அந்த இரண்டு படங்களும் கணக்கில் இல்லையா?.. ஏன் பைசன் முதல் படம்?.. துருவ் விக்ரம் விளக்கம்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். இந்தப் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு படம் வெளியாகவிருக்கும் நிலையில்; ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பைசன்தான் எனக்கு முதல் படம் என்று சொன்னார். அது பலரிடம் விமர்சனத்தை சந்தித்த சூழலில் அதற்கு விளக்கமளித்திருக்கிறார் அவர்.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். படத்தின் முதல் வெர்ஷனை பாலா இயக்கியிருந்தார். ஆனால் அது படக்குழுவுக்கும், விக்ரமுக்கும் திருப்தி தராததால் அதனை அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்யவில்லை. இரண்டாவது வெர்ஷனான ஆதித்யா வர்மா படமும் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் நடித்திருந்தார்.
பைசன் - காளமாடன்: இரண்டு படங்களுக்கு பிறகு அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு அனுபமா பரமேஸ்வரன் ஜோடி. மேலும் பசுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் மாரி ரொம்பவே சென்சேஷனலான இயக்குநர். அதன் காரணமாக இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முதல் படம்: முதல் இரண்டு படங்களுமே துருவ்வுக்கு பெரிய வெற்றியை தரவில்லை. எனவே இந்தப் படத்தை அவர் ரொம்பவே நம்பியிருக்கிறார். இப்படமானது தென் தமிழ்நாட்டு வாழ்க்கையை சொல்லக்கூடியது. ஆனால் துருவ்வுக்கும் அந்த வாழ்வியலுக்கும் சம்பந்தம் இல்லை. இருப்பினும் கடுமையாக உழைத்திருப்பது படத்தின் டீசர், ட்ரெய்லரை பார்க்கையில் உணர முடிகிறது. எனவே இதுதான் அவரது முதல் படம் என்று பலரும் சொல்கிறார்கள்.
அவரே சொல்கிறார்: அவரேகூட சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, 'இந்தப் படத்துக்காக நான் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறேன். இதுதான் எனது முதல் படம். ஆதித்ய வர்மா ரீமேக் படம். எனவே இந்தப் படத்துக்கு காதலி, குடும்பம், நண்பர்கள் என யாரோடு வேண்டுமானாலும் செல்லுங்க. ஆனால் தியேட்டருக்கு சென்று பாருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பேச்சு திரைத்துறையில் விவாதத்தை கிளப்பியது. முதல் இரண்டு படங்களை அவர் மதிக்கவே இல்லாதது போல் இருக்கிறது என்று விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
துருவ்வின் விளக்கம்: இந்நிலையில் பிரபல யூடியூபர் சுதிருக்கு துருவ் அளித்த நேர்காணலில், "ஆதித்ய வர்மா, வர்மா ஆகிய இரண்டு படங்களுமே ரீமேக் படங்கள்தான். அதை விஜய் தேவரகொண்டா ஏற்கனவே செய்துவிட்டார். எனவே அதிலிருந்து நாம் எப்படி செய்ய வேண்டும் என்றுதான் இருந்தது. அடுத்ததாக நடித்த மகான் படம் சியான் விக்ரம் படம்தான். அதனால்தான் பைசன் படத்தை முதல் படமாக சொன்னேன். இருந்தாலும் நான் கொஞ்சம் வேறு மாதிரி சொல்லியிருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











