'சாதி வெறியனா நான்...?' பிரஸ் மீட்டில் இயக்குநர் கெளதமன் ஆவேசம்.. படையாண்ட மாவீரா பஞ்சாயத்து!
சென்னை: "சாதி வெறியனா நான்...?" என ’படையாண்ட மாவீரா’ படத்தின் பிரஸ் மீட்டில், கேள்விகளால் சூழ்ந்து வாக்குவாதங்களால் இயக்குநர் கெளதமன் ஆவேசமாகி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு படமாக படையாண்ட மாவீரா படத்தை உருவாக்கி நடித்துள்ளார் இயக்குநர் கெளதமன். காடுவெட்டி குருவின் வரலாற்றை சினிமாவுக்காக சமரசம் செய்து எதார்த்தம் இல்லாமல் எடுத்து இருப்பது ஏன் என்ற கேள்விக்கு, "ஆர்ட் ஃபிலிம் எடுத்தா பார்ப்பீங்களா? காசு போட்டவனுக்கு பணமும் வரணும். அதனால் தான் கமர்ஷியல் படமாக எடுத்தோம்" என்று பதிலளித்தார் இயக்குநர் கெளதமன்.

மேலும் பேசிய அவர், "உங்களுக்குப் பாடல், முன்னோட்டம் பார்த்து சிலிர்ப்பு ஏற்பட்டதா? அப்ப அது முக்கியம் தானே! அழுக்கு வேட்டியும் சட்டையும் போட்டு சாதரண ஒளிப்பதிவாளரை வச்சு படைப்பை எடுத்தா இந்த வார்த்தை சொல்லுவீங்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
காடுவெட்டி குரு ஒரு சமூகம் சார்ந்து இருந்தார் என்று பேசப்படுகிறதே, ஆனால் படத்தில் எல்லா சமூகத்துக்கும் பொதுவானவராகக் காட்டியுள்ளீர்களே என்ற கேள்விக்கு, "என் படம்தான் பதில் சொல்லணும். பிரஸ் ஷோ போடுவோம்ல அந்த பிரஸ் மீட்டில் இதைப் பற்றி பேசுவோம்" என்றார்.
காடுவெட்டி குரு டைட்டிலே பிரச்சனை என்று சொன்னார்கள். ஆனால் ஆர்.கே.சுரேஷ் காடுவெட்டி என்ற டைட்டில் வைத்தபோது ஏன் பிரச்சினை வரவில்லை என்ற கேள்விக்கு, "படம் பாருங்க, எல்லாத்தையும் சொல்லி இருக்கேன்" என்று முடித்தார்.
கௌதமன் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்துதான் கதையை உருவாக்கியதாகவும், பொருளாதார ரீதியாக விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சுரேஷ் காமாட்சி கூறியதாகவும், கிடைக்காத பட்சத்தில் வேறு சில ஹீரோக்களை வைத்து பிரமாண்டமாக எடுக்கலாம் என்று நினைத்ததாகவும் அவர் கூறினார். ஆனால் கடைசியில் அவரே நடிக்க வேண்டியதாயிற்று என்றும் கூறினார்.
தொடர்ந்து சில முக்கிய தலைவர்கள் பற்றியும் படம் எடுக்க இருப்பதாகக் கூறியதற்கு, "நிச்சயமாக எடுப்பேன். சந்தனக்காடு படத்தில் என் இனத்தை அழித்த அதிகார வர்க்கத்தினரை எரித்துச் சாம்பலாக்கினேன். என் இனத்துக்கு எதிரானவன் எமனாக இருந்தாலும் யுத்தம் செய்வேன்" என்று ஆவேசமாகப் பேசினார்.

வசனகர்த்தா ஒருவர் பேசுகையில், தலைவர் ஒரு சமூகத்துப் பெண்ணை வெட்டு எனக் கூறியதாகப் பேசினார் ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை என்று பத்திரிகையாளர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த இயக்குநர், "அதுக்கான இடம் இது இல்லை" என்று அந்த விவாதத்தை முடித்தார்.
தமிழரசன் கதையை எடுக்கப்போகும்போது பொன்பரப்பு சம்பவத்திலிருந்து எல்லாவற்றையும் சரியாக எடுப்பீர்களா என்ற கேள்விக்கு, "அது ஒரு நெருப்பு சிற்பமாக வரும். தமிழரசன் அடித்து கொல்லப்பட்ட இடத்தில் வாட்டர் டேங்க் கட்டித் தரச் சொன்னார்கள்" என்று அந்த சம்பவத்தின் வலியை விவரித்தார்.
காடுவெட்டி குரு எப்போதுமே மஞ்சள் சட்டை அணிந்திருப்பார். அதற்கான காரணம் இதுவரை யாரும் சொல்லவில்லை. அதை ஏன் படத்தில் தெளிவுபடுத்தவில்லை என்ற கேள்விக்கு, மஞ்சள் வீரத்திற்கான அடையாளம் என்றும், அவர்கள் போர்குடி என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும்,"இந்த மண்ணையும் உன்னையும் காக்க ஒரு தாய் மக்களா நில்லுங்க. இல்லாட்டி உங்களுடைய 50 ஆயிரம் ஆண்டு வரலாறு தடையில்லாம போயிரும். மொழிக்கும் இனத்துக்கும் சம்பந்தமில்லாத கூட்டம் உங்களை அடிமைப்படுத்தி அழிச்சிடும்" என்று கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் என்டர்டெயின்மென்ட் படங்கள் தான் பார்க்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த படத்தை 2k கிட்ஸ் எப்படி பார்ப்பார்கள் என்ற கேள்விக்கு, "உங்க வேலை படம் எடுத்துட்டுப் போறது. இந்த படைப்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தால், அது உங்க வேலையும்தான்" என்று முடித்தார்.
ராஜேந்திர சோழனும் ராஜராஜ சோழனும் நாடு முழுக்க கோயில் கட்டியிருக்கான். ஏன் தஞ்சை பெரிய கோயிலை மட்டும் பார்க்கிறோம்? அலங்காரமும் அழகும் முக்கியம். சரியாகச் செய்தால் ஆளில்லாமல் இழுக்கப்படுகிற தேர் மாதிரி போயிட்டே இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
காடுவெட்டி குரு மறைவுக்குப் பிறகு அவரது இனத்தாரே அவருக்குத் துரோகம் இழைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அது பற்றி படத்தில் காமித்திருக்கீங்களா என்ற கேள்விக்கு, "நான் துளசி செடியை தேடி போகிறவன், கஞ்சா செடியைத் தேடிப் போகிறவன் இல்லை" என்று கூறி முடித்தார்.
சமீபகாலமாக சாதியப் படங்கள் அதிகமாக வருகின்றன. இது மோதலை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, "என் படைப்பில் எங்கேயாவது ஒரு சின்ன பிரச்சனை உங்களுக்கு வந்திருக்கா?" நான் என்ன சாதி வெறியனா? என ஆவேசமாக பேச பிரஸ் மீட்டே பரபரப்படைந்தது.


Click it and Unblock the Notifications











