ஏன் இப்படி? விஜய் சேதுபதி படத்தில் கொடூரமான வில்லியாக நடிக்கிறாரா நடிகை சாய் தன்ஷிகா?
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிகை சாய் தன்ஷிகா நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம், லாபம். இவர் இதற்கு முன், இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு படங்களை இயக்கியவர் .
'லாபம்' படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ருதி ஹாசன் ஹீரோயின்.

சாய் தன்ஷிகா
மேலும் நடிகை சாய் தன்ஷிகா, ஜெகபதிபாபு, கலையரசன், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இதன், பர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.

லாபம்னா என்ன?
விவசாயத்தையும் விவசாயிகளின் நிலை பற்றியும், லாபம் என்றால் என்ன என்பது பற்றியும் பேசும் இந்தப் படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல, இதன் ஷூட்டிங்கும் தொடங்கப்படாமல் இருந்தது. அரசு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

கொரோனா விதிமுறை
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, கிருஷ்ணகிரி அருகே சமீபத்தில் நடந்தது. இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உட்பட பலர் பங்கேற்றனர். அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் படப்பிடிப்பை காண கூடியதால் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி, ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நெகட்டிவ் கேரக்டர்
பின்னர் சமாதானத்துக்குப் பிறகு படப்பிடிப்பில் இணைந்தார். இந்தப் படத்தில், சாய் தன்ஷிகா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. இதுபற்றி படக்குழு தரப்பில் விசாரித்தபோது, அந்த கேரக்டர் அப்படித்தான் இருக்கும். படம் முழுவதும் நெகட்டிவ் கேரக்டர் போல் தெரிந்தாலும் முடிவில் வேறுவிதமாக இருக்கும்.

சொல்ல முடியாது
அவர் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பதை இப்போதே சொல்ல முடியாது என்று கூறினர். பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை சாய் தன்ஷிகா, நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டரில் லாபம் படத்தில் நடித்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











