Bison: என்னால் மீண்டு வரமுடியவில்லை.. பைசன் படத்தை பாராட்டிய பிரபல இயக்குநர்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா, பசுபதி, அமீர், லால் நடித்திருக்கும் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், படத்தை தியேட்டரில் பார்த்த பிரபல இயக்குநர் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.
நடிகர் விக்ரமனின் மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இப்படத்தில், துருவ் விக்ரம் மற்றும் மேகா சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். ஆதிதியா வர்மா படத்தை தொடர்ந்து அப்பாவுடன் சேர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. மகான் படம் ஓடிடியில் வெளியான போதும், துருவ் விக்ரமின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அந்த படத்தை தொடர்ந்து, துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் கபடி வீரராக நடித்துள்ளார்.

பைசன் திரைப்படம்: 1990களில் தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடியில் நிலவிய சமூக சிக்கல்களை மையமாக வைத்து வரலாற்று உண்மைகளை கருப்பொருளாக கொண்டு ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறார். மணத்தி கணேசன் என்ற வீரர் அர்ஜுனா விருது பெற்றவர். கடுமையான சாதிய சிக்கல் நிறைந்த சமூக சிக்கலில், அவர் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டு அவற்றை மீறி அவர் எப்படி மாநில, தேசிய அளவில் வீரராக தேர்வு செய்யப்பட்டார் என்பதையும், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தங்க பதக்கத்தை வென்றார் என்பது தான் பைசன் படத்தின் கதை.
லிங்குசாமி பாராட்டு: படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி வரும் நிலையில், பிரபல இயக்குனர் லிங்குசாமி பைசன் படத்தை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பைசன் படத்தை நான் மிகவும் ரசித்தேன். மாரி செல்வராஜ் ஏற்படுத்திய அந்த உலகத்திலிருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை. படத்தின் வசனங்கள், படத்தை அவர் கையாண்ட விதம், படத்தில் நடித்த அமீர், பசுபதி, லால் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்திருந்தனர். துருவ் விக்ரமின் கடினமான உழைப்பை படத்தில் பார்க்க முடிந்தது.இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு உயிர்ப்பை கொடுத்துள்ளார். இந்த படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











