கேப்டன் பிரபாகரன் வசூல்.. தியேட்டரில் தன்னை மறந்து ஆடிய பேரரசு.. அந்த ஸ்டெப் தான் ஹைலைட்!
சென்னை: நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் 'கேப்டன் பிரபாகரன்'. 30 வருடங்கள் கழித்து 4K தொழில்நுட்பத்துடன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வந்த இயக்குநர் பேரரசு தன்னை மறந்து தியேட்டரில் ஆட்டம் போட்டார்.
1991ஆம் ஆண்டு ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்துடன் இணைந்து சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி எனப் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். விஜயகாந்தின் 100வது படமான இப்படம் 300 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி நல்ல வசூளை பெற்றது. தற்போது 30 வருடங்கள் கழித்து 4k தொழில்நுட்பத்துடன் இந்தப் படம் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது.

ஆட்டம் போட்ட பேரரசு: படம் வெளியாகி மூன்று நாட்களில் இதுவரை 1.25 கோடியை வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் படம் 5 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேப்டன் பிரபாகரன் படத்தை, விஜயகாந்தின் பிறந்த நாளான இன்று இயக்குநர் பேரரசு, ஆர்வி உதயகுமார், செல்வமணி, மன்சூர் அலிகான் மற்றும் பல நடிகர்கள் ஒன்றாக சேர்த்து படம் பார்த்தனர். அப்போது, பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஆட்டமா தோரோட்டமா பாட்டுக்கு இயக்குநர் பேரரசு தன்னையே மறந்து தன் அருகில் அமர்ந்து இருந்த மன்சூர்அலிகானுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு, மன்சூர் அலிகானுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பெயர் காரணம் இதுதான்: முன்னதாக, கேப்டன் பிரபாகரன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்த கொண்டு பேசிய விஜயபிரபாகரன், அப்பா இதுவரை 156 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இதே போல அவர் நடித்த திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி இன்றைய இளம் தலைமுறையினருக்கும், பிலிம் இன்ஸ்டூட் மாணவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். எனக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்ததற்கு முக்கிய காரணமே இந்த திரைப்படம் தான். கேப்டன் பிரபாகரன் படம் எடுக்கும் போது தான், நான் பிறந்தேன். அதேபோல விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன் நினைவாக அப்பா எனக்கு இந்த பெயரை வைத்ததாக பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார். இந்த பெயரை வைத்ததற்கான அர்த்தம் இப்போது உனக்கு புரியாது, ஆனால், நான் இல்லாத போதும் இந்த பெயர் உன்னை உயர்த்தும் என்று அப்பா ஏற்கனவே எனக்கு சொல்லி இருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்று இப்போது தான் எனக்கு புரிகிறது என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











