Aameer - Vijay: கரூர் துயரம்.. விஜய்யை விளாசிவிட்ட அமீர்.. கேஸ் முடியட்டும் அதுக்கு அப்புறம் இருக்கு!
சென்னை: நடிகர் விஜய் தனது கட்சி சார்பில் கரூரில் நடத்திய பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள் பொதுமக்கள் என மொத்தம் 41 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் என வழக்குகள் நடைபெற்று வருகிறது. தனியாக விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் அமீர் பேசும்போது, விஜய்யை காட்டமாக விமர்சித்தார்.
ஏற்கனவே கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற பின்னர் அமீர் தனது வாட்ஸ் ஆப்பில், "என்று தனியும் இந்த சினிமா மோகம்?. உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழந்தைகள் பலியா?. கரூரில் இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள்?" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி சந்தித்த இயக்குநர் அமீர் விஜய் மீதான விமர்சனங்களை மேலும் காட்டமாக வைத்தார். அதாவது அவர் பேசும்போது, " விஜய் உச்ச நடிகர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவர் தனது வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் வந்துதும் நாட்டைக் கொடுக்க வேண்டுமா என்பதைத்தான் நான் விமர்சிக்கிறேன். அவர் மக்களுடன் இன்னும் கலந்து கொள்ள வேண்டும், மக்களின் அரசியலில், சுக துக்கங்களில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த நாடு எதை நோக்கி போகிறது இந்த நாட்டுக்கு என்ன அரசியல் தேவையானது என்பதில் கலந்து கொள்ள வேண்டும்.
விஜய்யைத் திருத்ததான்: அண்ணன் திருமாவளவன், இயக்குநர் கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் கடுமையாக விஜய்யை விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சனத்தில் இருந்து விஜய் தன்னைச் சரி செய்து கொள்ள வேண்டும். பலரும் விஜய்யை கடுமையாக திட்டுவது என்பது விஜய்யை சரிசெய்வதற்கு தான் என்று நான் பார்க்கிறேன். கரூர் சம்பவம் குறித்து 16 வது நாள் காரியம் முடிந்த பின்னர் நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியும். அது அறிவுப்பூர்வமானது? ஆனால் ஆதவ் அர்ஜுனா அது போல பேசிவிட்டு செல்கிறார். அவர் சொல்வது என்ன வேதவாக்கா? பத்திரிகையாளர்கள் எதுவும் சொல்லாதது அதிருப்தியாக இருக்கிறது.

விஜய்யின் அப்பா: யாருக்கும் அவரது தகப்பன் கெட்டது நினைக்க மாட்டார்கள். விஜய்யின் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருப்பவர்கள் சரியானவர்களாக இல்லை. விஜய் தனது அப்பாவை விலக்கி வைத்துவிட்டு, அவருக்கு நல்ல அறிவுரைகளை சொல்லக் கூடிய தலைவர்கள் இல்லாதது குறைதான். கரூர் சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்காமல், அதில் தமிழக அரசு மீது குற்றம் சாட்டுவது சரி இல்லை. ஊடகங்களிடம் பேசிய கருத்துக்களை நீதிமன்றத்தில் பேசவில்லை. ஏன்? விஜய் மாநாட்டில் பேசும்போது கூட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மற்றவர்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். இது என்ன மாதிரியான அணுகுமுறை? இது ஆபத்தானது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விரைவில் தீர்ப்பு வந்துவிடும். அதன் பின்னர் இது தொடர்பாக விளாவரியாக பேசலாம்" என்று தெரிவித்துள்ளார். அமீரின் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











