விஜய்யின் தவெக மதுரை மாநாடு.. ரொம்ப கவலையா இருக்கு.. வசந்த பாலன் விளாசல்!
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான படம் மார்கன். இந்த படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்திருந்த அஜய் தீஷன். இவர் தற்போது விஜய் ஆண்டனி தயாரிப்பில் பூக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வசந்த பாலன் நடிகர் விஜய் பெயரைக் குறிப்பிடாமல் அவரது அரசியல் கட்சியின் மதுரை மாநாட்டை கடுமையாஜ விமர்சித்து பேசினார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் வசந்த பாலன் பேசுகையில், " நான் சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டைப் பார்த்தேன். மாநாட்டைப் பார்த்தபோது மாநாட்டிற்கு வந்த இளைஞர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருக்கிறார்கள். வெயிலில் கருகி சாகிறார்கள். மேடையில் இருந்து தூக்கி வீச படுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் கவலை அளிக்கும் படியாக இருந்தது. ஏதோ ஒரு விதத்தில் இந்த இளைஞர்களை நாம் கவரத் தவறி விட்டோம் என்று தோன்றியது. அந்த இளைஞர்களை அரசியல் படுத்தத் தவறிவிட்டோம், அவர்களின் குரலை பேச தவறி விட்டோம் என்று தோன்றியது.

அரசியல் படுத்தப்படாத கூட்டம்: அவர்களின் குரல் சினிமாவில் பதிவாகவே இல்லை. அந்த இளைஞர்களின் குரலை கடந்து தமிழில் வேறு வேறு கதைகள் தான் படமாக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா என்று வேறு வேறு மக்களின் வாழ்வியல் படங்களாக வெளியாகிறது. இந்த இளைஞர்களின் மொழி, இந்த இளைஞர்களின் உலகம், இந்த இளைஞர்களின் குரல் என மொத்தமாகவே பதிவாகாமல் இருப்பதால் தான், அந்த குரல்கள் வேறு திசையை நோக்கிச் சென்று விடுகிறது என்பது அந்த கூட்டத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது.
தமிழ் சினிமா தவறவிட்டவை: அவர்களின் குரல் பேசப்பட வேண்டும், அவர்களின் மனது என்ன? அவர்களின் உலகம் என்ன? அவையெல்லாம் பேசப்பட வேண்டும் என்று எனக்குள் யோசனை வந்து கொண்டே இருந்தது. கர்நாடக சினிமா மற்றும் மலையாள சினிமாவில் அந்த இளைஞர்களின் உலகம், காதல், மொழி, குரல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழில் அப்படி பேசப்படவில்லை. நீண்ட காலமாக காதல் படங்கள் வரவில்லை. இளைஞர்களின் உணர்வுகள் படமாக்கப்படாமலே இருந்து வருகிறது. இப்படி நான் யோசித்துக் கொண்டு இருக்கையில் தான் பூக்கி படம் உருவாகிறது.

வாழ்த்து: ஸ்க்ரீன் ரைட்டர் பரிதி எனக்கு நன்றாகவே தெரியும், நான் தலைமைச் செயலகம் வெப் சீரீஸ் எடுக்கும் போது அதன் ஸ்கிரீன் ரைட்டராக இருந்தார். மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் நான் சந்தித்த ஸ்கீரின் ரைட்டர் என்றால் அது பரிதி தான். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள். விஜய் ஆண்டனிக்கும் வாழ்த்துகள்" என்று பேசினார்.ம் இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ஏற்கனவே விஜய் மாநாடு குறித்து ஏற்கனவே திரையுலகில் சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நிலையில் இயக்குநர் வசந்த பாலனின் கருத்து பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், விவாதத்தை மேலும் சூடாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











