twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனைத்து சினிமா வேலைகளும் நிறுத்தம்: 7ம் தேதி முதல் முழுமையான ஸ்ட்ரைக்- பெப்சி

    By Shankar
    |

    Strike
    சென்னை: பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாலும், போட்டி தொழிலாளர் சங்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் உள்ளதாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக வருகிற 7-ந் தேதி முதல் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் நிறுத்தப்படும் என்று சினிமா தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம், ஊதியக்குழு தலைவர் அமீர், டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்கள்.

    அதில் கூறியிருப்பதாவது:

    கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக 'பெப்சி'க்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே நடைபெற்று வரும் ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால், தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர் நல ஆணையத்திடம் முறையிட்டு, எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். 'பெப்சி'யும், தொழிலாளர் நல ஆணையத்தின் அழைப்பை ஏற்று, கலந்துகொள்ள ஒத்துழைப்பு அளித்தது.

    பேச்சுவார்த்தை

    அதைத் தொடர்ந்து, தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் முன்னிலையில் தயாரிப்பாளர் சங்கமும், 'பெப்சி'யும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கியது. கூடுதல் ஆணையர், தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஊதியத்தையும், தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளையும் சமமாகவே பெற்றுத்தந்தார்.

    இருந்தபோதிலும், பெரும் எதிர்பார்ப்புடன் தொழிலாளர் நல ஆணையத்திடம் வந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு சற்று ஏமாற்றம் அளித்த காரணத்தால், சரிவர ஒத்துழைப்பு தர மறுத்தது. இந்த நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தைக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினர் யாரும் வரவில்லை. இனிமேல் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளமாட்டோம் என்றும் கடிதம் கொடுத்துள்ளனர்.

    7-ந் தேதி முதல் முழுமையான 'ஸ்டிரைக்'

    மேலும், புதிய தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தே தீருவோம் என்று சபதம் ஏற்று, அதற்கான வேலைகளில் தயாரிப்பாளர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து செய்துவரும் நடவடிக்கையை கண்டித்தும், 23 சங்கங்களில் உள்ள 23 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டும், பெப்சி' முதல் முறையாக வருகிற 7-ந் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங், டப்பிங் வேலைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவை பொதுக்குழுவின் ஒப்புதலுடன் அறிவிக்கிறது.

    வெளிiர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் இன்றைய தினத்தில் இருந்து 3 நாட்களுக்குள் படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    23 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து, உண்ணாவிரதம் மற்றும் ஊர்வலம், அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என்றும் உறுதி அளிக்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தில் வழக்கு

    இதற்கிடையே, சென்னை உரிமையியல் கோர்ட்டில் 'ஜி மாஸ் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.முருகன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், கவுரவ செயலாளர்கள் தேனப்பன், முரளி, பொருளாளர் தாணு, துணைத்தலைவர்கள் தியாகராஜன், சிவா ஆகியோரை பிரதிவாதியாக வழக்கில் அவர் சேர்த்துள்ளார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவின் அனுமதி பெறாமல், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் (பெப்சி) சம்பள திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை பிரதிவாதிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இடைக்கால தடை

    இந்த வழக்கை சென்னை 11-வது உரிமையியல் கோர்ட்டு உதவி நீதிபதி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், பேச்சுவார்த்தை நடக்கும்போது சம்பளம் தொடர்பான கோரிக்கைகளை தன்னிச்சையாக பிரதிவாதிகள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும், அதனால் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்றும் சந்தேகம் இருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே பெப்சியுடனான தொடர் பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவின் அனுமதி பெறாமல் பிரதிவாதிகள் பங்கேற்பதற்கு 13-ந் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    FEFSI, the strong workers union in Tamil cinema has announced an indefinite full fledged strike from April 7th against the producers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X