காதல் மன்னன் படத்தில் எம்.எஸ்.விஸ்நாதனை மிரட்டி நடிக்க வைத்த விவேக் மற்றும் சரண்... எப்படி தெரியுமா?
சென்னை: காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா, அட்டகாசம் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சரண்.
பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரவ்வை வைத்து கடந்த 2019-ஆம் ஆண்டு மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்கிற திரைப்படத்தை கடைசியாக இயக்கியிருந்தார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை எப்படி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தேன் என்பதை பற்றி கூறியிருக்கிறார்

தூர்தர்ஷன் பேட்டி
காதல் மன்னன் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றபோது, ஒரு நாள் விவேக் சரணிற்கு ஃபோன் செய்து தூர்தர்ஷனில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பேட்டி ஓடிக் கொண்டிருக்கிறது, பாருங்கள் என்று கூறினாராம். இவரும் அந்தப் பேட்டியை பார்த்தாராம். தனக்கே உரிய குழந்தைத்தனமான உடல் மொழியோடு எம்.எஸ்.வி அதில் பேசியிருந்திருக்கிறார். பின்னர் விவேக்கிடம், இவரை நம் படத்தில் நடிக்க வைத்தால் என்ன என்று கேட்க, அவரும் நல்ல யோசனையாக இருக்கிறது என்று கூறினாராம்.

நேரடி சந்திப்பு
கதைப்படி அஜித் ஒரு மேன்ஷனில் தங்கி இருப்பதால் அங்கு ஒரு மெஸ் வைத்துக் கொள்ளலாம். அந்த மெஸ்ஸின் முதலாளியாக எம்.எஸ்.வியை நடிக்க வைக்கலாம், கதாபாத்திரத்திற்கு மெஸ் விஸ்வநாதன் என்ற பெயர் வைத்தால் அது எம்.எஸ்.விஸ்வநாதன் என்று ஒலிக்கும் படியாக இருக்கும் என்று அவரது கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டு சரணும் விவேக்கும் எம்.எஸ்.வி வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.

நடிக்க தான் வந்தேன்
ஆரம்ப காலகட்டத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் நடிகராக வேண்டும் என்றுதான் திரைத்துறைக்கு வந்துள்ளார். ஆனால் வாய்ப்பு கிடைக்காததால் இசையமைப்பாளராகி காலத்தால் அழிக்க முடியாத இடத்தை தனக்கென்று பிடித்தார். இப்போது சரணும் விவேக்கும் நடிக்க கேட்கும்போது நீங்கள் என்னிடம் இசையமைக்கதானே கேட்டு வந்திருக்க வேண்டும், நடிக்க கேட்கிறீர்களே என்று நடிக்க மறுத்தாராம். இவர்களும் விடாப்பிடியாக அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வற்புறுத்தியுள்ளனர்

மிரட்டிய கூட்டணி
ஒரு கட்டத்தில் ஒரு கடிதத்தில் உங்கள் மகன் எங்கள் படத்தில் நடிக்க மறுக்கிறார் நீங்கள் தான் அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எழுதி எம்.ஸ்.வி வீட்டிலிருந்த அவரது அம்மாவின் புகைப்படத்திற்கு கீழ் வைத்துவிட்டு, உங்கள் அம்மாவிடம் கூறிவிட்டோம் நடிக்கவில்லை என்றால் உங்கள் அம்மா மன்னிக்க மாட்டார் என்பதுபோல் மிரட்டியுள்ளார்கள். அவரும் உண்மையாகவே பயந்துபோய் இறுதியாக நடிக்க சம்மதித்து ஒரு நிபந்தனை வைத்துள்ளார்.

எம்.எஸ்.வியின் நிபந்தனை
தனக்கு 10 லட்சம் சம்பளம் வேண்டும் என்றும், அதில் 5 லட்சம் ரூபாயை இசையமைப்பாளர் ராமமூர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறினாராம். எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் தனித்தனியாக பணியாற்றத் துவங்கி எம்.எஸ்.விஸ்வநாதன் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்தபோது கூட அதில் வரும் சம்பளத்தில் பாதியை தனது நண்பனுக்கு கொடுத்தது வியப்பளித்தது என்று சரண் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











