அவர் மாதிரிலாம் முடியல அண்ணே.. இயக்குநரிடம் வடிவேலுவை பார்த்து பயந்த விவேக்
சென்னை: வடிவேலுவும், விவேக்கும் கோலிவுட்டின் நகைச்சுவையில் இரண்டு தூண்களாக விளங்கியவர்கள். விவேக் உயிரிழ்ந்துவிட வடிவேலு இப்போது காமெடி ரோலை குறைத்து கேரக்டர் ரோல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். காமெடியில் எப்படி கலக்கினாரோ அப்படி இதிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இரண்டு பேர் பற்றி இயக்குநர் பாரதி கண்ணன் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட்டின் நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவும், விவேக்கும் முக்கியமானவர்கள். இரண்டு பேருமே 90களில் நுழைந்து ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தார்கள். வடிவேலு ஒருபக்கம் கிராமத்து மண் சார்ந்த நேட்டிவிட்டியோடு காமெடி செய்ய; விவேக் மறுபக்கம் தனது காமெடிகளில் உலக நடப்புகள், பகுத்தறிவு, சமூகத்துக்கு தேவையான கருத்தை வைத்தார். இரண்டுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாக பயணம்: இரண்டு பேரும் போட்டியாளர்களாக இருந்தாலும் ஏகப்பட்ட படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதேபோல் ஆஃப் கேமராவில் சூப்பர் நண்பர்களாகவும் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு உதாரணமாக எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு மேடையை சொல்லலாம். அதில் இரண்டு பேரும் சேர்ந்து மேடையில் பேசியது இன்றுவரை பலரால் ரசித்து சிரிக்கப்படுகிறது.

உயிரிழந்த விவேக்: விவேக் தனது ரூட்டில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்புக்கு வடிவேலு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவரால் வர முடியவில்லை. அவர் வராதது இன்றுவரை விமர்சனத்தை சந்தித்துவருவது தனி கதை.
வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸ்: இதற்கிடையே அரசியல் மேடையில் ஏறி சில பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டதால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்ட வடிவேலு; தற்போது அனைத்தையும் முடித்துவிட்டு இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை காமெடி ரோல் மட்டும் செய்யாமல் தனது தீனிக்கு போடும்வகையில் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்தார். மாமன்னன், மாரீசன் ஆகியவை எல்லாம் அந்தவகை படங்கள்தான்.
பாரதி கண்ணன் பேட்டி: இந்நிலையில் அவர்கள் இரண்டு பேர் பற்றியும் இயக்குநர் பாரதி கண்ணன் ஒரு பேட்டியில் பேசுகையில், "இயக்குநர்களுக்கு சீன்களில் காமெடி நடிகர்கள் ஐடியா கொடுத்தால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம். வடிவேலுவும், விவேக்கும் அப்படி ஐடியா கொடுப்பார்கள். நாம் விவேக்கிடம் ஒன்றை கொடுத்தால் பத்தாகி காட்டுவார். வடிவேலு 15ஆக ஆக்கி காட்டுவார்கள். அவர்கள் இருவருக்கும் அந்தத் திறமை இருந்தது. அதனால்தான் இவ்வளவு வளர்ச்சி. அதேசமயம் வடிவேலுவை பார்த்து விவேக் பயந்திருக்கிறார். 'அண்ணே நானும் எவ்வளவோ முயன்றும் வடிவேலுவின் நேட்டிவிட்டியை தொட முடியல அண்ணே. நானும் திருநெல்வேலிக்காரன்தான் அவர் அளவுக்கு முடியல. எங்கேயோ ஒரு இடத்தில் நான் க்ளாஸ் ஆகிவிடுகிறேன்' என கூறியதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











