Atlee: அந்த மனுசனுக்கு தேசிய விருது கிடைக்கனும்.. காந்தாரா பார்த்த எஃபெக்ட்.. அட்லீ என்னமா பேசறாரு!
பெங்களூரூ: காந்தாரா சாப்டர் 1 குறித்த பேச்சு தான் இந்தியா முழுவதும் உள்ளது. தென்னிந்திய சினிமாவில் கன்னட திரைப்படத்திற்கு எப்போதும் தனி விமர்சனமும் ரசிகர்களும் இருக்கிறார்கள். கே.ஜி.எஃப் படத்திற்கு பின்னர் கன்னட திரைப்படத்தின் மீது தனி பார்வை இந்திய அளவில் ஏற்பட்டுவிட்டது. இப்படி இருக்கும்போது கன்னட திரையுலகத்தின் மீது மீண்டும் தனி கவனத்தை ஏற்படுத்திய படம் காந்தாரா. தற்போது காந்தாரா படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்து வருகிறது. இந்த படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லீ, ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டு உள்ளது. படம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 509.25 கோடிகளுக்கு மேல் உலக அளவில் கிராஸ் வசூல் செய்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் கன்னட திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி இருக்கும்போது, காந்தாரா படம் குறித்து பேசிய அட்லீ, காந்தாரா படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாராட்டிய அட்லீ: இது தொடர்பாக அவர் பேசுகையில், " காந்தாரா சாப்டர் 1 படம் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்து முடித்த உடன், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து வாழ்த்தினேன். ஒரு இயக்குநராக அவர் படத்தை இயக்கியதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது மட்டும் இல்லாமல், அந்த படத்தின் கதாநாயகனாக, படம் முழுவதும் ஒரு ரிதமிக் உடல் மொழியுடன் நடித்துள்ளார்.
தேசிய விருது: இப்படி இருக்கும்போது அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் அட்லீக்கு இந்த அளவுக்கு பெரிய மனசா என்றும் கேட்டு வருகிறார்கள். இது தொடர்பான பேட்டியை அட்லீ இந்தியா டுடே சேனலுக்கு அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











