மோதிரத்துடன் காதல் கடிதம்... ஏழு ஆண்டுகள் கழித்து காதல் கதையை வெளியிட்ட பகத் பாசில்
கொச்சி : நடிகர் பகத் பாசில் தமிழ், மலையாளம் என பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் மாலிக் படம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய மனைவியும் நடிகையுமான நஸ்ரியாவுடனான தன்னுடைய காதல் கதையை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

பிசியான நடிப்பு
நடிகர் பகத் பாசில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் சீ யூ சூன் மற்றும் ஜோஜி ஆகிய திரைப்படங்கள் அமேசான் பிரைமில் வெளியானது. இருள் திரைப்படம் நெட்பிளக்சில் வெளியானது. இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றன.

ஓடிடியில் வெளியாகும் மாலிக்
இந்நிலையில் அவரது அடுத்த படம் மாலிக் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. இதையொட்டி அவர் தனது பேஸ்புக் தளத்தில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மாலிக் ரிலீஸ் குறித்தும் நஸ்ரியாவுடன் தனது காதல் குறித்தும் அவர் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

பகத் பாசிலுடன் திருமணம்
தமிழில் நேரம், ராஜா ராணி ஆகிய படங்களின்மூலம் சிறப்பான கவனம் பெற்ற நஸ்ரியா, மலையாளத்திலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். தான் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் பகத் பாசிலை திருமணம் செய்து செட்டில் ஆனார். நடிப்பிலிருந்தும் ஒதுங்கினார்.

பகத் -நஸ்ரியா காதல்
இதனால் ரசிகர்களின் கடுப்பிற்கு ஆளானார் பகத் பாசில். பெங்களூர் டேஸ் படத்தில் நடித்தபோது தான் இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய காதல் கதையை வெளிப்படுத்தியுள்ளார் பகத் பாசில். இந்த படத்தின் சூட்டிங்கின்போது தான் நஸ்ரியாவிடம் மோதிரம் மற்றும் ஒரு கடிதத்துடன் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

நஸ்ரியாவிற்கு நன்றி
இந்த காதலை நஸ்ரியா உடனடியாக ஏற்கவில்லை என்றும் ஆனால் நஸ்ரியாவின் முயற்சியாலேயே தங்களது காதல் திருமணத்தில் முடிந்ததாகவும் பகத் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வருவதாகவும் தன்னை சிறப்பான ஒரு நபராக நஸ்ரியா மாற்றியுள்ளதாகவும் பகத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











