For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வடிவேலுவை மிரட்டுவது ஒட்டுமொத்த தமிழர்களையும் உரசிப்பார்க்கும் செயல்!- இயக்குநர் கவுதமன்

  By Shankar
  |

  சென்னை: தமிழ் மண்ணின் பெரும் கலைஞனான வடிவேலுவை மிரட்டுவது, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் உரசிப் பார்க்கும் செயல். இதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் வ கவுதமன் எச்சரித்துள்ளார்.

  தெனாலிராமன் படம் குறித்து நடிகர் வடிவேலுவை தெலுங்கு அமைப்பு என்ற பெயரில் சிலர் மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

  அவர் வீட்டை முற்றுகையிடவும் முயன்றுள்ளனர். போலீசார் உரிய பாதுகாப்பு தராத நிலையில், வடிவேலு தமிழ் அமைப்புகளிடம் முறையிட்டார்.

  Director Gouthaman supports Vadivelu

  வடிவேலுவுக்கு ஆதரவாக நின்றிருக்கும் முதல் கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சிதான். இந்த மண்ணின் கலைஞன் வடிவேலுவை மிரட்ட எவர் முனைந்தாலும் நாம் தமிழர் கட்சி வேடிக்கைப் பார்க்காது என உறுதியாகத் தெரிவித்தார்.

  அடுத்து இயக்குநர் வ கவுதமன் வடிவேலுவை ஆதரித்து அறிக்கை அனுப்பியுள்ளார்.

  அந்த அறிக்கை:

  என் எஸ் கிருஷ்ணன், டணால் கே ஏ தங்கவேலு மற்றும் கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையின் உச்சமான கலைஞன் வடிவேலு. அப்படிப்பட்ட ஒருவரை இந்தத் தமிழ் மண்ணில், அதுவும் அவர் வீட்டுக்கே சென்று ஒரு கூட்டம் மிரட்டிச் சென்றிருப்பது வேதனைக்குரியது. மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயல் இது. மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

  ஒரு திரைப்படம் என்பது கதை ஆசிரியரால் தொடங்கி தயாரிப்பாளரால் திட்டமிடப்பட்டு இயக்குனரால் செயல்படுத்துவது ஆகும். அப்படியிருக்க நேரடியாக அதில் நடித்த நடிகனை முற்றுகையிடுவது என்பதும், அவமானப்படுத்துவதும்,அச்சுறுத்துவதும் நேர்மையானதல்ல.

  தமிழ் இனம் இந்த மண்ணில் சாதி, மதம், இனம் மொழி கடந்து அனைத்துக் கலைஞர்களையும் சாதனையாளர்களையும் சான்றோர்களையும் போற்றிப் பாதுகாத்த இனமும் கூட.

  தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட எழுபது சதவீதத்தினர் - குறிப்பாக நடிக, நடிகைகள் - பிற மாநிலத்தவர் அல்லது பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் இதுவரை நாம் பிரித்துப் பார்த்திராமல், ஒரே குடும்பமாக கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தெனாலிராமன் விவகாரத்தில் சகோதரர் வடிவேலுவிடம் அத்துமீறியவர்களின் செயல்பாடுகளை நினைக்கும்போது, எங்கே இதற்கெல்லாம் வேட்டு வைத்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  வடிவேலு இனம், மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்க வைத்த கலைஞன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திரைக்கு வருவதை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

  சம்மந்தப்பட்டவர்கள் ஏதாவது சந்தேகம் என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி உரிய முறையில் நடந்துகொள்வதுதான் அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது. அதனை விட்டுத்து இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதை வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டு மொத்த தமிழினத்தையோ உரசிப்பார்க்கும் நிகழ்வாக கருதி அதற்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை கோடிக்கணக்கான மானமுள்ள தமிழர்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

  -இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

  English summary
  Director Va Gouthaman extended his support to Vadivelu in Tenaliraman issue.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X