தயாரிப்பாளர்களே பாக்ஸ் ஆபிஸ் பொய் சொல்றாங்க.. துணிவு பட இயக்குநர் வினோத் பரபரப்பு பேச்சு!
சென்னை: துணிவு பட இயக்குநர் அ வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாக்ஸ் ஆபிஸ் ஸ்கேம் பற்றியும் ரொம்பவே துணிவுடன்பேசி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆயிரம் கோடி, ஐநூறு கோடி, 200 கோடி வசூல் எல்லாம் உண்மையே கிடையாது என்றும் நடிகர்களை திருப்திப்படுத்தவே தயாரிப்பாளர்கள் இப்படியொரு பொய்யை சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் என பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் 210 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், துணிவு படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் இதுவரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

வலிமை 200 கோடி
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் அ வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 200 கோடி வசூல் செய்ததாக டிராக்கர்கள் வெளியிட்ட தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் ரீட்வீட் செய்திருந்தார். அடுத்ததாக மீண்டும் அஜித் படம் பண்ண போகிறோம் என்கிற சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில் தான் அவர் அப்படி ட்வீட் போட்டாரா என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ட்ரோல் செய்யப்படும் வம்சி
நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு எழுந்த விமர்சனங்களை பார்த்து கடுப்பான நிலையில், இயக்குநர் வம்சி சமீபத்தில் அளித்த பேட்டி அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. விஜய் கஷ்டப்பட்டு நடித்தார். ரிஹர்சல் பண்ணிட்டு வந்து டான்ஸ் ஆடினார். சீரியல்னு சொல்லாதீங்க, தன்னை தெலுங்கு இயக்குநர் என சொல்வது வருத்தம் அளிக்கிறது என பேசியது கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

210 கோடி வசூல் பொய்யா
மேலும், வாரிசு திரைப்படம் 7 நாட்களில் அதிகாரப்பூர்வமாக 210 கோடி ரூபாய் என அறிவித்த நிலையில், அந்த வசூல் முற்றிலும் பொய்யான தகவல் என திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நபர்கள் பேசி வருவது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு 500 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ரஜினிகாந்தின் 2.0 800 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் சொல்வது எல்லாமே பொய்யா என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வினோத் பேச்சு
இயக்குநர் வினோத் சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்கள் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் வசூலை சொல்லும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் என பேசியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படத்தின் வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், வாரிசு படத்தை டார்கெட் செய்து தான் வினோத் இப்படி பேசி உள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

எது உண்மை
படம் நல்லா இருக்கா இல்லையா என்கிற பஞ்சாயத்தை எல்லாம் தாண்டி படம் எவ்வளவு கோடி ரசிகர்களை ஏமாற்றி வசூல் செய்துள்ளது என்கிற பாக்ஸ் ஆபிஸ் போட்டி தான் அதிகரித்துள்ளது. நடிகர்களின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ள சூழ்நிலையில், அவர்கள் கேட்கும் 100க்கும் மேற்பட்ட கோடி சம்பளத்தை கொடுத்து குறைவான பட்ஜெட்டில் சொதப்பல் படத்தை எடுத்து விட்டு பாக்ஸ் ஆபிஸையும் அதிகமாக சொல்லும் சூழலுக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுகின்றனரா? அதனால் தான் சில நிறுவனங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அதிகாரப்பூர்வமாக சொல்வது இல்லையா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











