»   »  உடுமலை சங்கரின் உயிர்ப்பலி, சாதி வெறியர்களின் கடைசிப்பலியாக இருக்கட்டும்! - அமீர்

உடுமலை சங்கரின் உயிர்ப்பலி, சாதி வெறியர்களின் கடைசிப்பலியாக இருக்கட்டும்! - அமீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹாலிவுட்டை மிஞ்சிய தனுஷின் வடசென்னை ஃபர்ஸ்ட் லுக்- வீடியோ

சென்னை: உடுமலை சங்கரின் உயிர்ப்பலியே சாதி வெறியர்கள் கொள்ளும் கடைசி பலியாக இருக்கட்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

உடுமலைப்பேட்டையில் இரண்டு வருடங்களுக்கு முன் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, சங்கரின் நினைவு நாளான நேற்று சங்கரின் இரண்டாமாண்டு நினைவேந்தலை நடத்தினார். கூடவே 'சங்கர் சமூகநீதி அறக்கட்டளை'யையும் தொடங்கி அறிமுகம் செய்தார்.

Director Ameers letter to Kusalya Sankar

இந்த நிகழ்வில் மூத்த பொதுவுடைமைப் போராளி இரா நல்லகண்ணு, ஜி.இராமகிருஷ்ணன், தமிழகத்தின் சமூக செயல்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்களுடன் திரைப்பட இயக்குநர்கள் சமுத்திரக்கனி, கோபி நயினார், மு.களஞ்சியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்L பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி, தன் உரைக்குப்பின், அமீர் கலந்துகொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்ததோடு கௌசல்யாவிற்கு அமீர் கடிதம் தந்தனுப்பி இருக்கிறார் என்று குறிப்பிட்டதோடு அந்த கடிதத்தை மேடையில் வாசித்து கௌசல்யாவிடம் ஒப்படைத்தார்.

கௌசல்யாவுக்கு இயக்குநர் அமீர் எழுதிய அந்தக் கடிதம்:

சில சூழ்நிலைச் சிக்கல்களால் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருந்துவதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று வாக்களித்துவிட்டு எனது வாக்கை நிறைவேற்றாமல் போனதற்கு தங்கை கௌசல்யாவிடமும் சபையோரிடமும் நான் உளப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். என் மன்னிப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்நிகழ்ச்சியில் நான் நேரடியாக கலந்து கொள்ள முடியாமல் போனாலும் என் கருத்துக்களை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சாதியின் பேராலும் மதத்தின் பேராலும் இந்த நாட்டில் நடக்கும் கொடுமைகள் அனைத்தும் மனித மாண்பை போற்றக்கூடிய எவரும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது ஆதிக்க சாதியினர் நிகழ்த்தும் அதிகாரத்தையும், குரோதத்தையும் இன்னும் ஒரு படி மேலே சென்று உயிர் பலி வாங்கும் நடவடிக்கையையும் ஒரு மனிதனாக என்னால் ஏற்கவே முடியாது.

ஆனால் இங்கே கள யதார்த்தம் என்னவாக இருக்கிறதென்றால் ஒவ்வொரு சாதியினரும் தான் சார்ந்திருக்கின்ற சாதி உயர்ந்ததென்றும் பிற சாதியின மக்கள் தாழ்ந்தவரென்றும், தன் சாதியில்தான் உயர்குணங்கள் அதிகம் இருக்கிறதென்றும், தன் சாதியினர் மட்டுமே இந்த மண்ணை ஆளப்பிறந்தவர்கள் என்றும் பிற சாதியினர் நமக்கு அடிமையாக இருக்கப் பிறந்தவர் என்றும் அறிவுக்கு ஓவ்வாத, ஆக்கப்பூர்வமில்லாத தத்துவங்களை தங்களுடனே சுமந்து கொண்டு திரிகின்றனர். அதன் காரணமாகத்தான் இந்த சமூகத்தில் ஆணவக் கொலைகள் நம் கண்முன்னே அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாமும் அதை காணொளியாகவோ செய்தியாகவோ கண்டுவிட்டு கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமலிருக்கவும் இது போன்ற கொடிய சிந்தனை எதிர்கால சந்ததியினர் உள்ளத்திலும் இளைய தலைமுறையினரின் சிந்தனையிலும் எந்தச் சூழ்நிலையிலும் எழாமல் இருக்கும் முயற்சியை இன்றைய நிகழ்ச்சி உருவாக்கும் என்றே நம்புகிறன். இந்த நம்பிக்கை என் உள்ளத்தில் ஆழமாக உருவாவதற்கு காரணம் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்ட விதமும் இதில் மனமுவந்து கலந்து கொள்ள ஒப்புதல் தந்தவர்களையும் பார்க்கும் போது எனக்குள் ஏற்பட்டதுதான்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தின் அரசியல் ஆளுமைகளையும், சிந்தனை ஆளுமைகளையும், திரைத்துறையின் ஆளுமைகளையும் ஒன்றிணைத்து,
நாம் எல்லோரும் ஓர் இனம் என்கிற ஒற்றை நேர்கோட்டில், கை கோர்த்து பயணிக்க முடியும் என்கிற நம்பிக்கையை

வயதில் இளையவராக இருந்தாலும். அறிவில் பெரியவராக வாழ்ந்து கொண்டிருக்கும் என் தங்கை கௌசல்யா ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய சூழலில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், தமிழ் சமூகத்தின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடத்தை தங்கை கௌசல்யா பெற்றிருக்கிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை. நடப்பு சாதிக்கொடுமைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என புரியாமல் தவிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை குறியீடாக தங்கை கௌசல்யா இருக்கிறார் என்றே நான் அறிகிறேன். அவர் இன்று ஏற்று வைத்திருக்கும் அறிவுச் சுடரை இனிவரும் சந்ததியினர் அணையாமல் காக்க வேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன்.

இனி வருங்காலங்களில் தங்கை கௌசல்யா எடுத்துவைக்கும் எல்லா நன்முயற்சிகளுக்கும் நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

இனியும் இம்மண்ணில் சாதி மத வேறுபாடுகளின் பெயரால் இன்னபிற ஏற்றத்தாழ்வுகளின் பெயரால் எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படக்கூடாது. அது போன்ற கொடுமை மீண்டும் இம்மண்ணில் நேராமலிருக்க சாதிய, மத, கட்சி, இயக்க வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயலாற்றுவோம். வலியோரால் வஞ்சிக்கப்படும் எளியோருக்கு நீதி கிடைக்க அனைவரும் அவரவருக்கான வாழும் உரிமையை பேணிக்காப்பதோடு மட்டுமல்லாமல் பிறர் உரிமையையும் பேணிக்காத்து வாழ்ந்திடவும் உறுதி செய்வோம்.

சங்கரின் உயிர்ப்பலி சாதி வெறியர்களின் கடைசி பலியாக இருக்கட்டும்!
இந் நிகழ்ச்சியின் மூலம் ஒன்றிணைந்த நம் கைகள் சாதி வெறிக்கு சமாதி கட்டட்டும்.

அன்புடன்,
இயக்குநர் அமீர்

-இவ்வாறு கௌசல்யாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், இயக்குநர் அமீர்.

English summary
Director Ameer urged that the murder of Udumalai Sankar should be the last one for Honour Killings in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X