கஜினி படத்தில் அஜித் நடித்த 2 நாள் காட்சிகள் இன்னும் இருக்காம்.. ரிலீஸ் செய்வாரா ஏ.ஆர். முருகதாஸ்?
சென்னை: தமிழ் சினிமாவில் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும் கூட்டணியில் ஒன்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் அஜித் குமார் கூட்டணிதான். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய தீனா படம் தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டர். அதன் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்ற கமிட் ஆன படம் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படம். இந்த படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால், இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித் குமார் அதன் பின்னர் படத்தில் இருந்து மொத்தமாக விலகினார். அதன் பின்னர் தான் இந்த படத்தில் சூர்யா கமிட் ஆனார். கஜினி படத்தில் அஜித் நடித்தது தொடர்பாக ஏ.ஆர். முருகதாஸ் அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மதராஸி. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தில் இடம்பெற்ற பாடலான 'செலம்பல' என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. வரும் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் புரோமோசனின் ஒரு பகுதியாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக அது மாறி உள்ளது.
இரண்டு நாள் ஃபுட்டேஜ்: அதாவது அஜித் கஜினி படத்தில் நடிக்க கமிட் ஆன போது அந்த படத்தின் பெயர் மிரட்டல். அஜித் விலகிய பின்னர்தான் அந்த படத்திற்கு கஜினி என பெயர் வைக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது, " மிரட்டல் படத்தில் அஜித் சார் இரண்டு நாட்கள், சஞ்சய் ராமசாமியாக நடித்த காட்சிகள் என்னிடம் இப்போதும் உள்ளது. அதை இப்போது பார்த்தாலும் மிகவும் பிரமிப்பாக இருக்கும். இந்த படத்தின் கதையைச் சொன்னதும் அஜித் சார் சொன்னது, நான் சிக்ஸ் பேக் வைக்கிறேன் என்றது தான். அப்போதெல்லாம் சிக்ஸ் பேக் என்ற கலாச்சாரமே கிடையாது. அதன் பின்னர் தான் சூர்யா, ஆமிர் கான் என இருவரும் சிக்ஸ் பேக் வைத்தார்கள்" என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் கோரிக்கை: அஜித் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் இவ்வாறு கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏ.ஆர். முருகதாஸிடம் அந்த இரண்டு நாள் படப்பிடிப்புக் காட்சிகளை வெளியிடுங்களேன் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். இவர்களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கஜினி கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது.


Click it and Unblock the Notifications











