்க்கு நோ லீவ். அந்தளவுக்கு பிஸியான ஷூட்டிங் ஸ்பாட் அது.

அங்கே ஒரு புதுப் படத்துக்கான படப்பிடிப்பு. இயக்குநர் பாக்கியராஜின் நண்பரின் மகன்தான் தயாரிப்பாளர். படப்பிடிப்பு தொடங்கி சில மணி நேரத்தில் ஹீரோ நெர்வஸ் ஆகிறார். வாழ்த்துச் சொல்ல வந்த ஹீரோவின் நண்பர்களுக்கு இந்த சூழல் புரிகிறது!
ஹீரோவே வந்த நண்பர்களில் ஒருவரை அழைத்து - 'சமீபத்தில் ஒரு உதவி இயக்குநர் வந்து கதை சொன்னார். ரொம்பப் பிரமாதமான கதை. அவரோட காண்டாக் நம்பர் வாங்காம விட்டுட்டேன். அவரை எப்படியாவது கண்டு பிடிச்சுக் கூட்டிட்டு வரணுமே!' என்று கேட்கிறார்.

அந்த நண்பரோடு உடன் வந்தவர் 'ஆயுதபூஜை' படத்தின் இயக்குநர் சிவக்குமார். அவரிடம் ஹீரோ சொன்ன அங்க அடையாளங்கள் சொல்லப்படுகிறது. மண்டை காய யோசித்ததில் இருவருமாக முடிவு பண்ணி தி.நகரில் உள்ள ஒரு அறை வாசலில் நிற்கிறார்கள். குள்ளமாக ஒரு உதவி இயக்குநர் நான்தான் கதை சொல்லிட்டு வந்தேன் எனச் சொல்ல... அவரைக் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய் ஹீரோ முன்னால் நிறுத்துகிறார்கள்.

அந்த உதவி இயக்குநருக்கு நடப்பது கனவா நிஜமா என்கிற குழப்பம். 'நீங்க சொன்ன கதை ஓக்கே. உடனே ஷூட்டிங் போகலாம்' என்கிறார் ஹீரோ.

'இன்னும் புரட்யூசர் பார்க்கல...' என்று உதவி இயக்குநர் வார்த்தைகளை மென்று முழுங்குகிறார். அன்று படப்பிடிப்பைத் தொடங்கின தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி இவர்தான் தயாரிப்பாளர் என்கிறார் ஹீரோ. இப்போ தயாரிப்பாளருக்கு குழப்பம்! இன்னிக்குதான் முதல்நாள் ஷூட்டிங் ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள அடுத்த படமும் குடுக்கிறாரே என்று ஷாக்!

மெதுவாக ஹீரோ சொல்கிறார் - இந்தப் படம் ட்ராப்! இவரோட டைரக்ஷன்ல நாம படத்தை ஆரம்பிக்கிறோம். மொத்தப் பேருக்கும் அதிர்ச்சி! யாருக்குமே காரணம் புரிபடவில்லை!! அன்று தொடங்கின படத்தின் இயக்குநர் உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராகக் கொண்டு வந்திருக்கிறார். ஸோ வாட்! படம் ட்ராப்.

அடுத்த ஒரு மாதத்தில் ஹீரோ விரும்பிய இயக்குநரோடு படபிடிப்பு தொடங்குகிறது. 'அண்ணாச்சி,கு முதா ஹேப்பி' என்பதுதான் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் மூவரின் நிலையும்.

அந்தப் படம் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் எடுக்கிற காட்சியை டி.வி.மானிட்டரில் பார்க்கலாம் என்கிற வசதி சினிமாவுக்கு வந்தது. வடபழனி ஏரியாவிலுள்ள ரகத் பிளாசா வணிக வளாகமும்!

அங்கே படத்துக்கான சண்டைக் காட்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். முதன் முதலாக ஒரு டெக்னாலஜி வந்திருப்பதால், காட்சி முடிந்ததும் ஹீரோவை அழைத்து கட்சிகளைக் காட்டுகிறார் ஃபைட் மாஸ்டர். நல்லா இருந்தால் ஒகே சொல்வதும் இல்லை என்றால் ரீ ஷூட் போவதுமாக படப்பிடிப்பு போகிறது.

எனக்கும் அது பிரமிப்பாக இருந்தது. சின்ன பிரேக்கில் தம் அடிக்க வேண்டி நான் வெளியில் வந்தேன். சிகரெட்டை பற்றவைத்து இழுத்தபடி திரும்பிப் பார்த்தால், அந்தப் படத்தின் இயக்குநர் ஒரு மெருன் கலர் டி,வி.எஸ் ஃபிட்டியை ஸ்டார்ட் பண்ணுகிற முயற்சியில் இருந்தார்.

படப்பிடிப்பு நடக்கும்போது இந்தப் பையன் எங்கே கிளம்பிட்டார் என்ற கேள்வியோடு அவரருகில் போனேன். எனக்கு சினிமாவே வேண்டாம் சார்...என்றபடி மறுபடியும் கிக்கரை உதைக்கிறார். 'ஏம் பிரதர்,என்னாச்சு!' எனக் கேட்டேன். 'சார்,படத்துக்கு நான் டைரக்டரா மாஸ்டர் டைரக்டரா!? என்னக் கேக்காம அவரே ஷாட் வச்சா அப்பறம் நான் எதுக்கு?!' என்றார் வருத்தமாக!

பொதுவாக சினிமாவில் ஒரு சில இயக்குநர்கள் மட்டும்தான் எல்லாவற்றையும் அவர்களே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். தவிர உள்ள படங்களில் சண்டைக் காட்சிகளை ஃபைட் மாஸ்டரும், பாடல் காட்சியை டான்ஸ் மாஸ்டரும்தான் எடுப்பது சினிமா வழக்கம். அதை அவருக்கு விளக்கமாகச் சொன்னேன். கிக்கரை உதைப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்.

'பிரதர், முதல் படம் இயக்குகிற எல்லாருக்கும் இதுபோல் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். மொத்தத்தில் படம் வரும்போது அவுட்புட் என்னவோ அதுதான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். தனிப்பட்ட நபர் எடுத்த காட்சி என்று படத்தில் எங்கேயும் சப் டைட்டில் வராது. ஜெயிச்சதுக்கு அப்புறம் இது அத்தனையும் உங்க கண்ட்ரோலுக்கு வந்திரும்,' என்றேன்.

அரைமனதாக ஒப்புக்கொண்டு மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்தார். அதன் பிறகு குமுதா ஹேப்பி. படம் சூப்பர் ஹிட். அந்த இயக்குநர் இன்றைக்கு தமிழ் சினிமாவில் அதிகப்பட்சம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவர்.

இவ்வளவு நேரமும் யாரு என்னன்னு தெரியாமல் முட்டுச்சந்தில் நின்னு ஒருத்தன் சொல்றத ஃபாலோ பண்ணி வந்ததுக்கு நன்றி.

முதல்நாளே ட்ராப் ஆன படத்தின் இயக்குநர் - பிரவின் காந்த்.
அன்றைக்கே கமிட்டான இயக்குநர் - ஏ.ஆர்.முருகதாஸ்.
படம் - தீனா.
ஹீரோ - 'தல' அஜித்.
மாஸ்டர் - கனல் கண்ணன்.
தயாரிப்பாளர் - கார்த்திகேயன்.

அப்புறம்... நான்? - வீ.கே.சுந்தர்.

நினைவுகள் தொடரும்...

English summary
VK Sundar is remembering the days of Dheena movie, Thala Ajith and Director AR Murugadoss

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil