»   »  "லிங்கா' திரைப்பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது நியாயம் அல்ல- இயக்குநர் விக்ரமன்

"லிங்கா' திரைப்பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது நியாயம் அல்ல- இயக்குநர் விக்ரமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: "லிங்கா' திரைப்பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது நியாயம் அல்ல என்று, திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் கூறினார்.

"புது வசந்தம்', "பூவே உனக்காக', "வானத்தைப் போல', "சூரியவம்சம்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களுடன் 25 திரைப்படங்களை இயக்கி சூப்பர் ஹிட் இயக்குநராக வலம் வந்த இயக்குநர் விக்ரமனுக்கு ஈரோட்டில் கவிதாலயம் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை "சிகரம் தொட்ட இயக்குநர் விருது' வழங்கப்பட்டது.

விருதைப் பெற வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ் சினிமா உலகம் தற்போது ஆரோக்கியமாக உள்ளது. உதாரணமாக, "சூது கவ்வும்', "பீட்சா', "மைனா', "அங்காடித் தெரு' போன்ற படங்களைக் கூறலாம். குறிப்பாக, "அங்காடித் தெரு' திரைப்படம் தமிழில் வராமல் வேறு மொழியில் வந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும். அந்தளவுக்கு மிகச் சிறந்த படம் அது.

Distributors shouldn't ask compensation from Rajini, says Director Vikraman

தற்போது சினிமா வியாபாரம் 99 சதவீதம் தோல்வி அடைவதற்கு திருட்டு விசிடி ஒரு காரணம் என்றாலும், தியேட்டர் டிக்கெட் விலையும் ஒரு காரணமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள 5 பேர் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க நினைத்தால் குறைந்த பட்சம் ரூ.1500 செலவாகும். அதையே ரூ.50 செலவில் சிடியில் பார்த்து விடலாம் என மக்கள் கருதத் தொடங்கிவிட்டனர்.

திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பதை மக்கள் குறைத்துக் கொண்டதால்தான் 2,600 திரையரங்குகள் இருந்த தமிழகத்தில் தற்போது வெறும் 964 திரையரங்குகள்தான் உள்ளன. ஆனால், சினிமாவை அழிக்க முடியாது. சினிமாதான் எனக்கு எல்லாமே என நினைத்து தரமான இயக்குநர்கள் வந்து கொண்டிருக்கும் வரையில் சினிமா வாழும்.

எனவே, மக்களை திரையரங்குக்கு வரவழைக்க வேண்டும் என்றால், டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. சினிமாவுக்கு வரி விலக்கு அளித்தாலும் அதன் பலன் ரசிகர்களுக்குச் செல்வதில்லை. அது இன்னொரு முக்கியப் பிரச்சினை. வரி விலக்கு பலனை ரசிகர்கள்தான் அனுபவிக்க வேண்டும்.

நான் இயக்கிய அனைத்துப் படங்களும் வேறு மொழிகளில் "டப்பிங்' செய்தபோது அந்தந்த மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. அடுத்து நான் இயக்கப் போகும் படமானது, "புது வசந்தம்' போல் திருப்புமுனையாக அமையும்.

நடிகர் விஜய்யை வைத்து "பூவே உனக்காக' இயக்கியபோது அவரது இமேஜ் வேறு விதமாக இருந்தது. தற்போது அவரும், அஜித்தும் அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டனர். அதனால் அவர்களை வைத்து நான் படம் இயக்கினால் அவர்களது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

வெற்றிக்கு பிரமாண்டம் தேவையில்லை. கதை, திரைக்கதை நன்றாக அமைந்து விட்டால் போதும்.

"லிங்கா' பட நஷ்டத்தை ரஜினியிடம் கேட்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. ஏற்கெனவே "பாபா', "குசேலன்' படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியவர் ரஜினி.

ஆனால் "லிங்கா' பட நஷ்டத்தை தயாரிப்பாளரிடம், வாங்கி வெளியிட்டவர்களிடம்தான் கேட்கவேண்டும். நஷ்ட ஈடு கேட்பவர்கள் உண்மையான வசூல் கணக்கைக் காட்ட வேண்டும்," என்றார்.

பேட்டியின்போது கவிதாலயம் ராமலிங்கம் உடன் இருந்தார்.

English summary
Director Vikraman says that the distributors of Lingaa shouldn't demand the compensation from Rajini for Lingaa loss.
Please Wait while comments are loading...