ஜிபி முத்து தான் வெற்றி நாயகன்… பாராட்டிய பிரபல இயக்குநர்… அப்போ நடிக்க சான்ஸ் கிடைக்குமா?
சென்னை: கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக் டாக் புகழ் ஜிபி முத்துவும் போட்டியாளராக பங்கேற்றார்.
ஆனால், பத்து நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த ஜிபி முத்து அவரது மகன் உடல்நிலை காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்துவை விஜய் சேதுபதி பட இயக்குநர் நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார்.

பிக் பாஸில் ஜிபி முத்து
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் டிக் டாக் மூலம் புகழ்பெற்ற ஜிபி முத்துவும் பங்கேற்றார். முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜிபி முத்து, அங்கு யாருமே இல்லாததால் கேமராக்களைப் பார்த்து பயத்தில் அவர் கொடுத்த ரியாக்ஷன்கள் செம்ம வைரலாகின. பிக் பாஸ் வீட்டுக்குள் தனியாக இருக்க பயமா இருக்கு சார் எனக் கூறிய ஜிபி முத்து, ஒருகட்டத்தில் கமலையே துணைக்கு உள்ளே வாங்கன்னு கூப்பிட்டு அதகளம் செய்தார். முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளராக கொண்டாடப்பட்டார் ஜிபி முத்து.

முதல் தலைவர்
அதேபோல், முதல் நாள் நிகழ்ச்சியில் "ஆதாம் யார்" எனக் கேட்டு கமலை அலற வைத்த ஜிபி முத்து, நாளாக நாளாக பிக் பாஸ் வீட்டின் ராஜாவாக மாறிப் போனார். டாஸ்க்கில் வெற்றிப் பெற்றதோடு அனைவரது சார்பிலும் முதல் வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், சக போட்டியாளர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் கலக்கி வந்தார். இதனால் ஜிபி முத்துவுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்ல, தீபாவளிக்கு முன்பே எதிர்பாராதவிதமாக மிகப் பெரிய ட்வீஸ்ட் ஒன்று அரங்கேறியது.

வீட்டை விட்டு வெளியேறினார்
ஆதாம் தெரியாது ஆனால் பாதாம் தெரியும் என பல அட்ராசிட்டிகளை அடித்து வந்த ஜிபி முத்து, இன்னொரு பக்கம் சக போட்டியாளர்களுக்கு உதவி செய்து அனைவரையும் தன்பக்கம் வைத்திருந்தார். ஆனால், அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தார். அதனை கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் கமலிடமே நேரடியாக கூறிய ஜிபி முத்து, பணம், புகழை விட மகன் தான் முக்கியம் எனக் கூறிவிட்டு ஊர் கிளம்பினார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ஒரு கட்டத்தில் நடிகர் கமல்ஹாசனே கண் கலங்கிப் போனார்.

இயக்குநரின் பாராட்டு
இதனையடுத்து உடனடியாக சொந்த ஊர் திரும்பிய ஜிபி முத்து, தன் மகன், மகள்களுடன் பிரியாணி சாப்பிட்டு தீபாவளி கொண்டாடினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் பயங்கரமாக வைரலாகின. இந்நிலையில், பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ஜிபி முத்துவை பாராட்டி டிவீட் செய்துள்ளார். அதில், "வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கமல் கேட்டும் கேளாமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் GPமுத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், புகழ், பணம் எதையும் விரும்பாத ஜிபி முத்துவை பாராட்டியது மட்டும் இல்லாமல், இயக்குநர் சீனு ராமசாமி தனது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











