ஷூட்டிங்கில் ரிஸ்க் எடுத்த சூர்யா… வணங்கான் ஸ்கிரிப்ட்டை ஒரேடியாக மாற்றிய பாலா…
சென்னை: சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பிற்காக கோவாவில் உள்ளார்.
முன்னதாக பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, இப்போது சிவா இயக்கும் படத்தில் பிஸியாகிவிட்டார்.
பாலாவின் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு சில மாற்றங்களோடு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவாவில் சூர்யா 42
சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது வென்ற சூர்யா, அதே உற்சாகத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார். பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த நிலையில், திடீரென சிவா இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட்டும் வெளியானது. 'சிறுத்தை' சிவா இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. வரலாற்றுப் பின்னணியில் ஃபேன்டசியாக தயாராகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கோவாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், பாலாவின் வணங்கான் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

சூர்யாவுக்காக மாற்றம்
இந்நிலையில், வணங்கான் படத்தின் படப்பிடிப்பு சூர்யாவுக்காக தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 'வணங்கான்' பட ஷூட்டிங் ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்திற்காக சூர்யா ரொம்பவே ரிஸ்க் எடுத்து சில காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. சூர்யாவும் அதிகமாக ஹார்ட் ஒர்க் செய்ததைப் பார்த்த பாலா, கதையில் சில மாற்றங்களை செய்துவிடலாம் என கூறியுள்ளாராம். சூர்யாவுக்கு அதிகம் ரிஸ்க் இல்லாத காட்சிகள் வருவது மாதிரி ஸ்கிரிப்ட் மாற்றப்படுகிறதாம். 'சூர்யா 42' படத்திலும் ரிஸ்கான சீன்ஸ் அதிகம் இருப்பதால் வணங்கானில் இந்த மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஷூட்டிங் ஆரம்பம்
ரிஸ்க் எடுத்து நடிப்பதெல்லாம் சூர்யாவுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. ஆனால், வணங்கான் படத்தில் சூர்யாவிற்காகவே திரைக்கதையில் திருத்தம் செய்யப்படுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஸ்கிரிப்ட் ஒர்க்கை வேகமாக முடித்து வரும் பாலா, விரைவில் படப்பிடிப்பையும் மீண்டும் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா 42 படத்தில் நடித்தவாறே வணங்கான் ஷூட்டிங்கையும் முடிக்க சூர்யா முடிவு செய்துவிட்டாராம்.

விரைவில் வாடிவாசல் ஷூட்
இந்நிலையில், வணங்கான் படப்பிடிப்பை முடித்துவிட்டால் விரைவில் 'வாடிவாசல்' படத்தில் இணைய சூர்யா ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் பூஜையுடன் தொடங்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், விரைவில் அதை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் 'சூர்யா 42' படத்தின் ஷெட்யூல் மட்டும் எப்போது முடிகிறது என எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











