பிட்டு பட சீன் டயலாக்.. டியூட் இயக்குநர் கொடுத்த பலே விளக்கம்.. விட்டு விளாசும் ரசிகர்கள்
சென்னை: கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டியூட் திரைப்படம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. இப்படம் நூறு கோடி ரூபாய் வசூலித்திருப்பதன் மூலம் வரிசையாக மூன்று முறை 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஹீரோ என்ற பெருமையை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இது ஒருபக்கம் இருக்க படத்தில் வந்த ஒரு வசனத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில் அதற்கு பலே விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர். அதனை ரசிகர்கள் விளாச ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கும் டியூட் திரைப்படத்தை கீர்த்திஸ்வரன் இயக்கியிருக்கிறார். இதுதான் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் டிராவிட் என பலர் நடித்திருக்கிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது.
100 கோடி ரூபாய் வசூல்: வசூலில் படம் டாப் கியரில் சென்றிருக்கிறது. வெளியாகி ஒரே வாரத்தில் நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது. இப்படத்துக்கு முன்னதாக பிரதீப் நடித்திருந்த டிராகன், லவ் டுடே ஆகிய இரண்டு படங்களும் இதேபோல் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்திருந்தன. இப்படமும் அதே ரிசல்ட்டை பெற்றிருப்பதால் தொடர்ச்சியாக மூன்று முறை 100 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெருமையை பெற்றிருக்கிறார் பிரதீப்.

போல்டான அட்டெம்ப்ட்: கமர்ஷியல் ரீதியாக படத்தை இயக்குநர் நகர்த்தி சென்றிருந்தாலும் ஆணவ கொலைக்கு எதிரான மனநிலையை அவர் வெளிப்படுத்தியிருந்தது அனைவரிடமும் பாராட்டை பெற்றது. இனி தான் இயக்கப்போகும் படங்களிலும் இந்த மாதிரியான விஷயங்களைத்தான் பேசுவேன் என்றும் கீர்த்திஸ்வரன் படத்தின் வெற்றி விழாவில் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விமர்சனங்களும் உண்டுதான்: படத்தில் பேசப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், அதில் வந்த ஒரு வசனம் பெரும் விமர்சனத்தை சந்தித்தது. அதாவது பிரதீப்பிடம் மமிதா காதலை சொல்லும் காட்சியில், 'நீ என்ன டி பிட்டு படத்துல வர பொசிஷன்ல இருக்க' என்று வசனம் வரும். இதனை பலரும் கண்டித்தார்கள். இந்நிலையில் அந்த வசனம் தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர்.
கீர்த்திஸ்வரனின் விளக்கம்: தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "அந்த வசனத்துக்கு எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. நான் அந்த வசனத்தை நார்மலைஸ் செய்யவில்லை. ஆனால் நான் பார்த்த நண்பர்கள் அவர்களது நண்பர்களிடம் இப்படித்தான் பேசுகிறார்கள். அதேபோல் சின்ன வயதிலிருந்தே ஒரு பெண் பழகும்போது அவர் பெண்ணாக தெரிவதைவிட நட்பில் ஒரு பகுதியாகத்தான் தெரிகிறார். எனவே ஆண் நண்பரிடம் என்ன பேசுவேனோ அதேபோல்தான் பெண் நண்பரிடமும் பேசுவேன்.
அவளுக்கு அது ஹர்ட் ஆகாது என்பது தெரியும். 20 வருடங்கள் ஒன்னா மண்ணா பழகிருக்கோம். எனவே என்ன வேண்டுமானாலும் பேசுவோம். சொல்லும் வார்த்தை ஒன்று, அதன் அர்த்தம் ஒன்றாக இருக்கும் என அவளுக்கு புரியும். அந்த ஸ்பேஸில்தான் டயலாக்கை வைத்தேன்' என்றார். அதேசமயம் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ, 'மோசமான டயலாக்கை வைத்துவிட்டு இப்படி இயக்குநர் முட்டு கொடுக்கிறாரே' என்று கீர்த்தியை விளாச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











