வெள்ளை மலையாள நடிகைகளை தேர்ந்தெடுப்பது ஏன்? மாரி செல்வராஜின் விளக்கம்.. இதுக்கு அது பதில் இல்லையே?
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் தனது படங்களில் தொடர்ந்து வெள்ளை நிற மலையாள நடிகைகளையே தேர்வு செய்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை பேசுகிறேன் என சொல்லும் நீங்கள் ஏன் இப்படி ஓரவஞ்சனை செய்கிறீர்கள் என்றும் நல்ல அழகான கருமை நிற தமிழ் நடிகைகள் யாரும் உங்களுக்கு கிடைக்கவில்லையா? என்கிற கேள்வி அவரிடமே சமீபத்தில் முன் வைக்கப்பட்டது.
அந்த கேள்விக்கு உடனடியாக நோ கமெண்ட்ஸ் என சொல்லாமல், அவர் அளித்த பதில் தான் தற்போது அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படம் டியூட் படத்துடன் தமிழ்நாட்டில் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் போட்டிப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
50 கோடி வசூல் சாத்தியம்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். வர்மா, ஆதித்ய வர்மா என அர்ஜுன் ரெட்டி படத்தை 2 முறை ரீமேக் செய்தும் துருவ் விக்ரமுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதே போல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பா சியான் விக்ரம் உடன் இணைந்து நடித்த மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், அந்த படமும் தனது படம் இல்லை என்று சொல்லிவிட்டார். துருவ் விக்ரமின் கூற்றின் படி அவரது முதல் படமாக கருதப்படும் பைசன் திரைப்படம் இதுவரை 37 கோடி ரூபாய் வசூலை உலகளவில் அள்ளியிருப்பதாக கூறுகின்றனர். அடுத்த வாரத்திற்குள் 50 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மலையாள நடிகைகள்: பரியேறும் பெருமாள் படத்தில் தெலங்கானாவை சேர்ந்த கயல் ஆனந்தியை ஹீரோயினாக நடிக்க வைத்தார். தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் மலையாள நடிகையான ரஜிஷா விஜயனை நடிக்க வைத்தார். வாழை படத்தில் மீண்டும் மலையாள நடிகையான நிகிலா விமலை நடிக்க வைத்திருந்தார். மீண்டும் பைசன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நிமிஷா விஜயன் என மலையாள நடிகைகளையே ஹீரோயினாக்கி உள்ளார். வெள்ளை நிற நடிகைகளுக்கு கருப்பு பெயின்ட் அடித்து நடிக்க வைக்க என்ன காரணம்? இது தொடர்பாக உங்கள் மீது சில சர்ச்சைகள் கிளம்புகிறதே என்கிற கேள்வியை சமீபத்தில் ஒருவர் எழுப்பினார்.
மாரி செல்வராஜின் பதில்: திட்டமிட்டு தான் அப்படி செய்வது கிடையாது என்றும் ஊனமுற்றவர்களை பற்றிய படங்களை எடுக்கும் போது ஊனமுற்றவர்களை நடிக்க வைத்து துன்புறுத்த முடியுமா? அது போலத்தான் அந்த கதாபாத்திரத்துக்கு யார் தன்னை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்களை வைத்துத் தான் படம் பண்ணுகிறேன் என்றார்.
இதுக்கு அது பதில் இல்லை: மாரி செல்வராஜின் விளக்கத்தை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இதுக்கு அது பதில் இல்லை என்றும் தமிழ்நாட்டில் திறமையான நடிகைகளே இல்லையா என்றும் வெள்ளை கறுப்பின நடிகர்களுக்கு ஹாலிவுட் தரும் முக்கியத்துவம் கூட தமிழ்நாட்டில் இல்லையே என விளாசி வருகின்றனர். பைசன் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், அதற்கு எதிராக மாரி செல்வராஜ் மீதான விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











