அடுத்த அனிருத்தும் சிவகார்த்திகேயனும் ரெடி ஆகிட்டாங்கப்பா.. பிரதீப் ரங்கநாதன் செம டேலண்ட் தான்!
சென்னை: இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் படங்கள் இயக்குவதை காட்டிலும் நடிப்பில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் படம் ரிலீஸ் ஆகி அடுத்த சில நாட்களில் ரூபாய் 100 கோடிகள் கிளப்பில் இணைந்து விடுகிறது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டியூட். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் ஆவது தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பிரதீப் ரங்கநாதனே பாடவுள்ளார் என்பதால் இந்த பாடலின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் என்பதை விடவும் சென்சேஷன் பிரதீப் ரங்கநாதன் என்று தான் கூறவேண்டும். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டிராகன் படம் வசூல் மற்றும் விமர்சனத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் வசூலில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 150 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது என்றும், இது மட்டும் இல்லாமல், ஓடிடி பிசினஸ் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் என்று திரைத்துறையில் பேச்சுகள் அடிபடுகிறது.

குட்டி தனுஷ்: இவரைப் பலரும் தனுஷ் போல நடிக்கிறார். பார்ப்பதற்கு தனுஷ் போல ஒல்லியாகவும் இருக்கிறார் என்பதால் பலரும் அவரை குட்டி தனுஷ் என்று கூட அழைக்கிறார்கள். ஆனால் பிரதீப் ரங்கநாதன் தனது நடிப்பில் தனக்கென தனி பாணியை பின்பற்றி வருகிறார். இது மட்டும் இல்லாமல், இவர் தனது முதல் படமான கோமாளி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனது இரண்டாவது படமான லவ் டுடே படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல், அந்த படத்தில் அவரே நடிக்கவும் செய்திருந்தார். இவரது இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்த படத்திலேயே தனக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
படக்குழு: இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் டியூட். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் படத்தில் நடிக்கிறார்கள்.

இரண்டாவது பாடல்: படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கும்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலை பிரதீப் ரங்கநாதன் பாடி உள்ளார். மேலும் இந்த பாடலுக்கான புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சாய் அபயங்கர் பிரதீப் ரங்கநாதனுக்கு பாடல் சொல்லிக் கொடுக்க, பிரதீப் ரங்கநாதன் பாட முயற்சிக்கிறார். ப்ரோமோவை இவர்கள் காமெடியாக உருவாக்க முயற்சித்துள்ளதால், இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அடடே, அடுத்த சிவகார்த்திகேயனும் அனிருத்தும் உருவாகிட்டாங்க போலயே என்று செல்லமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் பலர் பிரதீப் ரங்கநாதனுக்கும் பல திறமைகள் இருக்கும் போலயே என்றும் கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











