twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃபெப்சின்னா என்ன? தமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை?

    By Shankar
    |

    வெள்ளைத் திரையெல்லாம் நீதியும் நியாயமும் பேசுகிற திரைப்படங்களின் பின்னணியில் வேலை செய்கிற ஃபெப்ஸிக்காரங்களுக்கும் நீதி, நியாயம், நேர்மைக்கும் உள்ள தூரம்... சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை விட அதிகமாக இருக்கலாம். அவங்க பாஷையில நீதி, நியாயம், நேர்மைக்கெல்லாம் வேற வேற பேரு இருக்கு.

    அப்படி என்னதான் சொல்றாங்க இந்த ஃபெப்சிக்காரங்க. கொஞ்சம் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.

    சினிமா ஒரு தொழில். அதுல நிறைய வேலைகள் இருக்கு. சாப்பாடு போடுறதுல இருந்து சலவை செய்றது வரை... உடல் உழைப்பு வேலைகளும் இருக்கு. அதைவிட உசத்தியாக சொல்லப்படுற உக்கார்ந்து யோசிக்கிற வேலைகளும் இருக்கு.

    FEFSI issue.. a detailed Story

    இந்த வேலையை செய்றவங்க 24 வகையா இருக்காங்க. அதாவது லைட் மேன், ஆர்ட் அஸிஸ்டெண்ட, காஸ்ட்யூமர், மேக்கப் போடுறவங்க, டான்ஸ் ஆடுறவங்க இப்படி 24 வகை வேலை. அவங்க எல்லாருக்கும் தனித்தனியா சங்கம் இருக்கு. தனித்தனி சம்பளமும் இருக்கு. இந்த எல்லா சங்கமும் சேர்ந்த ஒரு அமைப்புதான் ஃபெப்ஸி. அதாவது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம். வழக்கம் போலவே எளியவர்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட சங்கம்தான் இந்த சங்கமும். இந்த இந்த வேலை செய்றவங்களுக்கு இவ்ளோ சம்பளம் முடிவு செய்து நல்லா போயிக்கிட்டிருந்தது. ஆனா, இந்த எளியவர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்துகிட்டு வலியவர்களான முதலாளிகள் பலருக்கு கிறுக்குப்பிடிக்க வச்சிருக்காங்க.

    வச்சிக்கிட்டே இருக்காங்க. எப்டி?

    இந்த மாதிரி சினிமா சம்பந்தமான வேலைகளை செய்யும்போது அதுக்காகவே காத்துக்கிடக்கிற இவங்களை வச்சி தான் செய்யணும், அதே மாதிரி படம் வெளியாகுறதுக்கு முன்னாடி... இவங்க வேலை செஞ்சதுக்கான கூலியையும் கொடுத்துறணும். இதுதான் பல்லாண்டு கால நடைமுறை.

    அதாவது 5 பேரு சேர்ந்து ஒரு இடத்துல சினிமா வேலை செஞ்சா, (உதாரணத்துக்கு எடிட்டிங்னு வச்சிக்குங்க) அவங்களுக்கு டீயும் சாப்பாடும் அவங்களா வாங்கிக்கக்கூடாது. இவங்க ஆள்களை வச்சித்தான் வாங்கணும். 5 பேருக்கும் ஒருநாள் டீ செலவும், சாப்பாட்டு செலவும் ஆயிரம் ரூபா வந்துச்சுன்னா, அதை வாங்கிக் கொடுத்தவருக்கு 750 ருபாய்க்கு மேல ஒருநாள் சம்பளம் கொடுக்கணும். சரி, போகட்டும்னு எல்லாரும் அவங்களை அட்ஜஸ்ட் பண்ணித்தான் காலத்தை தள்ளுனாங்க. ஆனாலும் வருசா வருசம் சம்பளம் கூட்டிக்கிட்டே இருக்கவே... பிரச்சினை திசை திரும்பிருச்சு.

    எங்களுக்கு இவ்ளோ சம்பளம் தந்தே தீரணும்னு ஒரு பட்டியலை கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீட்டுனாங்க. இது புதிய சம்பள கொள்கைக்கான பட்டியலாம். அதுவரை இவங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைஞ்ச தயாரிப்பாளர்கள், அதுக்கப்புறம் பெரிய கம்பியா நீட்டிட்டாங்க. சம்பள உயர்வும் கிடையாது, ஒண்ணும் கிடையாதுன்னு இவங்க முரண்டு பிடிக்க பெரிய களேபரம்.

    உதாரணத்துக்கு திருநெல்வேலிப்பக்கம் தோப்பும் துரவுமா இருக்கிற ஒருத்தருக்கு, யாரோ ஒரு கோடம்பாக்கத்து புண்ணியவான் ஆசை காட்டப்போய் சினிமா எடுக்கலாம்னு நெனைச்சி சென்னைக்கு வரார். அவரோட தோட்டத்துல எல்லாமே வெளையுது. டெய்லி 100 பேருக்கு மேல சாயங்காலமானா அந்த அண்ணாச்சிக்கிட்ட சம்பளம் வாங்கிற அளவுக்கு விவசாய வேலைக்காரங்க இருக்காங்க. பொங்கல் தீபாவளி மாதிரி நல்ல நாள் எதும் வந்திச்சின்னா, தென்னந்தோப்புல ஒரு ஓரமாக பெரிய அண்டாவுல ஊரு மொத்தத்துக்கும் சமையல், கோழிக்கறின்னு தடபுடல் தான்.

    நம்ம ஊரு, தோப்பு இங்கயே படத்தை எடுத்துறலாம்னு நெனைக்கிறார் அவர். சரின்னு கௌம்புனா, இங்க சென்னையில இருந்து ஒரு கூட்டம் வராங்க. எல்லா வேலைக்கும் எங்க ஆட்கள்தான் வருவாங்க, அவங்கவங்களுக்கு தனித்தனி சம்பளம் இருக்கு. அதைக் கொடுத்தே ஆகணும். பட்டியல் நீண்டுகிட்டே போகும். எங்க ஆள்களை கூப்பிடாம நீங்க படம் எடுக்கக்கூடாது. எடுக்க முடியாதுன்னு ஊருல கட்டப்பஞ்சாயத்து பண்ற அண்ணாச்சிக்கே கண்ணுல தண்ணி கொட்டுற அளவுக்கு இவங்க கொடுப்பாங்க டார்ச்சர்... பாவம் அவர் குழம்பிப்போய் போன பணம் போகட்டும், இனிமே சினிமாவே வேண்டாம்னு நடுத்தோப்புக்குள்ள நாற்காலி போட்டு உக்கார்ந்து விவசாயத்துக்கே திரும்பி போயிருவார். ஏன்னா, எதிர்த்துக் கேட்க முடியாதே.

    அய்யா அவர் கிட்ட தோப்பு இருக்கு, அரிசி இருக்கு, பாத்திரம் இருக்கு, சமைக்கவும் பரிமாறவும் ஆள்களும் இருக்காங்க. அட அவ்வளவு ஏங்க... தீப்பெட்டியும் அதைக்கொளுத்தி அடுப்பு பத்தவைக்க தெரிஞ்சவங்களும் இருக்காங்க. அப்புறம் நீங்க தான் வந்து அடுப்பு பத்தவைக்கணும்னு எதுவும் சட்டம், கிட்டம் இருக்கா என்ன?

    வேலை செய்றவங்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப சாப்பாடு போட்டுக்கிறார், சம்பளம் குடுத்துக்கிறார்.... நாங்கதான் வருவோம், நாங்க கேட்கிற சம்பளத்தை தந்தே தீரணும்னு சொல்றதெல்லாம் எந்த ஊரு நியாயமய்யா...?
    சரி அவங்க ரூட்ல போயே சொல்வோம்,

    கஷ்டப்பாடு பட்டு ஒரு பொண்ணை பார்த்து கடன் கிடன் வாங்கி நீங்க ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டீங்க. ஒரு குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்படுறீங்க. அந்தக் குழந்தை தான் ஒரு சினிமான்னு வச்சிப்போம்.

    அந்தக் குழந்தையை உங்க வருமானத்துக்கு ஏற்ற தரமான மருத்துவமனையில் மனைவியை சேர்த்து பெத்துக்க வைப்பீங்க. அப்புறம் உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி, வீடு, உணவு, உடை, உறைவிடம் அந்தக் குழந்தைக்கு ஏற்பாடு செய்வீங்க. அப்புறம் ஸ்கூல், படிப்பு எல்லாமே உங்க வருமானத்துக்கும் விருப்பத்துக்கும் சௌகர்யத்துக்கும் உட்பட்டு உங்களால முடிஞ்சதை செய்வீங்க. எல்லாரும் அதைத்தான் செய்வாங்க.

    இப்ப உங்க கிட்ட ஒரு கூட்டம் வந்து, உங்க மனைவியை கண்டிப்பா இந்த மருத்துவமனையிலதான் சேர்க்கணும். எங்க சார்பாக நாலு நர்சுகள் வருவாங்க. ஆளுக்கு ரெண்டாயிரம் கொடுத்துரணும். அதுக்கப்புறம் குழந்தை பிறந்த பின்னாடி வீட்டுக்கு கூட்டிட்டு போறது எங்க கார்ல தான் கூட்டிட்டு போகணும். அதுக்கு எங்க ஆளுதான் டிரைவரா வருவாரு. காருக்கும், டிரைவருக்கும் சேர்த்து இத்தனை ஆயிரம் தந்துரணும். வேற பிரைவேட்ல கார், ஆட்டோ பிடிச்சீங்க உங்க குழந்தை அம்புட்டுதான்னு சொல்றாங்க. பொண்டாட்டி குளிக்கிறதுக்கு வெந்நீர், குழந்தையை குளிப்பாட்டுறதுக்கெல்லாம் வேற வேற சம்பளம் இருக்குன்னு சொல்றாங்க.
    அதோட விட்டா பரவாயில்லையே, குழந்தை வளர்ந்த உடனே கண்டிப்பா நாங்க சொல்ற பள்ளிக்கூடத்துல தான் சேர்க்கணும். இவ்ளோ ஃபீஸ்னு நாங்களாவே ஃபிக்ஸ் பண்ணிருக்கோம். உங்களுக்கு வேற சாய்ஸே கிடையாது. நாங்க சொல்ற ஃபீஸை கட்டியே ஆகணும். நாங்க சொல்ற ஸ்கூல்ல தான் படிக்க வச்சாகணும். டெய்லி எங்க ஆள்கள் டிரைவரா இருக்குற கார்ல தான் வந்தாகணும். மீறி போனிங்கன்னா... உங்க குழந்தையை படிக்கவே விடமாட்டோம்னு நாக்கை துருத்திக்கிட்டு உங்ககிட்ட யாராவது வந்து நின்னா விடுவீங்களா?

    ஆசையிலயோ, அல்லது ஆர்வத்திலயோ, அல்லது கலை தாகத்துலயோ பணத்தை போட்டு சினிமா எடுக்க வர்றவங்களுக்கு அந்த சினிமா அவங்க குழந்தை மாதிரிதான். முக்கியமான விஷயம், அந்த குழந்தை அவங்களோட குழந்தை. அந்தக் குழந்தைக்கு பேர் வைக்கவும் குளிப்பாட்டி விடவும் டிரெஸ் போட்டு விடவும் அவங்களுக்கு தெரியும். அல்லது குளிப்பாட்டாமலே கூட விடுறாங்க? நீங்க வந்து நாங்கதான் செய்வோம்னு மல்லுக்கட்டுறது எந்த வகை நியாயம்?

    சரி, வயித்துப் பொழைப்பு, எங்களுக்கு வேற தொழில் தெரியாதுன்னு நீங்க செண்டிமெண்டலா சொன்னாலும், உலகத்துல யாருக்குத்தான் வயிறு இல்ல, யாருக்குத்தான் பொண்டாட்டி, புள்ள இல்ல. வாழ்க்கை இல்ல. அவ்ளோ பெரிய பில்டிங் கட்ட எவ்ளோ பேரு உழைக்கிறாங்க... அவங்க எல்லாம் இப்படிதான் கட்டப்பஞ்சாயத்து பண்றாங்களா?, சாக்கடை சுத்தம் பண்றவங்களில் ஆரம்பிச்சு, கக்கூஸ்ல மலம் அள்றவங்க, வயித்துக்கு சோறு போடுற விவசாய வேலை செஞ்சி படாத படுறவங்க நாட்டுல எவ்ளோ பேர் இருக்காங்க. அப்டி பார்த்தா, அவங்க செய்ற வேலையை விட, நீங்க செய்ற வேலை ஒண்ணும் அவ்ளோ பெரிய வேலையில்லை.

    அப்டி உங்களுக்கு பொழப்பு பிரச்சினைன்னா அரசாங்கத்துக்கிட்ட போயி நில்லுங்க. மாற்றுத் தொழில் செய்ங்க. வேற வேலை கேளுங்க. அதை விட்டுட்டு வேற மாதிரி மிரட்டல், படப்பிடிப்பு நிறுத்தல் செய்றதெல்லாம் கற்காலத்துல கூட நியாயமா இருந்திருக்க வாய்ப்பே இல்ல.

    அவனவன், கிராமம் கிராமமா ஷார்ட் பிலிம் எடுக்கிற காலம் இது. ஐ போன்லயும் ஸ்மார்ட் போன்லயும் படம் எடுத்து கொட்டாம்பட்டில இருந்து குளத்துப்பட்டி வரை அவனவன் மொபைல்ல அம்பது ஷார்ட் பிலிம் வச்சிக்கிட்டு திரியிற டிஜிட்டல் யுகம் இது. ஒரு கிராமத்துக்கு அம்பது டைரக்டர் வந்துட்டாங்க. அவங்களே படம் எடுத்து அவங்களே மச்சான் மாமன் மச்சினி கூட உட்கார்ந்து பாத்துக்கிறாங்க. விரைவில் அவங்களுக்கும் டெக்னாலஜி தெரிஞ்சி அவங்க அவங்க எடுக்கிற சினிமாக்களை அவங்க ஊர் தியேட்டர்ல மட்டும் அவங்களே ஸ்க்ரீன் பண்ணிக்க போறாங்க.

    மாவட்ட சினிமா, தாலுகா சினிமா, நகர சினிமா, வட்ட சினிமா, பஞ்சாயத்து சினிமா, வார்டு சினிமான்னு... அங்கங்க சினிமா எடுத்து அங்கங்க வெளியிடுவதும் வியாபாரம் பண்றதும் விரைவில் வரப்போகுது.

    உங்க ஆர்வக் கோளாறுல நீங்க கௌம்பி போயி, ஐபோன் காரனையும், ஸ்மார்ட் போன் காரனையும், ரெட் கேமராக்காரனையும் மிரட்டுனாலும் ஆச்சர்யம் இல்ல.
    இளையராசாவும், விஜயசேதுபதியும் தேவைன்னா சினிமா எவ்வளவு விலை கொடுத்து வேணா அவங்களோட திறமையை வாங்கும். அதே நேரம் இன்னொரு பக்கம் என் திறமைக்கு ஒரு வாய்ப்பு தாங்க, அப்டி வாய்ப்பு தரதுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்னு சொல்லி வரிசைக்கட்டி நிக்குற கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே இருக்குதுங்கிறது நீங்க அறியாத சங்கதியும் இல்ல.

    திறமைக்காரன் எங்க இருந்தாலும் அவனுக்கு மரியாதை கண்டிப்பா இருக்கும், அவன் திறமைக்கு தேவையும் இருக்கும்.

    மற்றபடி உலகத்தின் எந்த சட்டத்திலும் நியாயம் என்று சொல்ல முடியாத, எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லுபடியாகாத உங்கள் சட்ட திட்டங்களையும் கட்ட பஞ்சாயத்துக்களையும் மூட்டை கட்டி விட்டு அனைவரும் ஏற்றுக்கொள்கிற அடுத்த கட்டத்தைப்பற்றி ஆரோக்கியமாக யோசிக்கவேண்டிய நேரமிது என்பதை உணருங்கள்.

    பின்குறிப்பு: தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவரான பாலுமகேந்திரா மறைவின்போது எழுதப்பட்ட கட்டுரை இது.

    இந்த கட்டுரைக்கும் பாலுமகேந்திராவுக்கும் என்ன சம்பந்தம்னு நினைக்கிறவங்களுக்கு ஒரு சின்ன தகவல். இந்த பிரச்சினை முதன் முதல்ல ஆரம்பிச்சது பாலுமகேந்திராவின் ஷுட்டிங்லதான். ஒரு டைரக்டர் சொல்ல வேண்டிய பேக்கப் என்ற வார்த்தையை அப்போது பெப்ஸி தலைவரா இருந்தவர் சொல்லி பாலுமகேந்திராவின் ஷுட்டிங்கை பாதியிலேயே நிறுத்தினார். அதனால் பெரிய பிரச்சினையாகி, பல மாதங்கள் தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கால் முடங்கியது என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.

    -முருகன் மந்திரம்

    English summary
    Here is the detailed story of FEFSI Vs Producers Council issue
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X