கபிலன் முதல் பாக்கியம் வரை.. முயற்சி வீண் போகவில்லை.. சார்பட்டா பரம்பரையை பாராட்டிய பிரபல இயக்குநர்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் ஒருவரின் முயற்சி கூட வீண் போகவில்லை என பிரபல இயக்குநரான சேரன் பாராட்டியுள்ளார்.
Recommended Video
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த படம் சார்பட்டா பரம்பரை. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார்.
மேலும் பசுபதி, ஜான் விஜய், கலையரசன், ஜான் கோக்கென், ஷபீர் கல்லரக்கல், அனுபமா குமார், ஜிஎம் சுந்தர், சஞ்சனா நடராஜன், காளி வெங்கட், மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடந்த மாதம் ஒடிடியில் ரிலீஸ்
சார்பட்ட பரம்பரை திரைப்படம் கடந்த மாதம் 21ஆம் தேதி அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. 1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை போட்டியை அப்போதைய அரசியல் நிகழ்வுகளுடன் கலந்து சுவாரசியமாக கொடுத்திருந்தார்.

ஒவ்வொருவரும் கேரக்டராக வாழ்ந்து
இந்தப் படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவருமே கேரக்டராக வாழ்ந்திருந்தனர். கபிலனாக நடித்திருந்த ஆர்யா, வேம்புலியாக நடித்த ஜான் கோக்கென், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி, டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல், டாடியாக நடித்த ஜான் விஜய் என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

3 மணி நேரம் - சலிப்பு தட்டவில்லை
படம் கிட்டதட்ட 3 மணி நேரம் என்றாலும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டவில்லை. அடுத்து என்ன என்பதை போலவே ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. சார்பட்டா பரம்பரை படம் ரிலீஸ் ஆகி 20 நாட்களுக்கு மேல் ஆகியும் அந்த படம் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

ஆர்யாவின் கடின உழைப்பு அர்ப்பணிப்பு
ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் ஆர்யாவின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்த பிரபலங்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

நேரில் அழைத்து பாராட்டிய கமல் ஹாசன்
படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். அண்மையில் படத்தை பார்த்த நடிகர் கமல் ஹாசன் மொத்த படக்குழுவையும் அழைத்து நேரில் சந்தித்தார். இயக்குநர் பா ரஞ்சித் உட்பட படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் பாராட்டிய கமல் ஹாசன், மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

படக்குழுவுக்கு இயக்குநர் சேரன் பாராட்டு
சார்பட்டா பரம்பரை படக்குழுவை நடிகர் கமல் ஹாசன் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த பிரபல இயக்குநரான சேரன் மொத்த படக்குழுவையும் பாராட்டி தீர்த்துள்ளார்.

கபிலன் தொடங்கி பாக்கியம் வரை
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில்
கபிலன் தொடங்கி பாக்கியம் கதாபாத்திரங்கள் வரை அத்தனை பேரும் சிறப்பாக ஈடுபாட்டுடன் உழைத்திருந்தார்கள்.. ஒருவரின் முயற்சிகூட வீண்போகவில்லை.. கலை அரசன், அனுபமாவின் சிறு சிறு முகபாவனைகள் அழகு.. என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஃபிரேமிலும் செதுக்கி இருக்கிறார்..
மற்றொரு ட்வீ ட்டில் ஆர்யாவின் கடின உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.. வேறு யாரும் நடித்திருக்கலாம் ஆனால் இவ்வளவு பொருந்தி இருப்பார்களா, உழைத்திருப்பார்களா என தெரியவில்லை.. இயக்குநர் பா ரஞ்சித் உங்களை ஒவ்வொரு ஃபிரேமிலும் செதுக்கி இருக்கிறார்.. விடா முயற்சியின் மூலம் வென்றிருக்கிறீர்கள் ஆர்யா.. வாழ்த்துக்கள்.. என பதிவிட்டுள்ளார்.

சேரனுக்கு நன்றி சொன்ன ஆர்யா
இயக்குநர் சேரனின் இந்த பதிவை பார்த்த சார்பட்டா படக்குழுவினர் ஹேப்பியாகியுள்ளனர். இயக்குநர் சேரனின் அந்த பதிவை ரீட்வீ ட் செய்து நன்றி தெரிவித்து வருகின்றனர். சேரனின் இந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீட்வீ ட் செய்துள்ள நடிகர் ஆர்யா, மிக்க நன்றி சார்.. உண்மையிலேயே நிறைய அர்த்தம் உள்ளது சார். கால் பண்ணதுக்கும் நன்றி சார் என பதிவிட்டுள்ளார்.

பல வெற்றி படங்கள்
இயக்குநர் சேரன் பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பொற்காலம், தேசியகீதம், வெற்றிக்கொடிக்கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோ கிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

பிக்பாஸில் பங்கேற்ற இயக்குநர் சேரன்
இயக்குநர் சேரன் நான்கு தேசிய விருதுகள், 6 தமிழக அரசின் விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சேரன். இதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும மரியாதையையும் பெற்றார் சேரன்.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் சேரன்
கடைசியாக இயக்குநர் சேரன் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் சேரன் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். ஶ்ரீ வாரி பிலிம் சார்பாக தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











