For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சத்தியமே வெல்லும்... நீதிமன்றத்தை நாடும் இயக்குனர் அமீர்!

  |

  சென்னை: தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என இயக்குனர் அமீர் அறிவித்துள்ளார்.

  கடந்த 8ம் தேதி தனியார் தொலைக்காட்சி சார்பில் கோவையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் கலந்துகொண்டார். இதில் பிரச்சினை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, அமீர் மீதும், தனியார் தொலைக்காட்சி மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படத்துறையினர், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
  இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குனர் அமீர் அறிவித்துள்ளார்.

  Director Ameer warns central and state government


  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடந்த 08ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தனர்.

  எல்லா கருத்துக்களையும் கேட்டு யார் தங்களின் குரலாகப் பேசுகிறார்களோ, அவர்களுக்கு பெரும் ஆதரவை அந்த அரங்கினுள் இருந்த மக்கள் அளித்து வந்தனர். அந்த வரிசையில் நானும் என் கருத்தை முன் வைத்த போது அங்கிருந்த சிலர், கருத்தை - கருத்தால் எதிர்கொள்ள முடியாமல், தக்க பதில் அளிக்கத் தெளிவில்லாமல், மத துவேஷத்துடன், ஜனநாயகத்திற்கு எதிரான வகையிலும், பொது சபையின் கண்ணியத்தைக் காக்காமலும், என்னைப் பேசவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, சட்டம்-ஒழுங்கை குலைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

  சமீப காலமாக, தேசத்தை ஆளுகின்ற தேசியக் கட்சி, அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுகின்றவர்களுக்கு புதிய பட்டங்கள் சூட்டுவதும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொல்வதும், சில நேரங்களில் நடக்காததைக் கூட நடந்ததாக கூறுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மேலும், தாங்கள் செய்தவற்றையெல்லாம் மறைப்பதோடு எதிரே நிற்பவர்களின் மேல் வீண் பழியை சுமத்துவதிலுமே குறியாக இருக்கின்றனர்.

  அந்த வகையில் தான் அன்றைய தினமும், நானும் மற்ற தலைவர்களும் தேசியக் கட்சியின் பிரதிநிதி பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டோம். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, நடந்த உண்மையை, சில சம்பவங்களை நான் முன் வைத்த போது, "பேசக்கூடாது.. மீறினால் கடும் விளைவுகளைச் சந்திப்பாய்..!" என்று சர்வாதிகாரமாக உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், என்னைத் தாக்குவதற்கும் முற்பட்டனர்.
  இந்திய தேசத்தில் மைய அரசாக அவர்கள் இருக்கிறார்கள், என்பதற்காக எதை வேண்டுமானலும் சொல்ல முடியும்.! செய்ய முடியும்.! என்றால் அதற்குப் பெயர் சர்வாதிகார மமதை அல்லது ஜனநாயகப் படுகொலை என்பதைத் தவிர வேறில்லை. இதைத்தான், பொதுத்தளங்களில் பயணிக்கும் நான் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தாக தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகின்றனர். அது இப்போது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
  அதிகாரம் அவர்கள் கையில் இருக்கின்ற காரணத்தினால், தவறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயகத்தை காக்க முயலுகின்ற ஊடகத்தின் மீதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுமைகளின் மீதும் வழக்கு தொடுத்திருப்பது தமிழக மக்களின் நெஞ்சங்களில் கேள்வியாக எழுந்துள்ளது.
  நியாயப்படி, என் மீதும் புதிய தலைமுறை செய்தியாளர் மீதும், அத்தொலைக்காட்சி மீதும் போடப்பட்டிருக்கிற வழக்குகளில் எள்ளளவும் உண்மைத் தன்மையில்லாத காரணத்தால் அவ்வழக்கை வாபஸ் பெறுவதோடு மட்டுமல்லாமல், தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். "சத்தியமே வெல்லும்" என்ற வார்த்தையை தன்னுடைய இலச்சினையில் பொறித்திருக்கிற தமிழக அரசு கூடிய விரைவில் அதைச் செய்யும் என்று நம்புகிறேன்.
  அப்படி நடக்காத பட்சத்தில், சட்டப்படி நீதிமன்றத்தை நாடி வழக்கை சந்தித்து அங்கு நடந்த உண்மைகளை "வீடியோ காட்சிகள்" மூலமும், சாட்சியங்களின் வாயிலாகவும் நிலைநாட்டி வெற்றி பெறுவதோடு, மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இவ்வழக்கை அமைத்துக் கொள்வேன்.

  எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எனக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ, உள்ளிட்ட அனைவருக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
  இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

  English summary
  Director Ameer has said that he will go to court if the cases against were not withdrawn.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X