துல்கர் சல்மான், மம்மூட்டி வீடுகளில் ரெய்டு.. ஆத்தாடி விடாம துரத்துறாங்களே.. விஷயம் பெரிதாகுமோ
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஆபரேஷன் நும்கோர் என்ற பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி செலுத்தாமல் வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்ததாக கூறி அந்த சோதனை நடத்தப்பட்டது. சூழல் இப்படி இருக்க இன்று துல்கர் சல்மான், பிருத்விராஜ், மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ஃபேமஸாக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்மூட்டியின் மகன் என்பது அனைவருமே அறிந்ததுதான். தமிழில் அவர் ஓகே கண்மணி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் லோகா திரைப்படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் பிரியர்: துல்கர் சல்மான் அடிப்படையில் ஒரு கார் பிரியர் ஆவார். அவரிடம் விதவிதமான உள்நாட்டு, வெளிநாட்டு கார்கள் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க பூட்டான் நாட்டு ராணுவத்தால் கைவிடப்பட்ட லேண்ட் க்ரூஸர்கள், லேண்ட் ரோவர்கள் உள்ளிட்ட சொகுசு கார்கள் குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு இந்தியாவுக்கு வரி கட்டாமல் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நாடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்த சுங்கத்துறை அலுவலர்கள் முடிவு செய்தார்கள்.

துல்கர் வீட்டில் ரெய்டு: அதன்படி கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஆபரேஷன் நும்கோர் என்கிற பெயரில் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சுங்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் துல்கரின் இரண்டு விண்டேஜ் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்னொரு காரும் ஐந்து நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்றாவதாக கைப்பற்றப்பட்ட கார் லக்கி பாஸ்கர் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த டாடா நிசான் பேட்ரோல் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் மட்டுமின்றீ கேரளா முழுவதும் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமலாக்கத் துறையினர் சோதனை: இந்நிலையில் துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை க்ரீன்வேஸ் சாலை, அபிராமபுரத்தில் இருக்கும் வீடுகள், அவரது தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மொத்தம் ஐந்து அதிகாரிகள் இந்த சோதனையை நடத்திவருகிறார்கள். மேலும் நடிகர் பிருத்விராஜ், மம்மூட்டி ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் இந்த ரெய்டு நடப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 17 இடங்களில்: அதுமட்டுமின்றி எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம், கோவை ஆகிய பகுதிகளில் இருக்கும் சில வாகன உரிமையாளர்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் என மொத்தம் 17 இடங்களில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் கொச்சி மண்ட்ல அமலாக்க துறை அதிகாரிகள் துணை ராணுவ படையினருடன் இந்த சோதனையை நடத்திவருகிறார்கள். இதனால் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











