For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சினிமாவுக்கு சிவந்தி ஆதித்தன் செய்த உதவிகளை உயிருள்ளவரை மறக்க மாட்டோம்- தயாரிப்பாளர்கள்

  By Shankar
  |

  சென்னை: 'சினிமா துறைக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் செய்த உதவிகளை உயிருள்ளவரை மறக்க மாட்டோம்' என்று பட அதிபர்கள் இரங்கல் செய்தி விடுத்து இருக்கிறார்கள்.

  'தினத்தந்தி' அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் மறைவையொட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிவந்தி ஆதித்தன் அவர்களின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

  அதன்பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

  ''எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற சொல்லுக்கு இலக்கணமானவர், 'தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள்.

  பள்ளி செல்லாதவர்கள் கூட தினத்தந்தியால் படிப்பறிவு பெற்றேன் என்பதை பலர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். பத்திரிகை துறைக்கு மட்டுமல்ல, விளையாட்டுத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ் திரைப்பட துறைக்கும் அவர் ஆற்றிய பணி மகத்தானது. இந்த கலைத்துறைக்கு நெருக்கடி வந்த காலங்களில் எல்லாம் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி பிரச்சினைகளை தீர்க்க வகை செய்யும் செய்திகளை, ஒரு எழுத்துக்கூட யார் மனதையும் புண்படுத்தாத வகையில் அச்சுக் கோர்த்து, அரங்கேற்றியவர் அவர்.

  பாதிக்கட்டணத்தில் விளம்பரம்

  பாதிக்கட்டணத்தில் விளம்பரம்

  பத்திரிகையின் மூலப் பொருட்களின் விலை எவ்வளவு ஏறினாலும், ஏறத்தாழ பதினைந்து வருட காலம் தயாரிப்பாளர்களின் திரைப்பட விளம்பரங்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை விளம்பர கட்டணத்தை குறைத்து, அதை இன்று வரை நடைமுறைப்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  திரைப்பட செய்திகளை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சென்று ரசிகர்களை திரட்டி திரையரங்குக்கு வரச்செய்து, வசூலை அதிகரிக்க செய்து தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் தொழிலை செழிக்க செய்தவர், பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள்.

  மறக்க மாட்டோம்

  மறக்க மாட்டோம்

  மீடியா வராத காலத்திலேயே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் முகங்களை தமிழ் மக்களுக்கு ‘தினத்தந்தி'யின் மூலம் அறிமுகம் செய்ய ஆற்றிய பத்திரிகை பணியை நாங்கள் யாரும் உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம்.

  இந்த மாமனிதரை இழந்து வாடும் அவரது மகன் தினத்தந்தியின் இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள், தினத்தந்தி குழும ஊழியர்கள், ஊடகத்துறையை சார்ந்தவர்கள் மற்றும் விளையாட்டுத்துறையினர் ஆகியோருடன் சேர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களாகிய நாங்களும் துன்பத்தை பகிர்ந்து கொண்டு தமிழ் திரையுலகம் சார்பில் எங்கள் கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.''

  -இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

  பிலிம்சேம்பர் இரங்கல்

  பிலிம்சேம்பர் இரங்கல்

  தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) சார்பில் ‘தினத்தந்தி' இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனுக்கு அனுப்பப்பட்டுள்ள இரங்கல் கடிதம்:

  ‘‘உங்கள் தந்தை பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தோம். அவர் எல்லா துறைகளிலும், குறிப்பாக சினிமா துறையிலும் மிகவும் பிரபலமானவர்.

  அவருடைய மறைவு சினிமா துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு.உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இந்த ஈடு செய்ய முடியாத பேரிழப்பை தாங்கும் சக்தியையும், நம்பிக்கையையும் தரவேண்டும் என்று வேண்டுகிறோம். நம்மை விட்டு பிரிந்து சென்ற ஆன்மா சாந்தி அடையட்டும்.''

  English summary
  Film industry paid its rich tribute to media baron Dr Sivanthi Adithyan and remembered his support to the industry growth.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X