இந்தி தேசிய மொழி கிடையாது.. அறியாமையில் இருக்கீங்க அஜய் தேவ்கன்.. ‘குத்து’ ரம்யா தரமான பதிலடி!
பெங்களூரு: அஜய் தேவ்கனின் அறியாமை தான் இப்படியொரு ட்வீட்டை அவர் போடக் காரணம் என 'குத்து' ரம்யா போட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தி தேசிய மொழி எனக் கூறிய அஜய் தேவ்கனுக்கு தென்னிந்திய ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கர்நாடகாவில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து தலைவர்களும் அஜய் தேவ்கனை கண்டித்து ட்வீட் போட்டுள்ளனர்.

அறியாமையில் அஜய் தேவ்கன்
இந்தி தான் தேசிய மொழி என கிச்சா சுதீப்பிடம் சொல்லி பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். அதுமட்டுமின்றி சினிமா துறையினரின் கோபத்தை கிளறும் வகையில் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறீர்கள் என அஜய் தேவ்கன் கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் அறியாமையில் அஜய் தேவ்கன் உள்ளார், அவருக்கு இந்திய சாசனத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கமெண்ட் போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

ராம் கோபால் வர்மா விளாசல்
கன்னட திரைப்படமான கேஜிஎஃப் 2 படம் இந்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தான் உங்களுக்கு பொறாமை அஜய் தேவ்கன் என பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மா நேரடியாகவே விளாசித் தள்ளி உள்ளார். கன்னட நடிகர்கள் யாரும் வாய் திறக்காத நிலையில், கன்னட நடிகை ரம்யா இந்த விவகாரத்தில் பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

'குத்து' ரம்யா
சிம்புவின் 'குத்து', தனுஷின் பொல்லாதவன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா இந்த விவகாரத்தில் அஜய் தேவ்கனுக்கு எதிராக தற்போது போட்டுள்ள ட்வீட் கன்னட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை எழுப்பி உள்ளது. நடிகர் கிச்சா சுதீப் இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என நினைத்தாலும், பொதுவெளியில் அஜய் தேவ்கன் போட்ட அந்த ட்வீட்டுக்கு பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அஜய் தேவ்கனுக்கு அட்வைஸ்
இந்தி தேசிய மொழி கிடையாது. அஜய் தேவ்கனின் அறியாமை தான் அவரை இப்படி ட்வீட் போட வைத்திருக்கிறது. புஷ்பா, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களின் வெற்றி தான் இந்த பிரச்சனைக்கு காரணம் எனக் கூறியுள்ள ரம்யா, உங்கள் படங்களை நாங்கள் ரசித்துப் பார்ப்பது போல எங்கள் படங்களையும் நீங்கள் ரசித்து பாருங்கள் எனக் கூறியுள்ளார்.

மோடியே உதாரணம்
இந்தியா - ஜப்பான் குறித்த ட்வீட்டில் அந்த நாட்டு மொழியில் ட்வீட் போட்டுள்ள பிரதமர் மோடியின் ட்வீட்டை அஜய் தேவ்கனுக்கு ஷேர் செய்து பிரதமர் மோடியே இதற்கு ஒரு உதாரணம் எனக் கூறியுள்ளார் நடிகை ரம்யா. சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்ட இவர், முன்னாள் லோக் சபா உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











