For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரதிராஜா செய்த சாதனை!

By Shankar
|

- கவிஞர் மகுடேசுவரன்

திரைப்பட இயக்குநர்களின் மேதைமையை அவரவர்களுடைய திரைப்படங்களில் இனங்காணலாம். ஆனால், ஓர் இயக்குநரின் ஆளுமை எத்தகையது என்பதை உணர, அவ்வியக்குநரிடம் பணியாற்றி வெளியே வந்து வெற்றி பெற்ற மாணவர்களைக்கொண்டு மதிப்பிடலாம். வெளியேறி வெற்றி பெறும் சீடர்களால் ஓர் இயக்குநரின் வரைபடம் உயர்ந்தபடியே செல்கிறது. பாரதிராஜாவிடம் பணியாற்றிய பற்பலரும் பிற்பாடு இயக்குநராகத் தோன்றியபடியே இருந்தார்கள். எப்போது பாரதிராஜாவிடமிருந்து புதிய தலைமுறை இயக்குநர்கள் தோன்ற முடியவில்லையோ அப்போது முதற்கொண்டு அவருடைய படங்கள் தடுமாறத் தொடங்கின. கிழக்குச் சீமையிலே படத்தில் பணியாற்றிய பாரதி கிருஷ்ணகுமார், அறிவுமதி போன்றோரெல்லாம் நல்ல சுற்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டார்கள். அவர்களால் வெற்றிகரமான இயக்குநர்களாக இயலவில்லை. ஆனால், எண்பதுகளில் பாரதிராஜாவின் கடைநிலை உதவியாளர்கூட இயக்குநராக வலம் வர முடிந்தது. காலத்தின் விந்தைகளில் இஃதும் ஒன்று.

எந்தக் கலையையும் கற்றுக்கொடுக்க ஓர் அமைப்பு இருக்கிறது. இசை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கென்று இருக்கின்ற ஆசானிடம் அன்றாடம் வகுப்படைந்து மெல்ல மெல்ல கற்றுத் தேர்ந்துவிடலாம். அவ்வாறே நடனம் கற்றுத் தரவும் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஓடுகள வீரர் ஆகவேண்டுமென்றால் தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்று வெல்ல முடியும். ஆனால், கற்றுக்கொடுப்பதற்கு ஓர் அமைப்போ நிறுவனமோ தனி வகுப்பெடுக்கும் ஆசிரியர்களோ இல்லாத எண்ணற்ற வித்தைகள், நுண்கலைகள், தொழிற்பாடங்கள் இங்கே தொடுவாரற்றுக் கிடக்கின்றன.

Director Bharathiraja's benchmark in Tamil Cinema

ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்கு அறிக்கையை (Balance Sheet) எவ்வாறு படித்துணர வேண்டும் என்பதைப் போதிக்க இங்கே யாருமில்லை. அது தெரிந்திருந்தால் இன்றைக்குத் தமிழர்கள் பங்குச் சந்தையில் முதலிடத்தில் இருந்திருப்பார்கள். ஆனால், அவற்றைப் படித்துணரும் திறன் எங்குமே கற்பிக்கப்படுவதில்லை. நீங்கள் வணிகவியல் பட்டப்படிப்பு படித்தால் ஒழிய, அவற்றைக் குறித்த வாசனையை முகர முடியாது. இதற்கெதற்குக் கல்லூரி செல்ல வேண்டும்? எத்துறை சார்ந்தவராயினும் இவற்றைத் தெரிந்து வைத்திருப்பது நவீன வாழ்க்கைக்குக் கட்டாயம். தமிழ் இலக்கணம் படிக்க வேண்டுமென்றால் அவற்றைக் கற்றுத்தர ஒருவருமில்லை. இப்படி எண்ணற்ற கற்பிப்பு வாய்ப்புகள் எடுத்துச் செய்வாரின்றிக் கிடக்கின்றன.

திரைப்படக் கல்லூரி என்ற ஒரு சிறிய வாய்ப்பைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் திரைப்படக் கலையையும் இங்கே கற்றுத் தருவதற்கு யாருமில்லை. நீங்கள் திரைப்பட ஆக்கம் குறித்த பல்வேறு பிரிவுகளில் ஏதேனுமொன்றைக் கற்றுத் தேர்வதற்கு விரும்பினால் ஒரு திரைப்படக் குழுவில் அடியாளாக, கடைநிலை உதவியாளனாகச் சேர்ந்து தொழில் கற்க வேண்டும். இப்போது நிலைமை ஓரளவுக்கு நன்று என்றாலும் இருபதாண்டுகளுக்கு முன்வரை இருந்த நிலைமை முற்றிலும் வேறு.

மூத்த இயக்குநர்கள் எல்லிஸ் ஆர் டங்கன், கிருஷ்ணன் - பஞ்சு, ஏ.பி. நாகராஜன், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பி. மாதவன், கே. சங்கர், பீம்சிங், ப. நீலகண்டன், ஏ.சி. திருலோகசந்தர், கே. விஜயன் போன்றவர்களிடம் உதவியாளராக இருந்தவர்கள் பிற்பாடு இயக்குநர்கள் ஆனார்களா ? அது குறித்துப் போதிய தரவுகளே இல்லை எனலாம். ஏ.சி. திருலோகசந்தர் ஏ.வி.எம் நிறுவனத்தின் பணியமர் இயக்குநராக இருந்தமையால் அவர்க்குப் பிறகு அவருடைய மாணவர் எஸ்.பி. முத்துராமன் தோன்றினார். ஸ்ரீதரிடமிருந்து சி.வி.ராஜேந்திரன் என்பவர் தலையெடுத்தார். ஆனால், மூத்தவர்கள் வென்றெடுத்த பெயரையும் புகழையும் இவர்கள் எவ்வளவுக்கு எட்டினார்கள் என்பது ஆராய்ச்சிக்குரியது.

ஏ.பி. நாகராஜனிடமிருந்து ஒரு தேர்ந்த சீடர் இயக்குநராகி வென்றிருப்பார் எனில் தமிழையும் அதன் தொல்கதைகளையும் முதன்மைப்படுத்துகின்ற நல்ல படங்கள் தோன்றியிருக்கும். ஆனால், அந்தக் கண்ணி ஏ.பி. நாகராஜனோடு அறுந்து போயிற்று. மகேந்திரன் நம் காலத்தின் தலையாய இயக்குநர். ஆனால், அவரிடமிருந்து அவருடைய திரைமொழியைக் கற்றுக்கொண்டு வெளியே வந்து படமெடுத்து வென்ற ஓர் இயக்குநரைக் காட்ட முடியவில்லை. இதுதான் பேரிழப்பு என்பது. மகேந்திரனின் திரைமொழியைக் கற்றுக்கொண்டு படமெடுக்கும் ஒரு மரபுத் தொடர்ச்சி நிலைத்திருக்குமானால் நிலைமை முற்றிலும் மாறியிருக்கும்.

Director Bharathiraja's benchmark in Tamil Cinema

பாலசந்தர் போன்றவர்கள் நீண்ட நெடுங்காலம் திரையுலகில் நிலைத்தவர்கள். அவருடைய முதன்மைச் சீடர்கள் பலரும் திரைப்படத்தை இயக்குகின்றவர்களாக மாறவே இல்லை. பாலசந்தரின் அன்புக்குரிய உதவியாளர் அனந்து இறுதிவரை படமே எடுக்க முனையவில்லை. அவருடைய பொறுமையைக் கண்ட பாலசந்தர் தாமே அனந்துக்கென்று ஒரு படம் தயாரிக்க முன்வந்து அவரை இயக்குநர் ஆக்கினார். சிகரம் என்ற தலைப்பில் அப்படம் வந்தது. அப்படமும் தோல்வியுறவே அவர் மீண்டும் பாலசந்தரின் உதவியாளராகவே வாழ்ந்து மடிந்தார். அறுபதுகளின் இயக்குநரான பாலசந்தரிடமிருந்து தொழில்கற்றுக்கொண்ட சீடர்கள் எண்பதுகளில்தான் படமெடுக்கத் தொடங்குகிறார்கள். அமீர்ஜான், சுரேஷ்கிருஷ்ணா, வசந்த் என்று அவர்களும் மிகச்சிலரே. பிற்காலத்தில் சரண் என்னும் இயக்குநர் வந்த வேகத்தில் காணாமல் போனார். ஆனால், இவர்கள் யாருமே பாலசந்தரின் திரைமொழிக்கு அருகில்கூட வரவில்லை. வசந்த் இயக்கிய கேளடி கண்மணி, நீபாதி நான்பாதி ஆகியவை பாலசந்தரின் மாணவரால் எடுக்கப்பட்டவை என்னும் பெருமைக்குரியவை. கமல்ஹாசனை இக்கணக்கில் சேர்க்க வேண்டியதில்லை.

அன்று திரைப்பட நுணுக்கங்கள் எல்லாமே ஒரு கூட்டுக்குள் மறைபொருளாக வைக்கப்பட்டிருந்தன. அவ்வளவு எளிதில் தொழில் கற்றுக்கொண்டு வெளியே வந்து வெற்றி பெற முடியாது. அப்படி வந்தாலும் தோற்றுத் திரும்ப வேண்டியதுதான். ஆனால், இந்த ஒளிவு மறைவை ஒழித்ததில் முதற்பெரும் பங்கு பாரதிராஜாவுக்கே உரியது. எப்போது அவர் தமது ஒளிப்பதிவுக் கருவியைத் தூக்கிக்கொண்டு போய்ப் புழுதியில் வைத்தாரோ அப்போதே திரைப்படத் துறையின் கெடுபிடிகள் மர்மங்கள் மூடுதிரைகள் விலகத் தொடங்கின. படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்களுக்குக்கூடப் படமெடுப்பது குறித்த விளக்கம் கிடைத்தது.

கல்லுக்குள் ஈரம் படத்தில் படப்பிடிப்பு நடத்துவதுபோல் ஊர்ப்பிள்ளைகள் விளையாடும் காட்சியைக் காணலாம். நிலைமை அவ்வாறே ஆனது. பாரதிராஜாவிடமிருந்துதான் எண்ணற்ற உதவியாளர்கள் இயக்குநர்களாகி வெற்றி பெற்றார்கள், தனிப்பாதை வகுத்துக்கொண்டு சென்றார்கள் எனலாம். பாலகுரு, பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, மனோஜ்குமார் என்னும் அப்பட்டியல் சீமான் வரை நீளும். இன்றுவரை அந்தப் பெருமையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இனி அதற்கு வாய்ப்பும் இல்லை.

English summary
Director Bharathiraja has set a new benchmark in producing more new directors in Tamil cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more