பல வருட சிகிச்சை.. உதவி கேட்கும் 'என் உயிர்த் தோழன்' பாபு.. கண்ணீர் விடும் இயக்குனர் பாரதிராஜா!
சென்னை: உடல் நலமில்லாமல் பல வருடங்களாகச் சிகிச்சை பெற்று வரும் நடிகர் என் உயிர்த் தோழன் பாபுவை, இயக்குனர் பாரதிராஜா சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாரதிராஜா இயக்கத்தில், 1990 ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் படம், 'என் உயிர்த் தோழன்'.
இதில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவையே நடிக்க வைத்திருந்தார், பாரதிராஜா.

கட்சித் தொண்டன்
பாபுவே கதை, வசனத்தையும் எழுதி இருந்தார். இதில் தென்னவன், ரமா, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், சார்லி உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தில் பாபு, கட்சித் தொண்டனாக வாழ்ந்திருப்பார். படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் பாபுவின் நடிப்பு அப்போது பேசப்பட்டது.
விக்ரமனின் பெரும்புள்ளி
அடுத்து விக்ரமன் இயக்கிய, பெரும்புள்ளி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த பாபு, அடுத்து 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில், உயரமான இடத்திலிருந்து பாபு குதிக்கவேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பாபுவை எல்லோரும் எச்சரித்தனர்.

நானே குதிக்கிறேன்
டூப்பும் ரெடியானார். ஆனால், நானே குதிக்கிறேன் என்று நடிகர் பாபு குதித்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத அந்த அசம்பாவிதம் அப்போது நடந்துவிட்டது. டைமிங் மிஸ்ஸானதில் தவறி வேறு இடத்தில் விழுந்துவிட்டார், பாபு. இதில் அவருடைய முதுகெலும்பு நொறுங்கிவிட்டது.

தீவிர சிகிச்சை
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமாக்க முடியவில்லை. இன்றுவரை அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. படுத்தப் படுக்கையாகவே இருக்கிறார், பாபு. அவருக்கு பல நடிகர்கள் உதவி செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

இயக்குனர் பாரதிராஜா
இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும், 'என் உயிர் தோழன்' பாபுவை இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் சந்தித்து, நலம் விசாரித்துள்ளார். அவரிடம், பாபு உதவி கேட்கிறார். அதைக் கண்டு பாரதிராஜா கண்ணீர் விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











